Published:Updated:

சிதம்பர ரகசியம்... திணறும் சி.பி.ஐ - `திகாருக்குச் செல்ல வேண்டும்' ஆர்டர் போட்ட தலைமை!

அ.சையது அபுதாஹிர்

மனஉறுதியும் புத்திக்கூர்மையும் அதிகமுள்ளவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். முதலில் அவரை மனரீதியாக உடைக்க வேண்டும் என்று சி.பி.ஐ பல வித்தைகளைக் கையாண்டுவருகிறது.

P Chidambaram
P Chidambaram ( Twitter )

`சிதம்பரம் எங்களுக்கு ரகசியமாகவே இருக்கிறார்' என்று சி.பி.ஐ தரப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து கூறிவருகிறது. `அவருக்கு ஜாமீன் வழங்கினால் எங்கள் விசாரணையில் சிக்கல் ஏற்படும்' என்று அமலாக்கத்துறை அலறிவருகிறது. இந்நிலையில், 'சிதம்பரத்துக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு வழங்கப்படும்' என்ற தகவல் டெல்லியில் உலவ ஆரம்பித்துள்ளது.

கபில்சிபில் - ப.சிதம்பரம்
கபில்சிபில் - ப.சிதம்பரம்

ஆகஸ்ட் 21-ம் தேதி சிதம்பரம் கைதுசெய்யப்பட்டவுடன் அவருக்கு ஐந்து நாள்கள் சி.பி.ஐ காவலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐந்து நாள்கள் காவல் முடிந்த பிறகு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார் சிதம்பரம். அப்போது சி.பி.ஐ, ``சிதம்பரத்திடமிருந்து எந்த உண்மையையும் எங்களால் பெற முடியவில்லை. போதிய ஒத்துழைப்பு எங்களுக்குத் தரவில்லை” என்று கூறி மீண்டும் 30-ம் தேதிவரை காவல் நீட்டிப்பைப் பெற்றது. இந்நிலையில், இன்று மீண்டும் ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவருக்கு செப்டம்பர் 2-ம் தேதிவரை சி.பி.ஐ காவல் நீட்டிக்கப்பட்டது. அதற்கு ப.சிதம்பரமும் ஒத்துழைப்பு தருவதாகச் சொல்லியிருக்கிறார். ப.சிதம்பரம் அப்படிச் சொல்லியிருக்காவிட்டால், இன்றே திகார் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று காரணம் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க விடமாமல் தடுத்த நிறுத்த வேண்டும் என்பதில் சி.பி.ஐ தரப்பு முழுமூச்சாக உள்ளது. இது ஒருபுறமிருக்க... மற்றொருபுறம் அமலாக்கத்துறையும் தங்கள் விசாரணைக்கு வாய்ப்பை எதிர்பார்த்து காத்துள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கு இனி கால நீட்டிப்பை நீதிமன்றம் கொடுக்காது என்றே தெரிகிறது. ஆனால், அவருக்கு ஜாமீன் கிடைப்பது சிரமம் என்ற நிலையே இருக்கிறது. அப்படி ஒரு நிலை வந்தால், சிதம்பரம் திகார் சிறைக்குள் அடைக்கப்படுவார். அந்த நிகழ்வைத்தான் இப்போது பி.ஜே.பி தரப்பு எதிர்பார்த்து வருகிறது.

இந்திராணி முகர்ஜி
இந்திராணி முகர்ஜி

டெல்லியில் இதுகுறித்து விசாரித்தபோது, ``சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ் வழக்கு மட்டுமல்ல... மேலும், சில வழக்குகளும் உள்ளன. ஆனால், ஐ.என்.எக்ஸ் வழக்கை அடிப்படையாக வைத்தே அடுத்தடுத்த வழக்குகளைத் தொடர்ந்து தொடுக்கவுள்ளார்கள். மனஉறுதியும் புத்திக்கூர்மையும் அதிகம் உள்ளவர் சிதம்பரம். முதலில் அவரை மனரீதியாக உடைக்க வேண்டும் என்று சி.பி.ஐ பல வித்தைகளைக் கையாண்டு வருகிறது. சிதம்பரத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டைக் கிளப்பியதுபோல, பெண்கள் விவகாரத்திலும் இவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற செய்தியை சி.பி.ஐ தரப்பே தொடர்ந்து கசியவிடுகிறது. குறிப்பாக, இந்திராணி முகர்ஜி கொடுத்த வாக்குமூலம் என்ற ஒரு செய்தி, கடந்த சில நாள்களாக அனைத்து ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது. அதில் சிதம்பரத்துக்கும் தனக்குமிருந்த தொடர்புபற்றி அவர் சொல்லியுள்ளார் என்று செய்திகள் வருகின்றன. இதுபோன்ற செய்தி சிதம்பரத்தின் மனிநிலையை முற்றிலும் குலைத்துவிட்டது.

மறுபுறம், ``சிதம்பரம் ஒருநாளாவது திகார் சிறையில் இருந்தாக வேண்டும். இது வி.ஐ.பி-யின் உத்தரவு” என்று முக்கிய பி.ஜே.பி பிரமுகர் ஒருவரின் உத்தரவை, சி.பி.ஐ தரப்பிடம் சொல்லியுள்ளது மத்திய உளவுத்துறை. இந்தத் தகவல் சிதம்பரம் தரப்புக்கும் தெரிந்துள்ளது. எந்த ஆதாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல் சி.பி.ஐ-க்கு எதிராக கடும் நெருக்கடிகளைக் கொடுத்தார். அவர் சி.பி.ஐ நீதிமன்றத்தில் தொடர்ந்து கடும் வாதம்புரிவார். என்ன நடந்தாலும் சிதம்பரம் வெளியே வந்துவிடக் கூடாது என்று உறுதியாக இருக்கிறது மத்திய அரசு. சிதம்பரத்துக்கு எதிராக மேலும் ஒரு பெண் தொழில் அதிபர் ஒருவரையும் களத்தில் இறக்கியுள்ளது சி.பி.ஐ. தமிழகத்தைச் சேர்ந்த அந்தப் பெண் தொழில் அதிபர் குறித்து சி.பி.ஐ தரப்பு சிதம்பரத்திடம் விசாரித்துள்ளது.

சிதம்பரம் கைது
சிதம்பரம் கைது
ANI

``சிதம்பரத்தின் அறிவுசார் பிம்பத்தை உடைக்க பி.ஜே.பி திட்டமிட்டுவிட்டது. 70 வயது நிரம்பிய இந்தியாவின் மூத்த அரசியல்வாதி, பொருளாதாரத்தில் மெத்தபடித்தவரை பி.ஜே.பி தரப்பு பெண்கள் விவகாரத்தை வைத்து அசிங்கப்படுத்தப் பார்க்கிறது. விரைவில் பி.ஜே.பி பிரமுகர்களின் அந்தரங்கங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவோம்” என்று கர்ஜிக்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர்.