கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், தற்போதைய மாநிலத் தலைவருமான டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், 2014 முதல் 2019 வரையில், மருத்துவக் கல்வித்துறை, நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார். அவர், மின்துறை அமைச்சராக இருந்தபோது, 2017, ஆகஸ்ட் மாதம் அவர்மீது வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பு செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும் வழக்கு பதிவுசெய்தனர். அவருக்குச் சொந்தமான மற்றும் அவருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர்கள் என கர்நாடகா, டெல்லி பகுதிகளில் 70 இடங்களில் சோதனை செய்து, கணக்கில் வராத 8.59 கோடி ரூபாய் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.

‘2013-ம் ஆண்டில் 251 கோடி ரூபாயாக இருந்த சிவக்குமாரின் சொத்து, 2018-ம் ஆண்டு 840 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது’ எனக் கூறிய சிபிஐ, 2018–ல், சிவக்குமார் ஊழல் செய்ததாக அவர் மீது வழக்கும் பதிவுசெய்தது.
2019, செப்டம்பர் மாதம், பலகட்ட விசாரணைக்குப் பிறகு, அமலாக்கத்துறை அவரைக் கைதுசெய்தது. பின்பு அவர் பெயிலில் வெளிவந்த நிலையில், இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு, காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி, 2020-ல் அவர் கர்நாடக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

2017 முதல் இதுவரை அவ்வப்போது, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை சரிபார்ப்பதுடன், அவரின் சொத்துகள் உள்ள இடங்களுக்கு வந்து நேரடியாகப் பலமுறை விசாரணை நடத்தியுள்ளனர்.
பெங்களூரில் சிபிஐ விசாரணை!
இந்த நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை பெங்களூரு பகுதியில் சிவக்குமாருக்குத் தொடர்புடையதாகக் கருதப்படும் சொத்துகள் உள்ள பகுதிகள், பெங்களூரில் சிவக்குமாரின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டுவரும் குளோபல் அகாடமி ஆஃப் டெக்னாலஜி கல்லுாரி மற்றும் சில கல்வி நிறுவனங்களுக்கு வந்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இரண்டு மாதங்களுக்கு முன்பு விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் சிபிஐ விசாரணையைத் தீவிரப்படுத்தியிருப்பதால், கர்நாடக காங்கிரஸ் வட்டாரம் பரபரப்பில் மூழ்கியிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து, சிவக்குமார் பெலகாவியில் நிருபர்களிடம், ‘‘சிபிஐ அதிகாரிகள் பெங்களூரு பகுதியிலுள்ள சில கல்வி நிறுவனங்களில் பார்வையிட்டுள்ளனர். அவர்கள் என்ன தேடுகிறார்கள் என எனக்குத் தெரியவில்லை’’ எனக் கிண்டலாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
‘தேர்தல் நெருங்கும்போது, எதிர்க்கட்சியினர் மீது ரெய்டு நடத்தி, அவர்களை ஊழல் புகார்களில் சிக்கவைப்பதை பாஜக வாடிக்கையாகக்கொண்டுடிருக்கிறது’ என அரசியல் விமர்சகர்களும், எதிர்க்கட்சியினரும் தொடர்ந்து பாஜக–வை குற்றம்சாட்டிவருகின்றனர். இந்த நிலையில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க கர்நாடக அரசியல் களத்தில் காட்டுத்தீ பரவியதுபோல, நாள்தோறும் ஏதாவதொரு பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.