Published:Updated:

வாழைமட்டையில் கட்டப்படும் பசுக்கள்! - இந்திய வங்கதேச எல்லையில் நடக்கும் கால்நடை கடத்தல்

சத்யா கோபாலன்

கடத்தல்காரர்கள், 700-800 மீட்டர் அகலமுள்ள நதி பகுதிகளில் மட்டுமே கால்நடைகளை இறக்கிவிடுவதாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கால்நடை கடத்தல்
கால்நடை கடத்தல் ( Hindustantimes )

இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டுவருவதாக எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று அதிகாலை, சுமார் 261 கால்நடைகளை இந்தியாவிலிருந்து பங்களாதேஷுக்குக் கடத்த முயன்ற மூன்று பேரை எல்லை பாதுகாப்புப் படையினர் கைதுசெய்து, கால்நடைகளையும் ஒரு நாட்டுப் படகையும் மீட்டுள்ளனர்.

கால்நடை - மாதிரி புகைப்படம்
கால்நடை - மாதிரி புகைப்படம்

இந்தியாவின் எல்லையான மேற்குவங்கத்துக்கும் பங்களாதேஷுக்கும் இடையே ஓடும் பத்மா நதி வழியாக, நாட்டுப் படகிலும் வாழை மரங்கள் மூலமும் கால்நடைகள் கடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு கால்நடையாவது அந்த வழியாகக் கடத்தப்படுவதைப் பார்க்க முடியும் என வீரர்கள் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் பற்றிப் பேசிய பிஎஸ்எஃப் (BSF) அதிகாரி ஒருவர், “ பத்மா நதி மிகவும் அகலமானது. வெறும் படகுகளைப் பயன்படுத்தி கால்நடைகளைக் கடத்துபவர்களைத் துரத்திப் பிடிக்க முடியாது. எல்லை வீரர்களின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க, இரவு நேரங்களில் மட்டுமே இங்கு அதிகமான கடத்தல் நடத்தப்படுகிறது. அதிக தண்ணீர் ஓட்டம் மிக்க அந்த நதியில் கால்நடைகளைக் கடத்த, கடத்தல்காரர்கள் புதிய முறையைக் கையாண்டுவருகின்றனர்.

கால்நடை கடத்தல்
கால்நடை கடத்தல்

இரண்டு வாழைமரப் பட்டைகளுக்கு இடையில் பசுவின் தலை இறுக்கிக் கட்டப்படுகிறது. பின்னர், அதன் இரு கால்களும் நீந்தமுடியாத வண்ணம் கட்டப்படுகின்றன. வாழை மட்டையுடன் கட்டப்பட்ட பசுக்களைத் தண்ணீரில் அழுத்தித் தள்ளுகின்றனர். அது, தண்ணீர் செல்லும் திசையில் நகர்ந்து, அடுத்த கரையை அடைகிறது. அந்தக் கரையில் இருப்பவர்கள், பசுக்களை வெளியேற்றிவிடுகின்றனர்” என்று கூறியுள்ளார்.

” நதி விரிவடையும் இடங்களில் இந்த பிரச்னைகள் அதிகமாக நடக்கிறது. பத்மா நதி எங்கெல்லாம் மிகவும் அகலமாக உள்ளதோ அங்கெல்லாம் நதிக்குக் குறுக்கே நாங்கள் வலை கட்டி கால்நடை கடத்தலைத் தடுக்க முயற்சி மேற்கொண்டோம். ஆனால், அதையும் மீறி கடத்தல்கள் தொடர்கின்றன. கால்நடைகள் நிறைந்த லாரிகள் எல்லைப் பகுதியை அடைவதற்கு முன்பு அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக, மேற்கு வங்க காவல்துறையின் உதவியைக் கேட்டுள்ளோம்” என மேற்குவங்க எல்லைப் பகுதி செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ். குலேரியா தெரிவித்துள்ளார்.

கடத்தல் காரர்கள்
கடத்தல் காரர்கள்
ANI

‘ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகைக்கு, பங்களாதேஷில் அதிகமான கால்நடைகள் தேவைப்படும். தற்போது கடத்தப்பட்டு வரும் அனைத்து கால்நடைகளும் அடுத்த மாதம் வரும் பக்ரீத் பண்டிகைக்காகச் செல்கின்றன’ என அதிகாரிகள் கூறியுள்ளனர். எல்லை பாதுகாப்புப் படை அளித்துள்ள தகவலின்படி 2018-ம் ஆண்டு மட்டும் மேற்குவங்க எல்லையில் 38,950 கால்நடைகள் கடத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 16,350 கால்நடைகள் கடத்தப்பட்டுள்ளன. இதுவரை, பங்களாதேஷைச் சேர்ந்த 50 பேர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 70 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News & Photo Credits : Hindustantimes