காஞ்சிபுரம் மாவட்டம், பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில், வெளிமாநில மாணவர்கள், தமிழக மாணவர்கள் எனப் பலதரப்பு மாணவர்கள் கல்லூரி விடுதியிலும் வெளியிலும் தங்கிப் படித்து வருகின்றனர்.

`` பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கல்லூரியின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்துக்கு ஆதரவாக சில காவல்துறை அதிகாரிகள் உள்ளனர்“ என்கின்றனர் பொத்தேரி பகுதிவாசிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனிஸ் சௌத்ரி என்ற மாணவர், கடந்த ஜூன் 27-ம் தேதி விடியற்காலை, விடுதியில் உள்ள 5-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முந்தைய நாளில், பொன்னேரி பகுதியைச் சேர்ந்த பி.டெக் இறுதியாண்டு படித்த மாணவி அனுப்பிரியா, கல்லூரி முடிந்த கடைசிநாளில் விடுதியில் உள்ள பத்தாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இதுபோல், கடந்த மாதம் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராகவ் என்ற மாணவரும் தற்கொலை செய்துகொண்டார். மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காவல்துறையில் உள்ள சிலர், கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதால், இதுபோன்ற சம்பவங்கள் மறைக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்தநிலையில், சிபிசிஐடி-க்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவிட்டார் டிஜிபி திரிபாதி.
இதைத் தொடர்ந்து, சிபிசிஐடி எஸ்.பி மல்லிகா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினர். மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட இடங்களைப் பார்வையிட்டனர். பல்கலைக்கழக பதிவாளர், பெற்றோர்கள், மாணவர்கள், காவல்துறையினர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
சிபிசிஐடி விசாரணை குறித்துப் பேசும் பல்கலைக்கழக நிர்வாகிகள் சிலர், ``நாடாளுமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார், பாரிவேந்தர். ஆனால், திடீரென தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து, பெரம்பலூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டார். இது, அ.தி.மு.க தரப்புக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்துக்கு எதிரான வழக்குகள் கண்காணிக்கப்பட்டுவந்தன. பாரிவேந்தர் டெல்லியில் இருந்து லாபி செய்வது அ.தி.மு.க-விற்கு பிடிக்கவில்லை. பொதுவாக, சில வழக்குகளில் நீதிமன்றம் தலையிட்டு வழக்குகளை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யும். ஆனால், இந்த வழக்கை டிஜிபி-யே சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்ததில் அரசியல் நெருக்கடி இருக்கலாம்” என்கின்றனர்.

இதுகுறித்து எஸ்.ஆர்.எம் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “ மாணவர்களின் மனநலனை மேம்படுத்தும்விதமாக கல்லூரியில் சில மோட்டிவேஷன் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. சட்டப்படியாகவே அனைத்தையும் சந்திப்போம்“ என்கின்றனர்.