Published:Updated:

மகாராஷ்டிராவில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்க முயற்சி... தமிழகத்தில் திமுக அரசின் நிலை என்ன?

ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்க முயற்சி!
News
ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்க முயற்சி!

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு இருக்கிறது. ஆளுநரின் அந்த அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசு சட்டம் இயற்றியுள்ளது. இது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

மாநிலங்களில் பல்கலைக்கழங்களின் வேந்தராக ஆளுநர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் ஆளுநர்களுக்கு இருக்கிறது. இதில், பல மாநிலங்களில் சர்ச்சை எழுவது வழக்கமாக இருக்கிறது. குறிப்பாக, மத்திய அரசின் பிரதிநிதியாக ஆளுநர்கள் செயல்பட்டுவரும் நிலையில், எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இத்தகைய பிரச்னைகள் எழுகின்றன. உதாரணமாக, மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு போன்ற எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இந்தப் பிரச்னை நிலவுகிறது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

தமிழகத்தில் இதற்கு முன்பாக பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக இருந்தபோது பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் கடும் சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்ட விவகாரம் பெரும் பிரச்னையாக மாறியது. தற்போது தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் தெரிவித்ததாகச் சொல்லப்படும் சில கருத்துகள் விவாதத்துக்கு உள்ளாகின.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதற்கிடையே, சிவசேனா தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் மகாராஷ்டிராவில் பகத்சிங் கோஷியாரி ஆளுநராக இருக்கிறார். அங்கு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருந்துவரும் நிலையில், துணைவேந்தர்களை நியமிப்பதற்கான ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசு பறித்துள்ளது. இதற்கான சட்ட மசோதா, பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

`மகாராஷ்டிரா பொதுப் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2016’-ல் அந்த மாநில அரசு திருத்தம் கொண்டுவருகிறது. அதற்கான மசோதா சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேடல் குழுவால் பரிந்துரைக்கப்படும் ஐந்து பெயர்களிலிருந்து ஒரு பெயரை துணைவேந்தர் பதவிக்கு ஆளுநர் தேர்வுசெய்வார் என்பது இதுவரையிலான நடைமுறை.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

ஆனால், இந்த மசோதாவின்படி, தேடல் குழு ஐந்து பேர்கொண்ட பட்டியலை மாநில அரசிடம் அளிக்க வேண்டும். அதிலிருந்து இரண்டு பெயர்களை ஆளுநருக்கு மாநில அரசு அனுப்பும். அந்த இருவரில் ஒருவரை துணைவேந்தர் பதவிக்கு ஆளுநர் தேர்வுசெய்ய வேண்டும். அந்த நபர், 30 நாள்களுக்குள் துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும். தேடல் குழு பரிந்துரைக்கும் பெயர்ப் பட்டியலுக்கு அரசு ஒப்புதல் அளிக்கவில்லையென்றால், அதே தேடல் குழுவோ அல்லது புதிய தேடல் குழுவோ, புதிதாக ஐந்து நபர்களின் பெயர்களை அளிக்க வேண்டும்.

இதற்கு முன்பு, தேடல் குழு ஐந்து பெயர்கள் அடங்கிய பட்டியலை வேந்தருக்கு அனுப்பும். அவற்றுக்கு வேந்தர் ஒப்புதல் அளிக்கவில்லையென்றால், புதிய பெயர்ப் பட்டியலை அளிக்குமாறு அதே குழுவிடமோ அல்லது புதிய குழுவிடமோ கோருவதற்கு வேந்தருக்கு அதிகாரம் உண்டு. மேலும், மகாராஷ்டிராவில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா மூலமாக, பல்கலைக்கழக இணை வேந்தர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. வேந்தர் இல்லாதபட்சத்தில், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு இணை வேந்தர் தலைமை வகிப்பார். பல்கலைக்கழகத்திலிருந்து கல்வி மற்றும் நிர்வாகம் தொடர்பான தகவல்களை இணை வேந்தரால் கேட்டுப்பெற முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்தகைய மாற்றங்களுடன் கொண்டுவரப்படும் மசோதாவுக்கு எதிர்க் கட்சியான பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. மசோதாவை சட்டமன்றத் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்தை பா.ஜ.க-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்மொழிந்தார். ஆனால், குரல் வாக்கெடுப்பின் மூலம் அது நிராகரிக்கப்பட்டது. பின்னர், கடும் அமளிக்கு மத்தியில் மசோதா நிறைவேறியது. துணைவேந்தர்களை நியமிப்பதற்கான ஆளுநரின் அதிகாரத்தைப் பறிப்பதற்கான சதி என்று விமர்சித்துள்ள ஃபட்னாவிஸ், இதற்கு எதிராக மாநில அளவில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாகவும், நீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தை எடுத்துச்செல்லப்போவதாகவும் கூறியுள்ளார்.

தேவேந்திர ஃபட்னாவிஸ்
தேவேந்திர ஃபட்னாவிஸ்

இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஸ்யாமிடம் பேசினோம். ``ஜெயலலிதா முதல்வராகவும் சென்னாரெட்டி ஆளுநராகவும் இருந்தபோது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருக்க முடியாது என்கிற ஒரு சட்ட மசோதாவை 1995-ம் ஆண்டு ஜெயலலிதா கொண்டுவந்தார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக ராஜ்பவனுக்கு வந்தது. அதற்கு ஆளுநர் எப்படி ஒப்புதல் அளிப்பார்? அதேதான் இப்போது மகாராஷ்டிராவிலும் நடந்துகொண்டிருக்கிறது.

சட்டமன்றத்தில் தீர்மானம் போடலாம். ஆனால், அந்தத் தீர்மானத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பல்கலைக்கழக சட்டத்தைத் திருத்த வேண்டுமென்றால், அது மத்திய அரசால்தான் முடியும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தனித் தனி சட்டம் இருக்கின்றன. அதில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றால், ஆளுநரின் ஒப்புதலுக்குத்தான் போக வேண்டும். ஆகையால், அது நிறைவேறாது.

மகாராஷ்டிரா அரசு கொண்டுவந்துள்ள மசோதா நிலைக்கத்தக்கது அல்ல. தேடல் குழு ஐந்து பேர்கொண்ட பட்டியலை அரசிடம் அளித்து, அதில் இரண்டு பெயர்கள் ஆளுநரிடம் அளிக்கப்படும் என்பது சரியான நடைமுறை அல்ல. மூன்று, ஐந்து, ஏழு என ஒன்றைப்படையில்தான் பட்டியல் அமைக்கப்படும். இரட்டைப் படையில் வரவே முடியாது. எனவே, அதிலும் இந்த மசோதா அடிவாங்கும். இதன் மூலமாக அந்த மாநில அரசு அவமானப்படக்கூடிய நிலை ஏற்படும்.

தராசு ஸ்யாம்
தராசு ஸ்யாம்

தமிழகத்திலும் இதுபோன்ற பிரச்னை இருக்கிறது. ஆனால், தற்போதைய சூழலில் ஆளுநரை தி.மு.க பகைத்துக்கொள்ளாது. மத்திய அரசுடன் தி.மு.க அரசு இணக்கமாகத்தான் போகிறது. மருத்துவக் கல்லூரிகளைத் திறந்துவைப்பதற்கு அ.தி.மு.க ஆட்சியில் பிரமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஒரு வருட காலத்துக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து அதற்கு பதில் வரவில்லை. இப்போது, தி.மு.க ஆட்சியில் அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் வருகிறார். இருவருக்கும் ஏதோ ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது. எனவே, துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரங்களில், மகாராஷ்டிராவைப்போல தி.மு.க அரசு நடந்துகொள்ளாது” என்றார்.

இந்தப் பிரச்னை குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம். ``பொதுப் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நிமியனம், பல்கலைக்கழகச் செயல்பாடுகள், அதிகாரம் போன்றவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிடம் இருக்க வேண்டும். ஆளுநர் என்பவர் மத்திய அரசின் ஒரு பிரநிதிதான். முதல்வருக்குச் சில அதிகாரங்கள், ஆளுநருக்கு சில அதிகாரங்கள் என ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்ததைப் போன்ற இரட்டையாட்சி முறை இப்போது இல்லை. அது ஒழிக்கப்பட்டுவிட்டது.

இறையாண்மை பெற்ற ஒரு மாநில அரசு இருக்கும்போது, அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு துறையில் முடிவெடுக்கும் அதிகாரம், அந்த மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. மாநில அரசை கலந்தாலோசிக்காமலும், மாநில அரசின் பரிந்துரைகளை ஏற்காமலும், நானே ஒரு குழுவை அமைப்பேன் என்று ஆளுநர் செயல்பட்டால், அது ஒரு ஜனநாயக விரோதப் போக்கு. மக்களாட்சி மாண்புக்கு எதிரானது.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

உயர் கல்வி அமைச்சர்தான் இணை வேந்தர். எனவே, இணை வேந்தருடன் கலந்தாலோசிக்க வேண்டும். அது நடக்காததால் தமிழகத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது தெரியுமா? நியாயமான கோரிக்கைகளை முன்வைத்த மாணவர்களின் போராட்டத்தையும், பேராசிரியர்களின் போராட்டத்தையும் ஒடுக்கிய, ஜனநாயக விரோத எண்ணம் கொண்ட துணைவேந்தர் ஒருவரை, ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவுக்குத் தலைவராகப் போட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நபர் தலைமையிலான குழு, எப்படிப்பட்ட நபர்களைத் தேர்வு செய்யும்? இதை மாநில அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமானால், அது மக்களாட்சிக்கு ஏற்புடையதல்ல.

அரசமைப்புச் சட்டம் மாநிலத்துக்கு தந்துள்ள உரிமைகளை உணர்ந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதை மனதிற்கொண்டு, தமிழகத்திலும் அத்தகைய சட்டங்களைக் கொண்டுவர வேண்டும்” என்றார்.