Published:Updated:

பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் குற்றச்சாட்டு பின்னணியில் ஜாதி - மதம்! -திசை திருப்பப்படுகிறதா விவகாரம்?

பத்ம சேஷாத்ரி பள்ளி

'தவறு செய்த ஆசிரியர் மற்றும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராத பள்ளி நிர்வாகம் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்ற கருத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ட்வீட் வெளியிட... விவகாரம் அரசியல் ரீதியாகவும் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.

பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் குற்றச்சாட்டு பின்னணியில் ஜாதி - மதம்! -திசை திருப்பப்படுகிறதா விவகாரம்?

'தவறு செய்த ஆசிரியர் மற்றும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராத பள்ளி நிர்வாகம் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்ற கருத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ட்வீட் வெளியிட... விவகாரம் அரசியல் ரீதியாகவும் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.

Published:Updated:
பத்ம சேஷாத்ரி பள்ளி

'பத்ம சேஷாத்ரி பால பவன்' பள்ளி ஆசிரியர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து, தமிழக காவல்துறையின் அதிரடி விசாரணை, கைது நடவடிக்கை என செய்திகள் தடதடக்கின்றன. இந்த பரபரப்புகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் சமூக ஊடகத்திலும் 'பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரம்' குறித்த வசவுகளும், காரசார விவாதங்களும் இணைய உலகையே கிடுகிடுக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

பத்ம சேஷாத்ரி பள்ளியின் அறங்காவலர் குழுவை சார்ந்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், அவரது மகளும் தமிழக பா.ஜ.க நிர்வாகியுமான மதுவந்தி ஆகியோரது ஜாதி மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை முன்னிறுத்தி எதிர்த்தரப்பினர் எழுப்புகிற கேள்விகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து, 'ஒரு பள்ளியில் நடைபெற்றதாகக் கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டில், தேவையின்றி ஜாதி - அரசியலைத் திணித்து பிரசாரம் செய்வது அநாகரீகமானது' என்ற எதிர்ப்புக் குரல்களும் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.

ஆசிரியர் ராஜகோபாலன்
ஆசிரியர் ராஜகோபாலன்

பள்ளி நிர்வாகத்துக்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாகவும் இணையத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வரும் ஒரு தரப்பினர், 'கந்த சஷ்டி கவசம் குறித்த சர்ச்சை எழுந்தபோது, கடவுளை இழிவுப்படுத்திவிட்டதாகக் கூறி கொதித்து குரல் எழுப்பிய பிரபலங்கள் பலரும், தற்போதைய பாலியல் வன்கொடுமையில் குழந்தைகள் சீரழிக்கப்பட்டிருப்பது குறித்து எந்தவித கண்டனத்தையும் தெரிவிக்காமல் கள்ள மௌனம் காத்து வருவது ஏன்?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

மேலும், சில வருடங்களுக்கு முன்பு ஸ்வாதி என்ற பெண் படுகொலையானபோது, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்திருந்ததான சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டு, 'எந்தவித ஆதாரமும் இல்லாமலேயே, ஸ்வாதி படுகொலையின் பின்னணியில் முஸ்லிம் மத குற்றவாளி இருப்பதாகக் கூறி சமூகப் பதட்டத்தை ஏற்படுத்திய ஒய்.ஜி.மகேந்திரன், தற்போது தான் ட்ரஸ்டியாக அங்கம் வகித்துவரும் பத்ம சேஷாத்ரி பள்ளி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து நேர்மையான முறையில் பதிலளிக்காமல், தனக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஓடி ஒளிந்துகொள்வது எந்த வகையில் நியாயம்?' என்று குமுறியுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையே, இந்த விவகாரம் 'வலதுசாரி - இடது சாரி' சிந்தனையாளர்களிடையேயான அரசியல் கருத்து மோதலாகவும் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக மத அரசியலுக்கு எதிராக கேள்வி எழுப்புகிற இடதுசாரி சிந்தனையாளர்கள், 'இந்தப் பாலியல் கொடுமையில் பாதிக்கப்பட்டுள்ள இந்து மாணவிகளுக்காக குரல் கொடுக்கமுடியாத அளவுக்கு வலதுசாரியினரை எந்த தர்மம் தடுக்கிறது?' என்ற கேள்வியைத் தொடுத்துள்ளனர்.

அதேசமயம் பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களோ, 'பத்ம சேஷாத்திரி பள்ளி விவகாரத்துக்காக உணர்ச்சிவசப்பட்டு கொந்தளிப்பவர்கள், பாடகி சின்மயிக்கு நியாயம் கிடைக்கச் செய்வது குறித்து எந்தவித அக்கறையும் காட்டுவதில்லையே... ஏன்?

ஒய்.ஜி.மகேந்திரன்
ஒய்.ஜி.மகேந்திரன்

தலைநகரில் உள்ள புகழ்பெற்ற பள்ளி - வி.ஐ.பி வீட்டுக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டு என்றதும் கைது, நடவடிக்கை என பாய்ச்சல் காட்டும் அரசு நிர்வாகம், கிராமப்புறங்களில் அடித்தட்டு மக்கள் சந்தித்துவரும் பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் இதேபோன்ற அக்கறையை, நடவடிக்கையை காட்டுவதில்லையே ஏன்?

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வாகம் செய்துவருகிற ஒரு பள்ளி மீதான குற்றச்சாட்டில் இவ்வளவு வேகம் காட்டுகிற தமிழக காவல்துறை, முஸ்லிம் சமுதாயம் அல்லது கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பள்ளியில் இப்படியான குற்றச்சாட்டு எழுந்தால், இதே வேகத்தைக் காட்டுவார்களா...?' என்றெல்லாம் தர்க்க ரீதியான கேள்விகளை முன்வைக்கின்றனர்.

இப்படி 'பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்' ஜாதி, மதம், இனம், அரசியல் என பல்வேறு தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்துதி வருவதைக் கண்டு கொதிக்கும் நடுநிலையாளர்கள் 'நடைபெற்றிருப்பது மன்னிக்கமுடியாத மாபெரும் குற்றம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டம் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். மாறாக, இந்த குற்றப் பின்னணியில் ஜாதி, மத சர்ச்சைகளை முன்னிறுத்தி அரசியல் செய்வது தவறானது' என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

அண்மையில் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ள பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை குஷ்பூ, 'குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கடுமையான குற்றம். அதேசமயம், இதில் அரசியலையோ, சாதியையோ கொண்டுவரக்கூடாது' எனச் சாடியுள்ளார்.

மதுவந்தி
மதுவந்தி

இதேபோல், 'இந்தப் பாலியல் குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்' என தன்னிலை விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ள மதுவந்தியும்கூட, 'இந்தப் பிரச்னையில் ஜாதி, மதம், இனம், ப்ராமின், நான் ப்ராமின், ஷத்ரியா, வைஷியா, சூத்ரா, இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன், ஜெயின், சீக்கியம் என தப்பான அரசியலை விளையாடாதீர்கள்' எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், இதற்குப் பதிலடியாக, கடந்தகால சமூகப் பிரச்னைகளின்போது, மதுவந்தி கருத்து தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய வீடியோப் பதிவுகளையே வெட்டி, ஒட்டி ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்த நிலையில், 'தவறு செய்த ஆசிரியர் மற்றும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராத பள்ளி நிர்வாகம் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்ற கருத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ட்வீட் வெளியிட... விவகாரம் அரசியல் ரீதியாகவும் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ''பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியரை தூக்கில் போடுங்கள். ஆனால், இதற்கு முன்பு எஸ்.ஆர்.எம்.கல்லூரி உள்பட பல்வேறு கிறிஸ்தவ பள்ளி கல்லூரிகள் குறித்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வந்தபோது யாரும் நிர்வாகத்தைப் பற்றி பேசவில்லை. ஆனால், இப்போது பி.எஸ்.பி.பி பள்ளி நிர்வாகம் குறித்து மட்டும் ஏன் பேசவேண்டும்? இதற்கு முன்பு நடந்த சம்பவங்களுக்காக கனிமொழி வாய் திறந்தாரா?'' என ஆவேசமாக கேள்வி கேட்டிருக்கிறார்.

குஷ்பு - ஹெச்.ராஜா
குஷ்பு - ஹெச்.ராஜா

இப்படி எதிர்பாராத திசைகளிலிருந்தெல்லாம் எதிரும் புதிருமாக வாதங்கள் வலுக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை இணைய உலகம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பேசுகிற அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன், ''ஒரு நபர் தவறு செய்தால், அந்த நபருக்குத் தண்டனை கொடுக்கவேண்டும். அதேபோல், ஒரு நிர்வாகம் தவறு செய்திருந்தால் அந்த நிர்வாகத்துக்குத் தண்டனை கொடுக்கவேண்டும். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, 'இவர்கள் எல்லோருமே இப்படித்தான் இருப்பார்கள்' என்று கருத்து தெரிவிப்பதென்பது தவறு.

சுருக்கமாக சொன்னால், தவறு செய்தவர்கள் எந்த சமுதாயமாக இருந்தாலும் அது தவறுதான். எனவே, இந்த விஷயத்தை எந்தவொரு ஊடகமும் ஜாதி, மதம், இனம் என்பதுபோன்ற கோணங்களில் பதிவுசெய்தால் அது தவறு என்பது என் கருத்து!'' என்கிறார் சுருக்கமாக.

பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ப்ரியன் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ''ஒரு குறிப்பிட்ட பள்ளியில் இப்படியான தவறுகள் நடந்திருக்கிறது எனச்சொல்லி தமிழக காவல்துறை சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறது. அரசு நிர்வாகம் இந்த விஷயத்தில் ஜாதியைப் பார்த்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் வந்ததின் அடிப்படையில் சட்டத்தின் கடமையைச் செய்துவருகிறார்கள்.

சுமந்த் சி ராமன் - ப்ரியன்
சுமந்த் சி ராமன் - ப்ரியன்

இந்த விவகாரம் முதன் முதலில் வெளிவந்தவுடன் 'மாவட்டக் குழந்தைகள் நலக்குழு' சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விசாரணைக்காக நேரடியாக சென்றிருக்கிறது. ஆனால், பள்ளி நிர்வாகமோ அந்தக் குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்காமல், குழுவை அவமதித்து வெளியேற்றியிருக்கிறார்கள். எனவே இந்தக் குழுவினர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து காவல்துறை இந்த விவகாரத்தை விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது.

சட்ட ரீதியான இந்த நடவடிக்கையையே, 'இந்துக்களுக்கு எதிரானது குறிப்பிட்ட சாதிக்கு எதிரானது' என்றெல்லாம் பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் கருத்து தெரிவித்துவருவது சரியான அணுகுமுறை அல்ல. காவல்துறை சட்ட ரீதியிலாக தனது கடமையைச் செய்துகொண்டிருக்கும்போது, 'நாங்கள் ப்ராமினாக - இந்துக்களாக இருப்பதால், தி.மு.க ஆட்சி எங்களைத் திட்டமிட்டு பழிவாங்குகிறது' என்றெல்லாம் சொன்னால், அது பிரச்னையை திசை திருப்புகிற வாதம்.

பத்ம சேஷாத்ரி பள்ளி
பத்ம சேஷாத்ரி பள்ளி

இதேபோல், பத்ம சேஷாத்ரி பள்ளியை நிர்வகித்துவரும் குடும்பத்தினரின் ஜாதி பின்புலத்தை முன்வைத்து சமூக ஊடகத்தில் செய்யப்பட்டு வரும் கேலி, கிண்டல் விமர்சனங்களும் தவறான போக்கு. நாளையே இதேபோன்றதொரு சம்பவம் சிறுபான்மை இனத்தவர் நடத்திவருகிற பள்ளிகளில் நடைபெற்றதாக புகார் வந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத்தான் போகிறது!'' என்கிறார் தெளிவாக.