Published:Updated:

இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் நூற்றாண்டுப் பயணம்: ஒரு மீள் பார்வை!

communist party of India
பிரீமியம் ஸ்டோரி
communist party of India

ச.பாலமுருகன், எழுத்தாளர்

இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் நூற்றாண்டுப் பயணம்: ஒரு மீள் பார்வை!

ச.பாலமுருகன், எழுத்தாளர்

Published:Updated:
communist party of India
பிரீமியம் ஸ்டோரி
communist party of India

நூற்றாண்டைக் கொண்டாடுகிறது இந்தியாவின் பொதுவுடமை இயக்கம் (communist party of India). ஆனால், முதலில் இந்த இயக்கம் தொடங்கப்பட்ட இடம் இந்தியா அல்ல, ரஷ்யா. 1920-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி அன்றைய சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியான தாஷ்கண்ட்டில் ஏழு பேர்களைக்கொண்ட குழுவாகத் தொடங்கப்பட்டது இந்த இயக்கம். இவர்களில் எல்வின் டெரெந்த், ரோஜா பில்டங்ஆப் என்கிற இருவர் வெளிநாட்டுப் பெண்கள். முகமது அலி, முகமது சபி, எம்.என்.ராய், அபானி முகர்ஜி, எம்.பி.டி.ஆச்சார்யா ஆகியோர் இந்தியர்கள். இந்திய விடுதலைப் போராட்டத்துக்காக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்திருந்த பல இஸ்லாமியர், பொதுவுடைமை இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொள்ள தயாராக இருந்தனர். அதுபோல ஒரு குழு நாடு திரும்பும்போது பெஷாவர் மற்றும் கான்பூர் சதி வழக்குகளில் சேர்க்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். பிறகு, 1925-ம் ஆண்டு சிங்காரவேலு, எஸ்.ஏ.டாங்கே, செளகத் உஸ்மானி, முஜாபர் அகமது, சபூர்ஜி செளகத்வாலா உள்ளிட்டோரை உள்ளடக்கிய பொதுவுடைமைக் கட்சி கான்பூரில் தொடங்கப்பட்டது.

ஆனாலும், அது காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தே செயல்பட்டது. அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஆங்கிலேய அரசாங்கத்துடன் மென்மையான போக்கையே கடைப்பிடித்தது. அப்படியான சூழலில் 1921-ல் அகமதாபாத் மாநாட்டில் ‘பூரண சுதந்திரம் தேவை’ என்ற முழக்கம் பொதுவுடைமையாளர்களால் முன்வைக்கப்பட்டது. உருதுக் கவிஞர் ஹர்ஷத் மோகனி அந்தக் கருத்தை முன்மொழிந்தபோது காந்தி அதை எதிர்த்தார். பிறகு, லாகூர் காங்கிரஸில் அந்தக் கருத்து காங்கிரஸ் தலைமையின் எதிர்ப்பையும் மீறி பொதுவுடைமைச் செயற்பாட்டாளர்களால் கொண்டுவரப்பட்டது. பிறகு அதுவே காங்கிரஸின் கொள்கையுமானது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாழும் சாட்சிகள் சங்கரய்யா, நல்லகண்ணு!

பொதுவுடைமைவாதிகள், கட்சிக்குள்ளும் வெளியிலும் இருந்தபடி பல்வேறு தொழிலாளர் போராட்டங்களை முன்னெடுத்தனர். குறிப்பாக, அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) முன்னெடுத்த பல்வேறு போராட்டங்கள், தொழிற்சங்கங்களுக்கு போராடும் உரிமையைப் பெற்றுத் தந்தன. தொழிற்சங்கம் மற்றும் விவசாயப் போராட்டங்களின் முன்னெடுப்பில் விடுதலைப் போராட்டத்துக்கு களப்பணியாளர்கள் பங்களிப்பு கூடுதலானது. காங்கிரஸ் தலைவர்களாக இருந்த கிருஷ்ணன் பிள்ளை, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், பி.சுந்தரய்யா, ஏ.கே.கோபாலன், ஜீவானந்தம் தொடங்கி பெரும் ஆளுமைகள் பொதுவுடைமைக் கருத்தியலில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயிருந்து செயல்பட்டார்கள். அதேபோல விடுதலைப் போராட்டத்தில் பொதுவுடைமைவாதி களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் சங்கரய்யா, நல்லகண்ணு ஆகியோரே அதற்குச் சாட்சி!

இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் நூற்றாண்டுப் பயணம்: ஒரு மீள் 
பார்வை!

ஆனாலும், கம்யூனிஸ்ட்டுகளின் சில முரண்பாடான முடிவுகள், சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்கேற்பை நீர்த்துப்போகச் செய்தன. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பொதுவுடைமைவாதிகள் ஒதுங்கி நின்றார்கள். அந்தக் காலகட்டத்தில் ஜெர்மனிக்கு எதிராக சோவியத் ரஷ்யா போர்புரிந்தது. அதன் நட்பு நாடுகளின் பட்டியலில் பிரிட்டனும் இருந்தது. இந்தியாவில் பிரிட்டனுக்கு எதிராகப் போராடினால், அது ரஷ்யாவை எதிர்ப்பதாகவே எடுத்துக்கொள்ளப்படும் என்ற காரணத்தால்தான் ஒதுங்கி நின்றது இந்தியப் பொதுவுடைமை இயக்கம்.

அதேபோல, ஜப்பானுடன் கைகோத்து பிரிட்டிஷாருக்கு எதிராக நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தின் நேரடி போரையும் அந்த இயக்கம் ஆதரிக்கவில்லை. அது ஜப்பான் ஆதரவு நிலையாக எடுத்துக்கொள்ளப்படும் என பயந்தனர் பொதுவுடைமைவாதிகள். இதெல்லாம் இந்தியாவில் பொதுவுடைமைவாதிகளுக்கு பின்னடைவையே பெற்றுத்தந்தன. பிறகு நாடு விடுதலை அடைந்தபோது கம்யூனிஸ்ட்டுகள் அந்த விடுதலையை ‘உழைக்கும் மக்களுக்கான விடுதலை இல்லை’ என்றும் கருதினர்.

போலி சுதந்திர முழக்கம்!

கம்யூனிஸ்ட்டுகள் விடுதலையின்போதும் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். ஏ.கே.கோபாலன் ஆகஸ்ட் 14-ம் தேதி கண்ணூர் சிறையில் இருந்தபோது தன் வாழ்நாளில் எதற்காகப் பாடுபட்டாரோ அந்த நாள் வரப்போகிறது எனக் காத்திருந்தார். ‘பாரத் மாதா கி ஜே... மகாத்மா காந்தி கி ஜே...’ என்ற முழக்கம் சிறைக்குள் விடிய விடிய எதிரொலித்தது. இரவெல்லாம் தூங்காமல் சிறைக்குள் இருந்தவர், மறுநாள் விடிந்ததும் சக கைதிகளிடம் உரையாடிவிட்டு, தயாராக வைத்திருந்த தேசியக்கொடியைப் பறக்கவிட்டு மகிழ்ந்தார். அதற்காக, சிறைவிதிகளை மீறியதாக அவர்மீது வழக்கும் பதியப்பட்டது.

விடுதலைக்காக உயிர்த்தியாகம், சித்ரவதை, சிறை எனப் பல தியாகங்களைச் செய்த கம்யூனிஸ்ட்டுகள், அதன் பலனை அறுவடை செய்ய முடியாமல் ‘போலி சுதந்திரம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தனர். ஏழை உழைப்பாளர் நலன் சார்ந்து அந்த முழக்கத்தை முன்வைக்கும் அரசியல் நோக்கு இருந்தபோதும், ‘போலி சுதந்திரம்’ என்று அவர்கள் முன்வைத்த முடிவால், பொதுவுடைமையாளர்கள் அடக்குமுறை, தடை என்று ஏராளமான பின்னடைவுகளைச் சந்தித்தார்கள். விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் மத நல்லிணக்கம், சகோதரத்துவம் காக்க அந்த இயக்கம் அக்கறைகாட்டியது. ஆனால், மதத்தின் அடிப்படையில் இந்தியா உடைக்கப்படுவதை எதிர்ப்பதற்குப் பதிலாக பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த கான் அப்துல் கபார்கான் போன்ற தலைவர்கள்கூட அந்தப் பிரிவினையை எதிர்த்தனர். இந்த நிலைப்பாடு, இயக்கத்தை மேலும் பலவீனப்படுத்தியது.

நல்லகண்ணு,  சங்கரய்யா
நல்லகண்ணு, சங்கரய்யா

தவிர, காந்தியை ‘ஆங்கிலேயரின் கைப்பாவை’ என்று அவர்கள் முன்வைத்த பார்வையால், காங்கிரஸ் சோஷியலிஸ்ட்டுகளான ராம் மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்ளிட்ட பலரும் கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து விலகிச் சென்றனர். அதேசமயம் மறுபக்கம் எழுச்சி ஏற்பட்டதையும் மறுப்பதற்கில்லை. ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராக ஏழை விவசாயிகள் தெலங்கானாவில் நடத்திய ஆயுதம் ஏந்திய போராட்டம், கம்யூனிஸ்ட்டுகளால் நடத்தப்பட்டது. 1952-க்குப் பிறகு தென் மாநிலங்களில் அது தேர்தலில் கூடுதலான ஆதரவைத் தேடித்தந்தது. ஒருகட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகக்கூட பார்க்கப்பட்டனர். 1957-ம் ஆண்டில் கேரளத்தில் ஆட்சியைப் பிடித்தார்கள். நிலச்சீர்திருத்தம், கல்வியை ஜனநாயகப்படுத்துதல், மின்சாரம், நீர்ப்பாசனம் என மக்கள் நலன் சார்ந்து அந்த ஆட்சி நிகழ்த்திய செயல்பாடுகள்தான், இன்று வரை கேரளத்தில் ஆளும்கட்சியாக அதை வைத்துள்ளன.

பிளவுபட்ட கம்யூனிஸ்ட்டுகள்!

ஆனால், தத்துவம் சார்ந்து அரசாங்கத்தில் பங்கேற்பது தொடர்பாக அந்தக் கட்சியில் நிகழ்ந்த விவாதங்கள், சீனாவை ஆதரிக்கும் போக்கிலிருந்த கருத்து வேறுபாடுகள், சீனா, இந்தியாவின்மீது படையெடுத்த பிறகு நிகழ்ந்த விவாதங்களால் 1964-ம் ஆண்டில் சி.பி.ஐ (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) மற்றும் சி.பி.எம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட்) என்று கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. மாவோயிஸ்ட் இயக்கம், நக்சல்பாரி இயக்கம் என அடுத்தடுத்து நடந்த தொடர் பிளவுகள் பொதுவுடைமை இயக்கத்தை மேலும் பலவீனப்படுத்தின. மேற்குவங்கத்தில் நீண்டகால ஆட்சியை வழங்கிய சி.பி.எம்., தனது பொதுவுடைமைப் பண்பாடு சார்ந்த பதிவுகளை ஆழமாகப் பதிக்கத் தவறியது.

தொடக்கத்தில் அந்த இயக்கம் நிலச்சீர்திருத்தம் மூலம் தனது செல்வாக்கைத் தக்கவைத்தபோதும், நெடிய ஆட்சியில் மேற்குவங்கத்தின் வாழ்நிலையைத் தலைகீழாய் மாற்றிவிடவில்லை. ஒருகட்டத்தில் தொழில் மாநிலமாக மாற்ற அந்த இயக்கம் அவசர கோலத்தில் தொழிற்சாலைக்கு நிலங்களை ஆர்ஜிதம் செய்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் நந்திகிராம், சிங்கூர் என நடத்திய போராட்டங்கள், கட்சியின் கெட்டித்தட்டிய தன்மை எனப் பல காரணிகளால் தனது இருப்பை அங்கு சி.பி.எம் இழந்தது. இன்றைக்கு அது செல்வாக்கு செலுத்திய பகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது. அதே நிலைதான் திரிபுராவிலும்.

கடந்த 2001-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் இந்திரஜித் குப்தா ‘ஃப்ரென்ட்லைன்’ இதழுக்கு வழங்கிய பேட்டியில், `கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்தியச் சூழலை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை’ என்று குறிப்பிட்டார். மேலும், ‘ஆயிரம் ஆண்டுகளாக சாதி இருந்துவருகிறது. கம்யூனிஸ்ட்டுகள் தங்களை சாதிகளுக்கு மேலானவர்கள் எனக் கருதினர். எனவே, சாதியப் பிரச்னை அவர்களுக்குப் பிரச்னையாகவே தெரியவில்லை. ஆனால், சமூகமோ சாதியாக உள்ளது. போனஸ், ஊதிய உயர்வுக்கு எங்களை ஆதரிக்கும் தொழிலாளி, தேர்தலில் எங்களை விட்டுவிட்டு சொந்த சாதிக்காரனுக்கு வாக்களிப்பது நடக்கிறது’ என்று கூறியுள்ளார்.

என்ன செய்ய வேண்டும்?

பெரியாரையும், அம்பேத்கரையும், அவர்கள் முன்னெடுத்த அரசியலையும் இப்போதாவது பொதுவுடைமை இயக்கம் ஏற்றுக்கொண்டிருப்பது, இந்தியச் சூழலை வேறு கோணத்தில் அறிய உதவும். ஆனால், டெல்லியிலிருந்து திணிக்கப்படும் செயல்திட்டங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுவதைக் காட்டிலும், மாநிலத்தின் மனஉணர்வுகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை அவசியம். அது மக்களிடமிருந்து தனிமைப்படுவதிலிருந்து தடுக்க உதவும்.

2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 60 இடங்களைப் பிடித்த இடதுசாரிகள், 2019-ம் ஆண்டு தேர்தலில் வெறும் ஐவராகச் சுருங்கி உள்ளனர். தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை இது பெரும்பின்னடைவு. ஆனால், இன்றைக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடிகள், ஏழை மக்களின் உரிமைகளுக்காக பெரும்திரளாகப் போராடி, அவர்களுக்கான குரலாக ஒலிப்பது கம்யூனிஸ்ட்டுகளின் குரல் மட்டுமே. தோல்விகளால் அவர்கள் சோர்ந்துவிடவில்லை. ஜனநாயகக் கருத்தாக்கம், அதன் உரிமைகள் மறுக்கப்பட்டு மதநல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ள இன்றைய சூழலில் இவர்களின் பங்களிப்பு சமூகத்துக்கு அதிமுக்கியத் தேவை.

ஜனநாயகச் சமூகத்தில் பொதுவுடைமை யாளர்களின் பங்களிப்பு நேர்மறையான நிகழ்வுகளையே ஏற்படுத்தியுள்ளது. கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத சட்டமன்றத்தை, அவர்கள் பங்கேற்ற பழைய சட்டமன்ற விவாதங்களுடன் ஒப்பிட்டால் இது புரியும். அவர்கள் சார்ந்த அரசியல் அறமும் மக்களால் மதிக்கப்படுகிறது. ஆனாலும் அவற்றை வாக்குகளாக மாற்றும் வழிகளில் அவர்கள் மக்களைச் சென்றடையவில்லை.

இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாட்டில், அவர்களை கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் அரசியலுக்குள் கொண்டுவருவதும், புதிய சிந்தனை மற்றும் செயல்பாட்டுக்கு வழிவிடுவதும், அதற்கான தளங்களை உருவாக்குவதும் மிக அவசியம். எல்லாவற்றுக்கும்மேலாக அனைத்து கம்யூனிஸ்ட்டுகளும் முரண்பாடுகளைப் புறந்தள்ளி ஒரு புள்ளியிலாவது இணைய வேண்டியது காலத்தின் தேவை. கூட்டுச் செயல்பாடுகளில் பெரியண்ணன் மனப்பான்மையைக் கைவிடுவதும் அவசியம். சோர்வற்ற செயல்பாடுகளும் தொலைநோக்குப் பார்வையுமே, நூற்றாண்டு கண்ட இயக்கம் மீண்டும் வீறுகொண்டு எழ உதவும்.