Published:Updated:

`எம்.பியா இருந்த போதே அப்படிச் செய்தார்; சிபிஐ எதிர்ப்பு’- ஜெகனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்குக் கோரி ஜெகன் மோகன் ரெட்டி தாக்கல் செய்த மனுவை ஹைதராபாத் சி.பி.ஐ நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

தினம் ஒரு அறிவிப்பால் எதிர்க்கட்சிகளை அலறவிட்டுக் கொண்டிருக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கட்டம் கட்டி அடிக்கிறார். தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி மக்களின் முதல்வராக வலம் வருகிறார். ஜெகனின் இமேஜ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜெகனுக்கு உறுத்தலாக இருப்பது அவர் மீது இருக்கும் சொத்துக்குவிப்பு வழக்குதான். காங்கிரஸ் ஆட்சியில் ஜெகனின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது, ஹைதராபாத்தில் வீடு கட்டும் திட்டத்துக்காக தனியார் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. அதற்குப் பிரதிபலனாக அந்த நிறுவனம் ஜெகனின் நிறுவனத்தில் ரூ.70 கோடி முதலீடு செய்தது என்பதுதான் வழக்கு. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஜெகன் பல்வேறு நிறுவனங்களில் செய்த முதலீடு தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

2011-ல் பதிவான இந்த வழக்கில் ஜெகன் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவருடன் மேலும் 13 நபர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஜெகன் பல்வேறு நிறுவனங்களில் செய்த முதலீடு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ கைப்பற்றியது. இந்த வழக்கு தொடர்பாக 2012-ம் ஆண்டு மே மாதம் ஜெகன் கைது செய்யப்பட்டார். 15 மாத சிறை வாசத்துக்குப் பிறகு 2013 செப்டம்பரில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின் காட்சிகள் மாறியன. ஆந்திர அரசியலில் இளம் தலைவராக ஜெகன் உருவெடுத்தார். தற்போது ஆந்திர மாநில முதல்வராகவும் ஆகிவிட்டார்.

`நேர்காணல் இல்லை; மதிப்பெண் அடிப்படையிலேயே வேலை'- அரசுப்பணியில் சீர்திருத்தம் செய்யும் ஜெகன்!

ஜெகன்மோகன் ரெட்டி சார்பில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணையில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஹைதராபாத் சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜெகன் தரப்பில், ``முதலமைச்சராக ஜெகனுக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் ஆஜராகி அமராவதியிலிருந்து ஹைதராபாத்துக்குப் பயணிப்பது முதல்வரின் கடமையைப் பாதிக்கும். இது தவிர ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது பாதுகாப்பு நெறிமுறை போன்ற செலவுகளுக்காக ரூ.60 லட்சம் வரை செலவாகும்”எனக் கூறப்பட்டது.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

சிபிஐ தரப்பில், ``ஜெகன் எம்.பியாக இருந்த போதே சாட்சிகளைக் கலைக்க முயன்றார். நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. ஜெகன்மோகன் ரெட்டி வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க இயலாது எனக் கூறி அவரது கோரிக்கையை சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார். இது ஜெகனுக்குச் சற்றுப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.