உலக மக்கள் தொகையில் சீனாவை முந்தி இந்தியா முதலிடம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இதை ஏளனம் செய்யும் விதமாக ஜெர்மன் நாளிதழான டெர் ஸ்பீகல் (Der Spiegel) கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த கார்ட்டூனில், இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை முந்தும் வகையில் காண்பிக்க, இரண்டு தடங்கள் காட்டப் பட்டுள்ளன. ஒரு தடத்தில் சாதாரண ரயிலும், மற்றொரு தளத்தில் புல்லட் ரயிலும் இருக்கிறது. புல்லட் தட ரயில் சீனாவைக் குறிப்பதாகவும், அதில் குறைவான மக்கள் இருப்பதாகவும், சாதாரண ரயில் தடத்தில் உள்ள ரயில் இந்தியாவை குறிப்பதாகவும் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் அந்த ரயிலில் கூட்டம் கூட்டமாக மக்கள் ஜன்னலில் தொங்கியபடியும், ரயிலின் மேல் அமர்ந்தபடியும் இருக்கின்றனர். இந்தியக் கொடியையும் பிடித்துள்ளனர்.
இந்த கார்ட்டூன் பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கார்ட்டூன் சித்திரிப்புக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து சமூக வலைதளத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
``ஹாய் ஜெர்மனி இது மூர்க்கதனமான இனவெறி. டெர் ஸ்பீகலின் இந்தியா பற்றிய இந்தக் கேலிச்சித்திரம் யதார்த்துடன் ஒத்துப் போகவில்லை. இந்தியாவைத் தாழ்த்துவதே இதன் நோக்கம்'' என தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா தெரிவித்துள்ளார்.
``மேற்கத்திய நாடுகள் இந்தியாவை ஏழையாகவும், கஷ்டத்தில் இருப்பதாகவும் சித்திரிக்க விரும்புகின்றன. அவர்கள் இந்தியாவின் வந்தே பாரத் அல்லது வரவிருக்கும் புல்லட் ரயில்களைக் காட்ட மாட்டார்கள். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா ஜெர்மனியை முந்தி 4வது பெரிய ஜிடிபியாக மாறும்'' என ராஜ்யசபா எம்.பி விஜயசாய் ரெட்டி தெரிவித்துள்ளார்.