Published:Updated:

"நெடுஞ்சாலை பணிக்காக எங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தை அழிப்பதா?" - விருதுநகர் விவசாயிகள் கொதிப்பு

விருதுநகர்

``விவசாய நிலங்களுக்கு மத்தியில் புதிதாக கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது விவசாயத்தை காப்பதற்காகவா? அல்லது அழிக்கவா?" - விவசாயிகள்

"நெடுஞ்சாலை பணிக்காக எங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தை அழிப்பதா?" - விருதுநகர் விவசாயிகள் கொதிப்பு

``விவசாய நிலங்களுக்கு மத்தியில் புதிதாக கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது விவசாயத்தை காப்பதற்காகவா? அல்லது அழிக்கவா?" - விவசாயிகள்

Published:Updated:
விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவுக்குட்பட்ட அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ``விவசாய நிலங்களுக்கு மத்தியில் புதிதாக கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது விவசாயத்தை காப்பதற்காகவா? அல்லது அழிக்கவா?" என வேதனை கலந்த குரலில் அவ்வூர் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தனிநபர் பட்டா நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தும், நீர்வழி ஓடையை அழித்தும் கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து அச்சம்தவிழ்த்தான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனி பேசுகையில், ``எங்கள் தாத்தா காலத்திலிருந்து இந்தப் பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். மக்காச்சோளம், மிளகாய், நெல் உள்ளிட்ட பயிர்களை பருவத்திற்கு ஏற்றவாறு விதைத்து சாகுபடி செய்கிறோம். எங்களது ஊரைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானோருக்கு தெரிந்த ஒரே தொழில் விவசாயம் மட்டுமே. பல பேர் லாபம் இல்லை என விவசாயத்தைவிட்டு வெளியேறிய போதும், வேறு தொழில் செய்யத்தெரியாததால் நாங்கள் இன்னமும் இந்த விவசாயத்தை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்துவருகிறோம்.

விவசாய நிலம் அருகில்
விவசாய நிலம் அருகில்

ஆனால் எங்கள் விவசாய நிலங்களுக்கு மிக அருகிலேயே புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்குவாரி அமைக்கப்பட்டால் விவசாயம் மட்டுமல்ல, எங்கள் பகுதி வாழ்வாதாரமே முற்றிலும் அழிந்துவிடும். இது தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் பலரிடமும் மனு அளித்து முறையிட்டோம். ஆனால் எங்கள் மனுக்களை குப்பை எனக்கருதி தூக்கி வீசிவிட்டார்களா? என்னவோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முள்வேலி
முள்வேலி

அதிகாரத்தாலும், பணத்தினாலும் மிகப்பெரிய ஆட்களாக இருக்கும் கல்குவாரி நபர்களிடம், விவசாயிகளான எங்களால் மோதி ஜெயிக்க முடியவில்லை. எனவேதான் அதிகாரிகளை நாடினோம். ஆனால் அதிகாரிகளும் கல்குவாரி செயல்படுவதற்கு ஆதரவாகத்தான் அனைத்து காய்களையும் நகர்த்துகிறார்கள். அப்படியெனில் விவசாயிகளும், விவசாயமும் இந்நாட்டிற்கு முக்கியமில்லையா? கல்குவாரியை எதிர்த்து கண்டன குரல்கள் எழுப்பினால் காவல்துறையின் மூலமாக ரகசியமாக வேவுப்பார்ப்பது, எங்களைப்பற்றிய தகவல்களை சேகரிப்பது என எதிர்மறை நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். விவசாயிகளான நாங்கள் காவல்துறைக்கு பயப்படுவதா? அல்லது எங்கள் வயிற்றுப்பசிக்கு பயப்படுவதா? கடந்த சுதந்திர தின கிராமசபைக் கூட்டத்திலேயே, ஊரில் கல்குவாரி அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு அனுப்பி உள்ளோம். அதற்கும் இங்கு மதிப்பில்லை" என்றார் மனக்குமுறலுடன்.

அடைக்கப்பட்டுள்ள பாதை
அடைக்கப்பட்டுள்ள பாதை

அச்சம்தவிழ்த்தான் ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முருகன் பேசுகையில், "எங்கள் பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்கும் தனியார் நிறுவனத்தினர், சர்வே எண்கள் 63, 73, 74, 735, 736, 740, 741, 742, 750 மற்றும் புல எண்கள் 755, 749, 751, 752, 753, 754, 737, 738, 732, 58, 59, 61 ஆகிய எண்களில் உள்ள நிலங்களின் உட்பிரிவுகளில் பலவற்றையும் கிரையம் பெற்றுள்ளனர். தற்போது அவர்கள்‌ கிரையம் பெற்றதாகச் சொல்லப்படும் இடத்தைச்சுற்றிலும் முள்கம்பிவேலி அமைத்து கல்குவாரியை செயல்படுத்த தயாராகி வருகின்றனர். ஆனால் அவர்கள்‌, சுமார் 2.80 ஏக்கர் பரப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தையும், சில தனிநபர்களுக்குச் சொந்தமான பட்டா நிலத்தையும் சேர்த்து ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளனர். அதன்படி, சர்வே எண்கள் 62, 748, 749/3, 747/1, 739/2 ஆகியவை அரசு புறம்போக்கு தரிசு நிலங்களாகும். இந்த நிலங்கள் அரசு ஆவணங்களின்படி, விவசாய கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களாகும். அதேசமயம், சர்வே எண்கள் 755/1, 749/2, 751/2, 753/1, 754/2A, 737/1, 754/2B, 738 /2, 58/2A, 58/2B, 59/1, 61/3 ஆகியவை தனி நபர்களுக்கு சொந்தமான பட்டா நிலங்களாகும். இந்த நிலங்களின் உரிமைதாரர்கள் சிலர் வெளியூரில் வசிப்பதால் பராமரிப்பின்றி தரிசாக கிடந்த நிலங்களையும் கல்குவாரியினர்‌ ஆக்கிரமித்து முள்வேலிக்குள் அடைத்துள்ளனர்.

தீர்மானம்
தீர்மானம்

முள்வேலி அமைக்கப்பட்டுள்ள நிலங்களின் வழியே 3 வண்டிப்பாதைகள் பொதுப்பாதைக்காக வகுக்கப்பட்டு ஆவணங்களில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டிப்பாதைகள் மூலமாகத்தான் பக்கத்து நிலங்களுக்கு பட்டாதாரர்கள் செல்ல முடியும். ஆனால் திடீரென முள்வேலி அமைத்திருப்பதால் பக்கத்து நிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் அவர்களுடைய சொந்த நிலத்திற்கு செல்ல வழி இல்லாமல் திண்டாடி வருகின்றனர். மேலும் கல்குவாரி இருக்கும் இடம் மேடானப் பகுதி என்பதால் மழைக்காலங்களில் பெருகி வரும் வெள்ளநீர் மற்ற விவசாய நிலங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இரண்டு நீர்வழிப்பாதைகள் வெட்டிவிடப்பட்டிருந்தன. இதுவும் அரசு சர்வே புலங்களில் நீர்வழி பாதையாக காண்பிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளது. ஆனால் இப்போது, ஒரு நீர்வழி ஓடை மட்டுமே உள்ளது. கல்குவாரி அமைப்பதற்காக இரண்டாவது நீர்வழிப்பாதையை ஜே.சி.பி‌. எந்திரத்தால் மண்மூடி அழித்துள்ளனர். மேலும் விவசாயத்துக்காக அரசால் பொது பயன்பாட்டிற்கென வெட்டிக்கொடுக்கப்பட்ட கூட்டுப்பட்டாவிலுள்ள கிணறும் அழிக்கப்பட்டுள்ளது.

நீர்வழிப்பாதை
நீர்வழிப்பாதை

இவ்வளவு சட்ட விதிமுறை மீறல்களுடன் கல்குவாரியை அமைப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாசுக்கட்டுப்பாடு வாரியம் உட்பட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாரும் இதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படுவதாக தெரியவில்லை. காரணம் மதுரை மாவட்டம், திருமங்கலம் முதல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை தற்போது புதிதாக நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலைப்பணிக்கு தேவைப்படும் ஜல்லிக்கற்கள், கிரஷர் மண் உள்ளிட்டவை இந்த கல்குவாரியிலிருந்து கொண்டு செல்வதற்காகத்தான் ஒப்பந்தம்‌ போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே அரசு சார்ந்த பணிகளுக்காகத்தான் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எல்லாம் முறையாகத்தான் நடக்கிறது என ஒற்றைவரியில் அதிகாரிகள் பதில் சொல்லிவிட்டு கடந்து செல்கின்றனர். அதன்பின்னால் இருக்கும் எங்களின் வாழ்வாதார பிரச்னையை சிந்திப்பதில்லை.

அறிவிப்பு பலகை
அறிவிப்பு பலகை

அரசு விதிகளின்படி விவசாய நிலங்களுக்கு அருகிலோ குடியிருப்புகளுக்கு அருகிலோ கனிம வளங்களை எடுக்கும் கல்குவாரிகள், கிரஷர் நிறுவனங்கள் செயல்படக்கூடாது என விதிமுறை உள்ளது. ஆனால் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு சட்ட விரோதமாக அனுமதிக்கப்பட்டுள்ள கல்குவாரியை இங்கிருந்து அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இந்த கல்குவாரியினால் அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் உள்ள 300 ஏக்கர் விவசாய நிலங்களும் முற்றிலும் அழிந்து போகும்" என்றார்.

கல்குவாரி
கல்குவாரி

வருவாய்துறை அதிகாரிகள் தரப்பில் பேசும்போது, "கல்குவாரி அமைப்பவர்கள் முறையாக அனுமதி பெற்று பணியை தொடங்கியுள்ளனர். மேலும், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக விவசாயிகளிடம் இருந்து வரப்பெற்றுள்ள புகார் குறித்து அதிகாரிகள் குழு தலைமையில் நேரில் கள‌ஆய்வு செய்து விசாரணை நடத்தினோம். இதில் அரசு புறம்போக்கு நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. எனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தின் எல்லைகளை அளவீடு செய்து சிவப்பு நிற கற்களை ஊன்றியுள்ளோம். அரசு நிலத்தில், தனியார் தரப்பினர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என எச்சரிக்கையும் விடுத்துள்ளோம். இதைத்தாண்டி, அங்குள்ள பிரச்னைகள்‌ குறித்து அதிகாரிகள்‌ கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இனி உயரதிகாரிகள்‌தான்‌ முடிவு செய்யவேண்டும்" என்றனர்.

மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியிடம் பேசுகையில், "விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்படும். அங்குள்ள பிரச்னைகள் கள ஆய்வு செய்யப்பட்டு எந்தவித விதிமீறலும் இல்லாதவாறு பணிகளை மேற்கொள்ள ஆவணச்செய்யப்படும்" என்றார்.