Published:Updated:

சிவகங்கை: வெட்டப்பட்ட மரங்கள்... பதுக்கப்பட்ட மணல்! - தி.மு.க நிர்வாகி தோட்டத்துக்கு சீல்!

தி.மு.க நிர்வாகிகள் வெட்டிய மரங்கள்
தி.மு.க நிர்வாகிகள் வெட்டிய மரங்கள்

தி.மு.க தெற்கு ஒன்றியச் செயலாளர் சண்முகவடிவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் கனிம வளங்கள் நிறைந்த பகுதி. ஆனால், விவசாயம் இல்லாததால், `வறட்சியான மாவட்டம்’ என்று சொல்லப்படுகிறது. ஆழமாகத் தோண்டி ஆற்றுமணல் அள்ளி சாதனை படைத்திருக்கிறார்கள் சிவகங்கை மணல் கொள்ளையர்கள். தொழில் வளர்ச்சிகளில் முன்னேற்றம் காணவில்லையென்றாலும், கனிம வளக் கொள்ளை அமோகமாக அரங்கேறுகிறது. ஆளும்கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சியான தி.மு.க, அ.ம.மு.க போன்ற பிற அரசியல் கட்சியினருக்கும் மணல் எடுக்க அனுமதிகள் வழங்கப்பட்டன.

தி.மு.க நிர்வாகி சண்முக வடிவேல்
தி.மு.க நிர்வாகி சண்முக வடிவேல்

`கட்சிப் பாகுபாடு இல்லாமல் மாவட்டமே மணல் கொள்ளையால் முக்கால்வாசி சுரண்டப்பட்டுவிட்டது. தேவைக்கு அதிகமான மணல் எடுத்து முடிக்கப்பட்டிருக்கிறது' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இந்நிலையில் மணலைத் திருடி பதுக்கிவைத்ததாகக் கூறி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவரும், தி.மு.க தெற்கு ஒன்றியச் செயலாளருமான சண்முகவடிவேல் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் இருந்த 20-க்கும் மேற்பட்ட நாட்டு மரங்களை திருப்பத்தூர் ஊராட்சி மன்றப் பெருந்தலைவரும், தி.மு க தெற்கு ஒன்றியச் செயலாளருமான சண்முகவடிவேல் வெட்டி, கடத்தியதாகக் கூறி அ.தி.மு.க-வின் ஒன்றியச் செயலாளர்கள் ராமலிங்கம், சிவமணி, வடிவேலு ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து அதிகாரிகள் பார்வையிட்டபோது மரங்கள் வெட்டப்பட்டது உறுதியானது. அலுவலக வளாகத்திலிருந்த இரண்டு பட்டமரங்களை வெட்ட நிர்வாகத்தினர் ஏலத்தில் அனுமதித்திருக்கிறார்கள்.

வெட்டப்பட்ட மரங்கள்
வெட்டப்பட்ட மரங்கள்

ஆனால் ஏலதாரரான தி.மு.க நகர் இளைஞர் அணி நிர்வாகி மனோகரன் விடுமுறை நாளில், பட்ட மரங்களுடன் கூடுதலாக அங்கிருந்த பச்சை மரங்களையும் வெட்டியிருப்பதாகவும், வளாகத்திலிருந்த கொன்றை, நாவல், இலவம், மஞ்சனத்தி, வேம்பு உள்ளிட்ட 17 மரங்களை வெட்டியிருப்பதும் தெரியவந்தது. பின்னர் வட்டாட்சியர் ஜெயலெட்சுமி திருப்புத்துார் டவுன் போலீஸில் இது குறித்துப் புகாரளித்தார். டவுன் போலீஸார் ஏலதாரரான தி.மு.க நிர்வாகி மனோகரன் மீது ஏலத்தில் அனுமதித்ததைவிடக் கூடுதலாக மரங்கள் வெட்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

வெட்டப்பட்ட மரங்கள் சண்முகவடிவேலின் தோப்பில் வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு மணல் குவிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார், தோப்பின் உரிமையாளரான ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவரும், தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளருமான சண்முகவடிவேல் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அதிகரிக்கும் மணல் கொள்ளை!
அதிகரிக்கும் மணல் கொள்ளை!

50 டிப்பர் மணலும், 450 டிப்பர் சவுடு மண்ணும் தோட்டத்தில் பதுக்கிவைத்திருப்பதாக சண்முகவடிவேல் மீது வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, திருக்கோஷ்டியூர் காவல் ஆய்வாளர் ஜெயமணி, திருப்பத்தூர் வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் ஐரிஸ் அஸ்மி ஆகியோர் அந்த தோட்டத்துக்குச் சென்று அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் கால்நடைகளை வெளியேற்றிய பிறகு, அந்த தோட்டத்துக்கு சீல் வைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க நிர்வாகிகள் இருவர் தொடர்ந்து சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு