அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

நெருக்கும் வழக்குகள்.. சிக்கலில் ஐவர்... திணறும் அ.தி.மு.க!

அ.தி.மு.க.  முன்னாள் அமைச்சர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்

ஆட்சியைத் தக்கவைப்பதற்கான அந்த முயற்சியில், கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா மூலமாக அந்த ‘பரிசுப்பொருள்களை’ விஜயபாஸ்கர் தருவித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது

கட்சி அலுவலகம் தொடங்கி சின்னம், பதவி நியமனங்கள், தீர்மானங்கள் எனச் சகலத்திலும் வழக்குகளில் சிக்கி அல்லாடுகிறது அ.தி.மு.க. போதாக்குறைக்கு, அந்தக் கட்சியின் சீனியர் தலைவர்களைக் குறிவைத்து மத்திய, மாநில அரசுகள் வழக்குகளைப் பாய்ச்ச ஆரம்பித்திருக்கின்றன. முன்னாள் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோரை மத்திய அரசு குறிவைத்து அம்பு எய்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர்மீது தமிழ்நாடு அரசு வழக்குகளை வீசியிருக்கிறது. இந்த ஐவருக்கும் வைக்கப்பட்டிருக்கும் குறி, அரசியல்ரீதியாகப் பல பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது. “இதில் தி.மு.க - பா.ஜ.க இரு தரப்புமே வெவ்வேறுவிதமான அரசியல் கணக்குகளைப் போட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க-வை முடக்க வேண்டுமென்பதுதான் இருவருக்குமே பிரதான நோக்கம். அதைக் கச்சிதமாக முடிக்க ஆதாரங்களைத் திரட்டுகிறார்கள்” என்கிறது விவரமறிந்த சீனியர் காவல்துறை அதிகாரிகள் வட்டாரம். பல அரசியல் கணக்குகளோடு நகரும் இந்த ‘அரசியல் வெட்டாட்டம்’ தொடர்பாக நாமும் விசாரித்தோம்...

நெருக்கும் வழக்குகள்.. சிக்கலில் ஐவர்... திணறும் அ.தி.மு.க!

தடதடத்த ரெய்டு... சிக்கலில் காமராஜ்!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த ஆர்.காமராஜ் மீதும், அவரின் மகன்கள் இனியன், இன்பன் உள்ளிட்ட ஆறு பேர் மீதும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. கடந்த ஜூலை 8-ம் தேதி, காமராஜ் தொடர்புடைய 49 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் தடதடத்தன. 41 லட்சம் ரூபாய் பணம், 963 சவரன் நகைகளை அள்ளிக்கொண்டு போனார்கள் அதிகாரிகள். இந்த நிலையில்தான், காமராஜை வருமான வரித்துறையும் குறிவைத்திருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்த வருமான வரித்துறை அதிகாரிகள்.

நம்மிடம் பேசிய வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், “பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளுக்குப் பொருள்களை சப்ளை செய்யும் சில நிறுவனங்களின் மீது, கடந்த நவம்பர் 23-ம் தேதி திடீர் ரெய்டு நடத்தியது வருமான வரித்துறை. ரெய்டில் சிக்கிய தண்டையார்பேட்டை நிறுவனம், உணவுத்துறை அமைச்சராக காமராஜ் இருந்தபோது, பருப்பு சப்ளையில் பல டெண்டர்களை எடுத்திருந்தது. அப்போது நடந்த சில பரிமாற்றங்கள் குறித்து, ஆதாரங்களைத் திரட்டி யிருக்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். அதன் அடிப்படையில்தான், சேலம் அ.தி.மு.க பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான பருப்பு குடோனில், நவம்பர் 27-ம் தேதி நள்ளிரவு திடீர் சோதனை நடத்தியது வருமான வரித்துறை. அங்கேயும் சில ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன. இதையெல்லாம் வைத்து காமராஜுக்கு எதிராக நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது வருமான வரித்துறை. இந்தப் பாய்ச்சல் அவரோடு நின்றுவிடவில்லை.

குட்கா வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது சி.பி.ஐ. தனக்கெதிராக வழக்கு வேகமெடுப்பதைத் தொடக்கத்திலேயே புரிந்துகொண்ட விஜயபாஸ்கர், கடந்த செப்டம்பர் மாதம் தமிழகம் வந்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்துப் பேசினார். அதேபோல, ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான வழக்கு விசாரணைக்காக டெல்லிக்குச் சென்றவர், மத்திய இணையமைச்சர் எல்.முருகனையும் சந்தித்தார். ஆனாலும், டெல்லியில் அவருக்கு ஆதரவாக ‘கிரீன் சிக்னல்’ விழவில்லை. இந்தச் சூழலில்தான், அவரை மேலும் சிக்கவைக்க கேரள அமலாக்கத்துறை மூலமாகச் சில முயற்சிகள் நடக்கின்றன. அது தொடர்பாக விசாரித்துப் பாருங்கள்” எனப் பொடிவைத்தனர்.

ஷர்மிளா, விஜயபாஸ்கர்
ஷர்மிளா, விஜயபாஸ்கர்

72 கிலோ ‘தங்க’ விவகாரம்... பா.ஜ.க கையிலெடுக்கும் ‘ஷிண்டே’ ஆயுதம்!

கூவத்தூர் எபிசோட் காலத்தில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்குச் சில ‘பரிசுப்பொருள்கள்’ வழங்கப்பட்டன. ஆட்சியைத் தக்கவைப்பதற்கான அந்த முயற்சியில், கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா மூலமாக அந்த ‘பரிசுப்பொருள்களை’ விஜயபாஸ்கர் தருவித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. 2018 காலகட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த விவகாரத்தையும் சேர்த்து அமலாக்கத்துறை தோண்டித் துருவுவதாகச் சொல்கிறார்கள் அ.தி.மு.க-வின் சீனியர் தலைவர்கள்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் சிலர், “2017 காலகட்டத்தில், ஷர்மிளா மூலம் கொச்சியிலுள்ள ஒரு ‘மகிழ்ச்சியான’ பெரிய நிறுவனத்துடன் தொடர்பை வளர்த்துக்கொண்டார் விஜயபாஸ்கர். அப்போதைய அ.தி.மு.க மேலிடத்தின் பெயரைச் சொல்லி, அந்த நிறுவனத்திடமிருந்து பல நூறு கிலோ ‘மஞ்சள்’ வாங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்களும் இந்த ‘மஞ்சள்’ பிசினஸில் ஈடுபட்டார்கள். இது தொடர்பாக கொச்சி அமலாக்கத்துறை விசாரித்தபோதுதான், ‘72 கிலோ அளவில், என்னுடைய சொந்தத் தங்கத்தை விஜயபாஸ்கரிடம் அளித்திருக்கிறேன். அ.தி.மு.க தலைவர்கள் பெயரைச் சொல்லி என் மூலமாகப் பல விஷயங்களை விஜயபாஸ்கர் முடித்துக்கொண்டார்’ என வாக்குமூலம் அளித்திருக்கிறார் ஷர்மிளா. 72 கிலோ தங்கப் பரிமாற்றம் தொடர்பாக சில ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கிறார். இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கும் அமலாக்கத்துறை, விஜயபாஸ்கரை மட்டுமல்ல, அவர் மூலமாக துபாய் வரை ‘மஞ்சள்’ பிசினஸ் செய்த சில அ.தி.மு.க தலைவர்களுக்கும் குறிவைத்திருக்கிறது.

இந்த நடவடிக்கைகள் எல்லாமே, ஷிண்டே மாடலில் ஒரு ஆபரேஷனை அ.தி.மு.க-வுக்குள் நடத்துவதற்குத்தான். மகாராஷ்டிராவில் மிகப்பெரிய ஒப்பந்ததாரராக வலம்வந்தவர் யஷ்வந்த் ஜாதவ். சிவசேனா கட்சிக்கான நிதி விவகாரங் களைக் கவனித்தவர். அவர் மனைவி யாமினியைக் கட்சியின் எம்.எல்.ஏ-வாக ஆக்கியது சிவசேனா. அந்தக் கட்சியை முடக்க முடிவெடுத்த பா.ஜ.க., முதலில் யஷ்வந்த்தைத்தான் குறிவைத்தது. அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகள் பறந்தன. ‘தேர்தல் ஆணையத்தில், யாமினி தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் பல முறைகேடுகள் இருக்கின்றன. 15 கோடி ரூபாய் அளவில், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்திருக்கிறார். அதனால், அவரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்’ என வருமான வரித்துறையிடமிருந்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

அடுத்த அடியாக, யஷ்வந்த் தொடர்புடைய 41 சொத்துகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டன. ஒருகட்டத்தில் டெல்லியிலிருந்து அடி ஓவராக விழுந்தவுடன், பா.ஜ.க-வின் திட்டத்துக்கு அடிபணிந்தார் யஷ்வந்த். சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே கிளர்ச்சியில் ஈடுபட்டபோது, ஷிண்டே அணிக்குத் தாவினார் யஷ்வந்த். அவர் மனைவியும் அணி தாவி, உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்தார். அதேநிலையைத்தான் அ.தி.மு.க-வுக்குள்ளும் வரவழைக்கப் பார்க்கிறது பா.ஜ.க.

‘இரட்டை இலைச் சின்னமே முடங்கினாலும் சரி, பா.ஜ.க-வுக்குக் கட்டுப்படக் கூடாது’ என்பதில் தீவிரமாக இருக்கிறார் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சமீபத்தில் அமித் ஷா, சென்னைக்கு வந்திருந்தபோது அவரை எடப்பாடி சந்திக்கவில்லை. ‘அவர் கட்சி வேறு, எங்கள் கட்சி வேறு. அமித் ஷாவைச் சந்திக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை’ என்று பேசினார். பா.ஜ.க கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல், அ.தி.மு.க அவ்வப்போது திமிறி எழுவதை டெல்லி ரசிக்கவில்லை. அதனால்தான், ஆளுநரைப் பார்த்து தி.மு.க-வுக்கு எதிராக எடப்பாடி புகாரளித்த அன்றே, விஜயபாஸ்கர், ரமணா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த தகவலைக் கசியவிட்டது சி.பி.ஐ. அ.தி.மு.க தலைவர்களைக் கட்டுப்படுத்திவைக்கவும், தேவைப்பட்டால் ‘ஷிண்டே மாடலில்’ ஆபரேஷனை நடத்தி அ.தி.மு.க-வை உடைத்தெறியவும் இந்த வழக்குகள், ரெய்டுகளைப் பயன்படுத்துகிறது பா.ஜ.க. இதெல்லாமே ஒரு தொடக்கம்தான்” என்றனர் விவரமாக.

நெருக்கும் வழக்குகள்.. சிக்கலில் ஐவர்... திணறும் அ.தி.மு.க!

“உங்க பக்கம் வந்துடவாண்ணே?!” - சிக்கலில் மாஜிக்கள்

அ.தி.மு.க-வை முடக்க பா.ஜ.க தரப்பிலிருந்து காய்கள் வேகமாக நகர்த்தப்படும் நிலையில், அதற்குச் சற்றும் சளைக்காமல் தி.மு.க-வும் ஆட்டத்தை ஆட ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராகப் பலமுறை லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அடுத்த அஸ்திரமாக, அரசு வேலை வாங்கித் தருவதில் வேலுமணி தரப்பு மோசடி செய்ததாக ஒரு குற்றச்சாட்டை விசாரணைக்காகக் கையிலெடுத்திருக்கிறது தி.மு.க அரசு.

நம்மிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சிலர், “வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் தன்மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார் வேலுமணி. அப்போது, வேலுமணிக்கு எதிராகப் பல்வேறு ஆதாரங்களை அறப்போர் இயக்கமும், லஞ்ச ஒழிப்புத்துறையும் நீதிமன்றத்தில் அடுக்கியிருக்கின்றன. வேலுமணி மீதான புகார்களை விசாரிப்பதா, கைவிடுவதா என்பதை விரைவில் தீர்ப்பளிக்கவிருக்கிறது நீதிமன்றம். இந்தச் சூழலில்தான், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, வேலுமணியின் கார் ஓட்டுநர் சுதாகர் என்பவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்தப் புகாரில், வேலுமணி மீது நேரடியாகக் குற்றச்சாட்டு எழவில்லை. ஆனாலும், அவருக்கு நெருக்கடிதான். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது இது போன்ற ஒரு வேலைவாய்ப்பு மோசடி வழக்குதான் உச்ச நீதிமன்றம் வரை விசாரணைக்குப் போயிருக்கிறது. அதே போன்ற சிக்கல் வேலுமணிக்கும் வரலாம்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைத்தது தி.மு.க அரசு. அந்த கமிட்டி, தனது 200 பக்க அறிக்கையைக் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியது. இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து, தி.மு.க அரசு எப்போது வேண்டுமானாலும் வேலுமணிக்குக் குடைச்சலைக் கொடுக்கலாம். ஆவினில் வேலை வாங்கித்தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு நடைபெறுகிறது. இது தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். இந்த வழக்கு, கடந்த நவம்பர் 25-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘45 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என நீதிமன்றத்தில் உறுதியளித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இப்படி, முன்னாள் மாஜிக்களுக்கு எதிரான வழக்குகளில் விறுவிறுவென வேகம் காட்டப்படுகின்றன. அரசியல்ரீதியாக முன்னாள் அமைச்சர்கள் முடங்கியிருக்க வேண்டும் என ஆளும்தரப்பு விரும்புவது வழக்கமானதுதான். அதுதான் தி.மு.க விஷயத்திலும் நடக்கிறது” என்றனர்.

முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கடி கொடுப்பது ஒருபுறம் தீவிரமாகியிருக்கும் நிலையில், கொடநாடு வழக்கு விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டவும் சி.பி.சி.ஐ.டி-யை முடுக்கிவிட்டிருக்கிறதாம் ஆளும் தரப்பு. அடுத்தடுத்த வழக்குகளால் அ.தி.மு.க தலைவர்கள் திணற ஆரம்பித்திருக்கிறார்கள். ஆந்திராவை ஒட்டிய மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், இந்நாள் அமைச்சரைச் சமீபத்தில் தொடர்புகொண்டிருக்கிறார். “இந்த வயசுல, கேஸ் ஜெயிலுனு போக முடியாதுண்ணே. உடம்பும் சரியில்லை. என் கட்சியிலயும் எனக்கு ஆதரவா யாரும் இல்லை. பேசாம நான் உங்க பக்கம் வந்துடுறேன். இருக்குற சொத்தைக் காப்பாத்திக்கிட்டாலே போதும்” என்று தன் அரசியல் பாதுகாப்புக்காக டீல் பேசியிருக்கிறார். தி.மு.க மேலிடத்திடமிருந்து எந்த பதிலும் வராததால், அந்த முன்னாள் அமைச்சர் இன்னும் ‘திக் திக்’கில்தான் இருக்கிறாராம்.

நெருக்கும் வழக்குகள்... திணறும் அ.தி.மு.க!

அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் பேசினோம். “பொதுவெளியில், ‘அ.தி.மு.க பலமாக இருக்க வேண்டும்’ என தி.மு.க பேசுகிறது. ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்புதுறையை ஏவி எங்களை முடக்கப் பார்க்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் பல துறைகளுக்கு அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் மீது இதுவரை ஒரு வழக்குகூட போடவில்லையே... அரசியல்ரீதியாக தி.மு.க-வுக்குக் குடைச்சல் கொடுப்பவர்கள் மட்டுமே குறிவைக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், கூட்டணி தர்மத்தின் அடிப்படையிலாவது பா.ஜ.க எங்களுக்குப் பாதுகாப்புக் கரம் நீட்டியிருக்க வேண்டும். தி.மு.க ஆட்சியில் நடைபெற்றுவரும் ஊழல்களைப் பலமுறை டெல்லிக்குப் புகாராக அனுப்பியிருக்கிறோம். ஆளுநரிடமும் அளித்திருக்கிறோம். எங்கேயெல்லாம் டீல் பேசி முடிக்கப்படுகிறது, யார் மூலமாகப் பரிவர்த்தனை நடக்கிறது என்பதெல்லாம் டெல்லிக்கு அத்துபடி. ஆனால், தி.மு.க மீது கை வைக்காமல், அ.தி.மு.க தலைவர்களைக் குறிவைத்தே வருமான வரித்துறை ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. அடுத்தடுத்த வழக்குகளால், அ.தி.மு.க-வைத் திணறடிக்கப் பார்க்கிறார்கள். எங்களைப் பழிவாங்குவதில் தி.மு.க-வும், பா.ஜ.க-வும் ஒரே கோட்டில்தான் நிற்கின்றன. அரசியல்ரீதியாக எங்களை முடக்கிவிட்டால், களத்தில் எதிரியே இருக்க மாட்டார்கள் என தி.மு.க நினைக்கிறது. எங்களை அழித்து, எங்கள் தலைவர்களை மிரட்டி தங்கள் பக்கம் கொண்டுவந்து, கட்டமைப்பை வளர்த்துக்கொள்ள பா.ஜ.க திட்டம் போடுகிறது. அவர்கள் போடும் வழக்குகளைச் சமாளிக்க, கட்சி சீனியர்கள், மூத்த வழக்கறிஞர்களுடன் எடப்பாடி சமீபத்தில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். சில மாதங்கள் எங்களை அமைதி காக்கக் கூறியிருக்கிறார். அதற்குள், எங்களை வழக்குகளால் சுற்றி நெருக்கிவிடுவார்கள்போல” என்றனர்.

அ.தி.மு.க-வை வழக்குகள் சூழ்வது ஒன்றும் புதிதல்ல. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பல்வேறு வழக்குகள் அந்தக் கட்சியைத் திணறடித்திருக்கின்றன. ஆனால், சமீபத்தில் போடப்படும் வழக்குகள் அந்தக் கட்சியின் அடிவேரையே அசைத்துப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றன. ரெய்சினா ஹில் - செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் இருமுனைத் தாக்குதலில் எம்.ஜி.ஆர் மாளிகை, கடுமையாக ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது. சமாளித்து மீண்டெழுமா அ.தி.மு.க?