அரசியல்
அலசல்
Published:Updated:

சாதிப் பாகுபாடு காட்டுகிறார், மேயர்! - நெல்லை மாநகராட்சியில் அடுத்த சர்ச்சை

நெல்லை மாநகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
News
நெல்லை மாநகராட்சி

‘சாதியப் பாகுபாட்டோடு மேயர் சரவணன் செயல்படுவதாக’ மாநகராட்சிக் கூட்டத்தில் பேசியதோடு தர்ணாவிலும் ஈடுபட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார்

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க-வில் நடக்கும் கோஷ்டி மோதல், மாநகராட்சிக் கூட்டம் வரை எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 28-ம் தேதி நடந்த கூட்டத்தில், தி.மு.க மேயருக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்களே கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டதால் 10 நிமிடங்களில் கூட்டம் முடித்துவைக்கப்பட்டது.

மேயர் சரவணன்
மேயர் சரவணன்

இந்த நிலையில், தி.மு.க கவுன்சிலர் அஜய், ‘சாதியப் பாகுபாட்டோடு மேயர் சரவணன் செயல்படுவதாக’ மாநகராட்சிக் கூட்டத்தில் பேசியதோடு தர்ணாவிலும் ஈடுபட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, மேயருக்கு எதிராக 17 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படம் ஒன்றையும் வெளியிட்டு அடுத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். இது பற்றி அவரிடம் கேட்டோம். “பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கும் எங்கள் வார்டை மேயர் திட்டமிட்டே புறக்கணிக்கிறார். நான் அவருக்கு ஆதரவாக இருந்தவரை தினமும் எனது வார்டுக்குத் தண்ணீர் வந்தது. ஆனால், இப்போது 20 நாள்களுக்கு ஒரு முறைகூட தண்ணீர் வருவதில்லை.

எனது வார்டில் சுகாதார மையம் தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டு இடம்கூடத் தேர்வு செய்யப்பட்டது. கடைசி நேரத்தில், அதைப் பக்கத்திலிருக்கும் தனது வார்டுக்கு மாற்றிக்கொண்டார் மேயர். கேட்டால், ‘பட்டியல் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் அந்த மையம் இருந்தால் மற்றவர்கள் வர மாட்டார்கள்’ என்று காரணம் சொல்கிறார்கள். அவரின் சாதிய துவேஷத்துக்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?” என்று படபடத்தார்.

சாதிப் பாகுபாடு காட்டுகிறார், மேயர்! - நெல்லை மாநகராட்சியில் அடுத்த சர்ச்சை

இந்த விவகாரங்கள் குறித்து மேயர் சரவணனிடம் விளக்கம் கேட்டதற்கு, ‘‘நான் சாதி பார்த்துப் பழகக்கூடியவனா என்பது என்னை அறிந்த நண்பர்களுக்கும் கவுன்சிலர் களுக்கும் தெரியும். ஒவ்வொரு மாநகராட்சிக் கூட்டத்தின் முதல் நாளிலும் கவுன்சிலர்களை அழைத்து, ‘என்ன பேச வேண்டும்’ என்று சிலர் சொல்லிக் கொடுக்கிறார்கள். அவர்களின் கருத்தை அஜய் பேசியிருக்கிறார். என்னை அவதூறாகச் சித்திரித்து குறும்படம் எடுத்திருக்கிறார்கள். திரைப்படத்துக்கு இணையான தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்டிருக்கும் அதைத் தயாரிக்க சில லட்சங்கள் செலவாகியிருக்கும். அந்தப் பணத்தை தமிழக அரசின் புதுமைப் பெண்கள் திட்டம் உள்ளிட்ட முதல்வரின் நல்ல திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தியிருக்கலாம். மாறாக, சொந்தக் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தப் பயன்படுத்தியிருக்கிறார்கள்” என்றார்.

அஜய், சிவ கிருஷ்ணமூர்த்தி
அஜய், சிவ கிருஷ்ணமூர்த்தி

இது பற்றி நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, “அதிகாரிகள் யாரும் எந்த வார்டையும் புறக்கணிப்பதில்லை. அஜய் வார்டில் சாலை மேம்பாடு, குடிநீர், இ-சேவை மையம் எனப் பல திட்டங்களைச் செயல்படுத் தியிருக்கிறோம்” என்று முடித்துக்கொண்டார்.

நெல்லையில் ஆளுங்கட்சி கவுன்சிலர் களுக்குள் பல மாதங்களாக நடக்கும் இந்த அதிகார யுத்தம், தலைமையின் காதுகளை இன்னுமா எட்டவில்லை?