Published:Updated:

கேப்டன் அமரீந்தர் Vs சிக்ஸர் சித்து: ரூ. 8 லட்சம் மின் கட்டண பாக்கி! - பஞ்சாப் காங்கிரஸில் விரிசல்?

கேப்டன் அமரீந்தர் Vs சிக்ஸர் சித்து
News
கேப்டன் அமரீந்தர் Vs சிக்ஸர் சித்து

`கேப்டன்களுக்கும் சித்துவுக்கும் எப்போதுமே ஆகாது' என்று சொல்லும் அளவுக்குத் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்களோடு பல முறை மோதல்களில் ஈடுபட்டிருக்கிறார் நவ்ஜோத் சிங் சித்து... பஞ்சாப் காங்கிரஸில் என்ன பிரச்னை?

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் கோஷ்டி மோதல் வெடித்திருக்கிறது. முதல்வர் அமரீந்தர் சிங்-க்கும், முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பனிப் போர் நிலவி வருகிறது. சில காலமாகவே இவர்களிடையே நிலவி வந்த மோதல், தற்போது பூதாகரமாகியிருக்கிறது.

கேப்டன்ஸ் Vs சித்து

`கேப்டன்களுக்கும் சித்துவுக்கும் எப்போதுமே ஆகாது' என்று சொல்லும் அளவுக்குத் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்களோடு பல முறை மோதல்களில் ஈடுபட்டிருக்கிறார் சித்து. 1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரராக அறிமுகமான நவ்ஜோத் சிங் சித்து, சிக்ஸர்களை விளாசுவதில் வல்லவர். எனவே `சிக்ஸர் சித்து' என்ற செல்லப் பெயரைப் பெற்றார் அவர்.

சிக்ஸர் சித்து!
சிக்ஸர் சித்து!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1996-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அப்போதைய இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீனுடன் ஏற்பட்ட பிரச்னையால் பாதியிலேயே இந்தியா திரும்பினார் சித்து.

2004-ம் ஆண்டிலிருந்து பா.ஜ.க-வில் பயணித்து வந்த சித்து, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு அமிர்தசரஸில் சீட் வழங்கப்படவில்லை என்பதால் பா.ஜ.க தலைமையோடு மோதல் போக்கை கடைபிடித்தார். இதன் விளைவாக 2016-ம் ஆண்டு பா.ஜ.க-விலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தவர், தற்போது மீண்டும் தலைமைப் பொறுப்பிலிருப்பவரோடு மோதலில் ஈட்டுப்பட்டு வருகிறார். தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவரும், பஞ்சாப் மாநில முதல்வருமான கேப்டன் அமரீந்தர் சிங்குடனும் மோதலில் ஈடுபட்டு வருகிறார் சித்து.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேப்டன் அமரீந்தர் Vs சிக்ஸர் சித்து: மோதலுக்குக் காரணம் என்ன?

2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற சித்துவுக்கு, சுற்றுலாத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டு தனது நண்பரும் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றபோது, அமரீந்தரின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்குச் சென்று பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார் சித்து. அதோடு, பாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டித் தழுவி வாழ்த்துப் பெற்றார். இது பெரும் சர்ச்சையானது. இதற்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார் அமரீந்தர் சிங். அப்போதே இருவருக்குமிடையே மோதல் போக்கு தொடங்கிவிட்டது.

தொடர்ந்து சில மாதங்கள் கழித்து மீண்டும் பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் சித்து. அந்த சமயத்தில், ``நான் சித்துவைப் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தியிருந்தேன். ஆனால், எனக்கே தெரியாமல் அங்கு சென்றுள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மற்றும் நமது வீரர்கள் கொல்லப்பட்டது ஆகியவற்றை மனதில் கொண்டு எனக்கு அழைப்பு விடுத்தும் நான் பாகிஸ்தான் செல்லவில்லை'' என்று பேட்டியளித்தார் அமரீந்தர் சிங்.

சித்து, கேப்டன் அமரீந்தர்
சித்து, கேப்டன் அமரீந்தர்

இது குறித்து சித்துவிடம், `உங்கள் கேப்டன் நீங்கள் பாகிஸ்தான் சென்றதை விமர்சித்திருக்கிறாரே?' என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு, ``எந்த கேப்டன்? அவர் (அமரீந்தர்) ராணுவத்தில்தான் கேப்டன்; ராகுல் தான் எனக்கு கேப்டன். அவர்தான் என்னைப் பாகிஸ்தான் அனுப்பினார்'' என்றார். இதன்பிறகு இருவருக்கும் இடையே கடுமையான மோதல்கள் நிகழ்ந்தன.

2019-ம் ஆண்டு சில அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்றினார் அமரீந்தர் சிங். அப்போது சித்துவின் அமைச்சர் இலாகாவும் மாற்றப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சித்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, பல முறை முதல்வருக்கு எதிரான விமர்சனங்களைப் பொதுவெளியில் முன் வைத்து வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராகுல், பிரியங்கா சந்திப்பு!

இந்த நிலையில், பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால், தனக்கு ஆதரவாக இருக்கும் காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏ-க்களை ஒன்று திரட்டி சில அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார் சித்து. முதல்வர் வேட்பாளர் அல்லது காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பு என எதையாவது ஒன்றைப் பெற்றுவிட வேண்டுமெனச் சித்து முயன்று வருவதாகப் பஞ்சாப் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், அமரீந்தரின் ஆதரவாளர்களோ, ``பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்தவர்களை விடுத்து, புதிதாக வந்த சித்துவுக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கக் கூடாது'' எனப் போர்க் கொடி தூக்கியிருக்கிறார்கள்.

இதனிடையே, கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று பிரியங்கா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்திருக்கிறார் சித்து. முதலில், ராகுல் காந்தி சித்துவைச் சந்திக்க மறுத்துவிட்டதாகவும், பிரியங்கா காந்தி சொன்னதை அடுத்துத்தான் ராகுல் சித்துவைச் சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

siddhu with priyanka gandhi
siddhu with priyanka gandhi

ட்விட்டரில் வெடித்த மோதல்!

சித்து டெல்லி சென்று திரும்பிய அடுத்து நாளே, அமரீந்தர் சிங் தனது ஆதரவு காங்கிரஸ் தலைவர்களை வீட்டுக்கு அழைத்து மதிய விருந்து வைத்திருக்கிறார். இந்தத் தொடர் நிகழ்வுகள் அனைத்தும் பஞ்சாப் மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியிருக்கின்றன. இந்தநிலையில், டெல்லி சென்று திரும்பிய கையோடு, ட்விட்டரில் ஒரு பதிவை இட்டிருக்கிறார் சித்து. அந்தப் பதிவில் பஞ்சாபில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்னை குறித்து, ``நாம் சரியான பாதையில் சென்றால் பவர் கட் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அலுவலக நேரங்களை மாற்றியமைப்பது, ஏசி பயன்பாடு உள்ளிட்டவை பற்றி முதல்வர் யோசிக்க வேண்டிய அவசியமும் இருக்காது'' என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், டெல்லி மாடலை பயன்படுத்தினால் பஞ்சாப் மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார் சித்து. டெல்லியில் ஆட்சியிலிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிதான் பஞ்சாபில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்திலிருக்கும் ஆம் ஆத்மிக்கு, சித்துவின் ட்விட்டர் பதிவு வலு சேர்க்கும் வகையிலிருப்பதால், அமரீந்தர் சிங் தரப்பு கடுங் கோபத்துக்குள்ளாகியிருக்கிறது.

2019-ல் அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டபோது சித்துவுக்குத்தான் மின்சாரத் துறையை வழங்கினார் அமரீந்தர். அதை ஏற்க மறுத்து சித்து ராஜினாமா செய்ய, மின்சாரத் துறையை தன் வசமே வைத்துக் கொண்டார் அமரீந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நவ்ஜோத் சிங் சித்துவின் அமிர்தசரஸ் வீட்டுக்கு 8.67 லட்சம் ரூபாய் மின் கட்டணம் பாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நவ்ஜோத் சிங் சித்துவின் பெயரிட்ட பஞ்சாப் மின்சாரத் துறையின் பில் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், கடந்த ஆண்டு சித்துவின் வீட்டுக்கு ரூ. 17 லட்சம் மின்சாரக் கட்டணம் பாக்கியிருந்ததாகவும், அதில் 10 லட்சம் ரூபாயை மார்ச் மாதத்தில் அவர் கட்டியிருப்பதாகவும் தகவல்கள் இருக்கின்றன. மேலும், தற்போது சித்துவின் பெயரில், 8.67 லட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கியிருக்கும் தகவலும் அந்த ரசீதில் இடம்பெற்றிருக்கிறது.

siddhu EB bill
siddhu EB bill

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலர், ``பஞ்சாபில் மின்சாரப் பிரச்னைதான் காங்கிரஸ் அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, `வரும் தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றால், அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாகத் தருவோம்' எனப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சொந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-வான சித்துவும் மின்சாரப் பிரச்னை குறித்துப் பேசியது அமரீந்தர் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் சித்துவின் மின்சாரக் கட்டண பாக்கி குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவரிடையேயும் நிலவி வந்த மோதல் போக்கு தற்போது அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல களேபரங்கள் பஞ்சாப் காங்கிரஸில் நிகழும் என்பதில் சந்தேகமில்லை'' என்கிறார்கள்.