Published:Updated:

மகாராஷ்டிரா: ``என்னை சிறையில் அடைத்தாலும் ஆன்மிக போராட்டம் தொடரும்!" -பெண் எம்.பி முதல்வருக்கு சவால்

நவ்நீத் ரானா

தன்னை எதிர்த்து போட்டியிட முடியுமா என கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள பெண் எம்.பி நவ்நீத் ரானா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு சவால் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா: ``என்னை சிறையில் அடைத்தாலும் ஆன்மிக போராட்டம் தொடரும்!" -பெண் எம்.பி முதல்வருக்கு சவால்

தன்னை எதிர்த்து போட்டியிட முடியுமா என கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள பெண் எம்.பி நவ்நீத் ரானா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு சவால் விடுத்துள்ளார்.

Published:Updated:
நவ்நீத் ரானா

மும்பையில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே இல்லத்திற்கு வெளியில் ஹனுமான் பாடல்களை பாடப்போவதாக சுயேச்சை எம்.பி. நவ்நீத் ரானா, அவர் எம்.எல்.ஏ.கணவர் ரவி ரானா ஆகியோர் கடந்த மாதம் அறிவித்தனர். இதனால் அவர்கள் இருவரும் மும்பையில் கடந்த மாதம் 23-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இருவருக்கும் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீனில் வெளியான பிறகு நவ்நீத் ரானா மருத்துவமனையில் தங்கி சில நாள்கள் சிகிச்சை பெற்றார். தன்னை சிறை அதிகாரிகள் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை என்றும் புகார் கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நவ்நீத் ரானா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், `` ராமர் பெயர் பயன்படுத்தியதற்காக என்னை கைது செய்து லாக்கப்பில் துன்புறுத்தி சித்ரவதை செய்தனர்.

ரானா தம்பதி
ரானா தம்பதி

ஹனுமான் பாடல்கள் பாடுவது குற்றம் எனில் நான் சிறையில் இருக்க தயார். 14 நாள்கள் அல்ல 14 ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறையில் இருக்க தயாராக இருக்கிறேன். முதல்வர் தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துகிறார். முதல்வர் மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் என்னை எதிர்த்து போட்டியிட முடியுமா? தைரியம் இருந்தால் எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் போட்டியிடுங்கள். நானும் அவரை எதிர்த்து போட்டியிடுகிறேன். யாரை மக்கள் தேர்வு செய்கிறார்கள் என்று பார்ப்போம். உங்களது தந்தையின் பெயரால் நீங்கள் முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள்.

முடிந்தால் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுக்காட்ட முடியுமா? அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். என்னை 14 நாள்கள் சிறையில் அடைத்து என்னை அடக்கிவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. கடவுள் பெயரில் எங்களது போராட்டம் நடக்கிறது. இந்தப் போராட்டம் தொடரும். மும்பை மாநகராட்சித் தேர்தலில் சிவசேனா நிர்வாகம் செய்த ஊழலை அம்பலப்படுத்துவேன். விரைவில் டெல்லி சென்று மகாராஷ்டிரா அரசு தவறுதலாக அதிகாரத்தை பயன்படுத்தியதை புகார் செய்வேன்" என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism