Published:Updated:

வனச் சரக அலுவலர் அளித்த புகார் - சேலம் எம்.பி பார்த்திபன் மீது கொலை மிரட்டல் வழக்கு!

பார்த்திபன்
பார்த்திபன் ( vijayakumar mம் )

நான்கு பேர் மீது அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துகள் அபகரித்தல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல், அரசு சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்!

சேலம் தி.மு.க மக்களவை உறுப்பினர் பார்த்திபன். இவர் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்து அங்கிருந்த மலையை உடைத்து கல், மண் கடத்தினார் என்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய மரங்களை வெட்டி விற்றார் என்றும் வனச்சர அலுவலர்களுக்குக் கொலை மிரட்டல் விட்டார் என்றும் மேச்சேரி வனச்சரக அலுவலர் முருகன் மேச்சேரி காவல் நிலையத்தில் ஜூன் 18 ம் தேதி புகார் கொடுத்தார். அதையடுத்து மேச்சேரி காவல்துறையினர் எம்.பி பார்த்திபன் உட்பட நான்கு பேர் மீது கொலை வழக்கு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேச்சேரி வனச் சரக அலுவலர் திருமுருகன் கொடுத்த புகாரில், ''சேலம் மாவட்டம் மேச்சேரி பெரிய சாந்தப்பாடி கிராமம் கரடு பகுதியானது. இது வருவாய் துறைக்குச் சொந்தமான அரசு தீர்வை ஏற்படாத புறம்போக்கு நிலம். இங்கு வனத்துறை மூலம் பல இனச் செடிகள் நடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. செடிகள் நடுவதற்கு முன்போ, பின்போ இங்கு எந்தக் குடியிருப்புகளோ, விளை நிலங்களோ கிடையாது.

நிலம்
நிலம்
vijayakumar m

இப்பகுதியில் வனவர் வடிவேலுடன் கூட்டு களத்தணிக்கை மேற்கொண்ட போது வேடன் கரட்டின் அடிவாரத்தில் இரும்புக் கம்பத்தால் ஆன செக்போஸ்ட் அமைக்கப்பட்டு அதில் தொடர்பு கொள்ள மொபைல் எண் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் ஜூன் 18ம் தேதி காலை 10:00 மணிக்கு அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அரசு நிலத்தில் செக்போஸ்ட் எதற்காக அமைத்தீர்கள் என்று கேட்டு விட்டு நீங்கள் யார் என்று கேட்டேன்.

''என் பெயர் பழனிசாமி, நான் சேலம் தி.மு.க. எம்.பி எஸ்.ஆர். பார்த்திபனின் வேலையாள். அந்த இடம் எம்.பிக்குச் சொந்தமானது. யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது. அனுமதியின்றி உள்ளே நுழைந்தால் கை, கால்களை வெட்டி விடுவேன். எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று பார்த்திபன் கூறி இருக்கிறார்'' என்றார்.

அதன் பின் மாற்றுப்பாதையில் உள்ளே சென்றேன். அங்கு மலையை வெட்டி கல், மண் கடத்தி இருப்பது தெரியவந்தது. மேலும் வனத்துறைக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்பிலான 200க்கும் மேற்பட்ட வேம்பு, புளியன், கருங்காலி, கருவேலன், வாகை, உசில், புங்கன், சீமை அகத்தி, சீமை வெள்வேல், தைலமரம் எனப் பல வகையான மரங்கள் அனுமதி பெறாமல் வெட்டிக் கடத்தியதோடு தார் சாலை அமைக்கப்பட்டது.

பார்த்திபன் மேட்டூர் எம்.எல்.ஏவாக இருந்த போது அவரின் சகோதரர் அசோக்குமாருடன் இணைந்து வனத்துறை அலுவலகர்கள் சிலரின் உதவியோடு சாலை அமைத்து அவ்விடத்தில் அலுவலகம் நடத்தி வந்துள்ளார். சாலைக்காக மரங்கள் வெட்டிக் கடத்தியதோடு சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தியும் அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இக்குற்றச் செயலில் ஈடுபட்ட எஸ்.ஆர். பார்த்திபன், அசோக்குமார், ஆனந்தபத்மநாபன், காவலாளி பழனிசாமி மற்றும் இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்'' எனப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட மேச்சேரி போலீஸ் எஸ்.ஐ. மனோன்மணி நான்கு பேர் மீது அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துகள் அபகரித்தல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல், அரசு சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நிலம்
நிலம்
vijayakumar m

இதுபற்றி சேலம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பார்த்திபனிடம் கேட்டதற்கு, ''இது பொய்யான வழக்கு. திட்டமிட்டு போட்டிருக்கிறார்கள். அதையடுத்து நான் அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் போட இருக்கிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு