Published:Updated:

`ரஜினி, சரியான ஆதாரம் காட்டவில்லை!' -படத்திலிருக்கும் பாலா சொல்கிறார்

ரஜினி
ரஜினி ( http://www.pictureperfect.studio )

''பெரியார் குறித்த தனது பேச்சு, சரியானதுதான் என்று அவுட்லுக் பத்திரிகை ஆதாரத்தை ரஜினி காட்டியிருக்கக்கூடாது. துக்ளக் பத்திரிகையிலிருந்துதான் ஆதாரம் காட்ட வேண்டும்'' என்கிறார், கார்ட்டூனிஸ்ட் பாலா. ரஜினி காட்டிய செய்தி ஆதாரத்தில் இடம் பெற்றிருப்பது இவருடைய படம்தான்.

``1971ல் ராமர் - சீதை நிர்வாணப் படத்துக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக எடுத்துச்சென்றார் பெரியார்'' என்று சமீபத்தில் பேசி, பரபரப்பு நெருப்பைப் பற்றவைத்தார், நடிகர் ரஜினிகாந்த்.

இதையடுத்து, 'மக்கள் மத்தியில், பெரியாரை விரோதியாக சித்திரிக்கும் வகையில் செய்தியைத் திரித்துச் சொல்கிறார் ரஜினிகாந்த். தவறான இந்தப் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோரவேண்டும்' என்று திராவிட இயக்கங்கள் ரஜினிகாந்த்தின் பேச்சை கடுமையாகக் கண்டித்தன. இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ''1971ல் சேலத்தில் நடைபெற்ற பேரணி குறித்து நான் கற்பனையாக எதுவும் கூறவில்லை. 2017ல் அவுட்லுக் பத்திரிகையில்கூட இதுகுறித்து செய்தி வெளியாகியிருக்கிறது. 'ராமர் - சீதை படங்கள் அந்த ஊர்வலத்தில் நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து கொண்டுவரப்பட்டது' என்று இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதைத்தான் நானும் எடுத்துச் சொன்னேன். இல்லாத விஷயம் எதையும் நான் சொல்லவில்லை.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
ரஜினி சொன்னது என்ன... 1971 சேலம் ஊர்வலத்தில் நடந்தது என்ன..? துக்ளக் செய்தி... முழு விவரம்!

எனவே, நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்க மாட்டேன் என்பதைத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்'' என்றவர், அவுட்லுக் பத்திரிகையில் வெளியான அந்தக் கட்டுரை ஆதாரத்தையும் செய்தியாளர்களிடம் கொடுத்துவிட்டு பிரஸ்மீட்டை முடித்துக்கொண்டார்.

ரஜினிகாந்த், தனது பேச்சுக்கு ஆதாரமாகக் காட்டியுள்ள அவுட்லுக் பத்திரிகைச் செய்தி, 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 'கந்துவடிக்கு எதிராக கார்ட்டூன் வரைந்ததாக கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதை விவரிக்கும் கட்டுரையாகும். ரஜினி காட்டிய செய்தி ஆதாரத்தில், பாலாவின் படம்தான் இடம் பெற்றிருக்கிறது.

இதையடுத்து, இவ்விவகாரம் குறித்து கார்ட்டூனிஸ்ட் பாலாவிடம் பேசியபோது, ''அரசு அதிகாரம், பத்திரிகைகள்மீது எவ்வாறான தாக்குதலையெல்லாம் நடத்துகிறது என்பது குறித்து அவுட்லுக் பத்திரிகை 2017-ம் ஆண்டு வெளியிட்டிருந்த ஒரு பொதுவான செய்திக் கட்டுரை அது.

அதில், நான் கைதுசெய்யப்பட்டது குறித்தும் மற்ற ஊடக நண்பர்கள் பற்றிய செய்திகளும் இருக்கின்றன.

கார்ட்டூனிஸ்ட் பாலா
கார்ட்டூனிஸ்ட் பாலா

இதில், 1971ல் சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய 'மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி' பற்றிய செய்திக்குறிப்பு ஒன்றும் எழுதப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பைத்தான் தனது பேச்சுக்கு ஆதாரமாக ரஜினிகாந்த் காட்டியுள்ளார். ரஜினிகாந்த் ஆதாரமாகக் காட்டவேண்டியது, அவர் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள 'துக்ளக்' பத்திரிகையைத்தான். அல்லது அன்றைய காலகட்டத்தில் இதுகுறித்த செய்திகளை வெளியிட்டுள்ள மற்ற பத்திரிகைகளையோ புகைப்பட ஆதாரங்களையோதான் காட்ட வேண்டும். அதை விடுத்து, 2017ல் நான் கைதுசெய்யப்பட்டதையொட்டி எழுதப்பட்டுள்ள ஒரு செய்திக் கட்டுரையில், அதுவும் போகிறபோக்கில் குறிப்பிடப்பட்டுள்ள ஓரிரு வரிச் செய்தியை மட்டுமே ஆதாரமாகக் காட்டுவதென்பது எந்த அளவு சரியான வாதமாக இருக்கும்?

நான்கூடத்தான் நடிகர் ரஜினிகாந்த் பற்றிய ஒரு கட்டுரை எழுதமுடியும். நாளை யாராவது ஒருவர், 'இந்தக் கட்டுரையிலேயே ரஜினிகாந்த் பற்றி இப்படி எழுதப்பட்டுள்ளதே' என்று ஆதாரமாகக் காட்டமுடியுமா என்ன?'' என்கிறார் தெளிவாக.

அடுத்த கட்டுரைக்கு