Published:Updated:

`பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவரப்படுமா?’ - நிர்மலா சீதாராமன் பதில்

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் வரி குறைப்பு குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இன்றைய நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாயைக் கடந்தும், இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் வரலாறு காணாத வகையில் 100 ரூபாயைக் கடந்தும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த விலை ஏற்றம் இந்தியா முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர் விலையேற்றத்தால் சாமானியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்

இந்தநிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்துக்கு வந்திருக்கிறார். இன்று சென்னையில் 2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து தொழிலதிபர்கள், வியாபாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். அப்போது, பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.

அந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், ``இது ஒரு தர்மசங்கடமான கேள்வி. பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்ற பதிலைத் தவிர்த்து, வேறு எந்த பதிலும் யாரையும் திருப்திப்படுத்தாது. எப்படிப்பட்ட உண்மையான விளக்கங்களை நான் கொடுத்தாலும், `கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கிறேன், தட்டிக்கழிக்கிறேன்’ என்றுதான் கூறுவார்கள்.

யாராலும் எந்த பதிலும் விளக்கமும் கொடுத்து யாரையும் திருப்திப்படுத்த முடியாது. காரணம், நாம் அனைவரும் இந்தியர்கள். நானும் இந்தியர்தான். அதனால் எனக்கு நன்றாகவே தெரியும். நான் எந்த பதில் சொன்னாலும், `அது எல்லாம் இருக்கட்டும்; இப்போது பெட்ரோல் விலை குறைப்பீர்களா, இல்லையா' என்பது மட்டுமே எதிர்க் கேள்வியாக வரும்” என்று அவர் கூறியதும், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

மேலும்,``அதையும் தாண்டி நீங்கள் நான் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தீர்களானால் நான் கண்டிப்பாகச் சொல்கிறேன். பெட்ரோல், டீசல் வரி குறைப்பு குறித்து, மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயம் செய்கின்றன. நான் ஒரு மத்திய அமைச்சர் மட்டுமே" என்று கூறினார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தொடர்ந்து பேசியவர்,``இந்த விலை உயர்வு எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவருவது குறித்து ஜி.எஸ்.டி குழுதான் முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கொண்டுவரப்பட்டால் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் ஒரே விலையில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது" என்று பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு