Published:Updated:

`மண்ணிழந்த மனிதர்கள் என்று மனிதாபிமானம் காட்டுமா குடியுரிமை மசோதா?’ - கவிஞர் வைரமுத்து வேதனை

சமூக வலைதளங்களில் பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாகத் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து

இந்தியக் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை மக்களை மையமாக வைத்து இச்சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் இந்த மசோதாவை அறிவித்ததிலிருந்தே எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். மக்களவை உறுப்பினர் ஓவைசி, `இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது' என மசோதாவின் நகலை கிழித்தெறிந்தார். அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் தீவிரமாகத் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சமூக வலைதளங்களில் பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாகத் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

`கிழித்தெறியப்பட்ட நகல்; ஆதரவு 311!’- மக்களவையில் நள்ளிரவில் நிறைவேறியது குடியுரிமை மசோதா

இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``நம்மை அவர்கள் பிரிக்கிறார்கள். சிஸ்டம் மீதான நம்பிக்கை மெதுவாக வலுவிழக்கிறது. அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் ஆணவத்தின் மொழி இருக்கிறது. ஆனால், நம்முடைய மதச்சார்பற்ற மனநிலை வலிமையுடன் உருவானது. அது வலிமையுடனே இருக்கும்” என்று அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``எடப்பாடி பழனிசாமி எனது மாநிலத்துக்கும் மக்களுக்கும் பிரதிநிதி என்று சொல்வதையே வெட்கக்கேடாக உணர்கிறேன். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம், அவர் தன் உண்மையான நிறத்தையும் ஒருமைப்பாடு இன்மையையும் காட்டியிருக்குறார். நீங்கள் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதுவரை உங்களின் தற்காலிகப் பதவியை அனுபவித்துக் கொள்ளுங்கள்" என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து, ``இலங்கைத் தமிழ் அகதிகளை அண்டைநாட்டுக் குடிமக்களாகக் கருதாமல் 'மண்ணிழந்த மனிதர்கள்' என்று மனிதாபிமானம் காட்டுமா இந்தியக் குடியுரிமை மசோதா..?" என்று ட்விட்டரில் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

வைரமுத்து
வைரமுத்து

இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா பற்றிய உங்களுடைய கருத்துகளையும் கமென்ட்டில் பதிவு செய்யவும்.