Published:Updated:

இத்தாலி உலக அமைதி மாநாட்டில் பங்கேற்க மம்தாவுக்கு அனுமதி மறுப்பு! -அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா?

``மோடி என்மீது நீங்கள் பொறாமைப்படுகிறீர்கள்! மத்திய அரசின் பழிவாங்கும் குணம், போட்டி பொறாமையால்தான் எனக்கு இந்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது" என மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இத்தாலியில் நடைபெறவிருக்கும் உலக அமைதி மாநாட்டில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அனுமதி மறுத்திருக்கிறது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும், மோடிக்கு தன்மீது இருக்கும் பொறாமையின் வெளிப்பாடு என்றும் மம்தா கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

உலக அமைதி மாநாடு:

இத்தாலி தலைநகர், ரோமில் `சான்ட் எஜிடியோ' (Community of Sant'Egidio) எனும் கத்தோலிக்க அமைப்பு, வரும் அக்டோபர் மாதம் 6, 7 ஆகிய தேதிகளில் `உலக மத அமைதி மாநாட்டு’ நடத்த ஏற்பாடு செய்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலகெங்கிலுமுள்ள முக்கியமான 500 மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சான்ட் எஜிடியோ
சான்ட் எஜிடியோ
Community of Sant'Egidio official page

குறிப்பாக, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, போப் பிரான்சிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, சான்ட் எஜிடியோ அமைப்பின் தலைவர் பேராசிரியர் மார்கோ இம்பாக்லியாஸ்ஸோ (Marco Impagliazzo) அழைப்பு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

மம்தாவுக்கு அழைப்பு:

கடந்த ஜூலை மாதம் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், `` நீங்கள் சமூகநீதிப் பணிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் அமைதியான ஆட்சியை நடத்திவருகிறீர்கள். உங்களின் அர்ப்பணிப்பும், பெருந்தன்மையான செயல்பாடுகளும் பின்தங்கிய மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக உணர்கிறேன். உங்களின் செயல்பாடுகளும், சான்ட் எஜிடியோ அமைப்பின் செயல்பாடுகளும் ஒத்திருக்கின்றன. எனவே, இந்த மாநாட்டில் நீங்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்" எனப் பேராசிரியர் மார்கோ தெரிவித்திருந்தார்.

பேராசிரியர் மார்கோ இம்பாக்லியாஸ்ஸோ
பேராசிரியர் மார்கோ இம்பாக்லியாஸ்ஸோ
Community of Sant'Egidio official page

மம்தா பானர்ஜியும் இந்த அழைப்பை ஏற்று இத்தாலி மாநாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தார். மாநில முதல்வர்கள் வெளிநாட்டில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள மத்திய அரசின் அனுமதியைப் பெற்றாக வேண்டும் என்பதால், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி வேண்டி விண்ணப்பித்தார் மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மத்திய அரசின் அனுமதி மறுப்பு:

இந்தநிலையில், மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம், ``ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி, உலகத் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் கலந்துகொள்ளும் அளவிலான அரசுப் பதவியை வகிக்கவில்லை" என்று கூறி மம்தா இத்தாலி செல்வதற்காகக் கேட்ட அனுமதியை மறுத்துவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2021 TIME100:`மோடி, மம்தா, தாலிபன் தலைவர் முல்லா' உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் யார் யார்... ஏன்?

``மோடிக்கு என்மீது பொறாமை!’’

இது குறித்து, பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜி, அங்கு நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது, ``ரோமில் நடக்கும் உலக அமைதி மாநாட்டில் பங்கேற்க நான் அழைக்கப்பட்டேன். இதில் கலந்துகொள்ள இத்தாலி அரசு எனக்குச் சிறப்பு அனுமதியையும் வழங்கியது. ஆனால், மத்திய அரசோ எனக்கு அனுமதி மறுத்துவிட்டது" எனக் குற்றம்சுமத்தினார்.

மம்தா, மோடி
மம்தா, மோடி

மேலும், ``ஏன்... ஒரு முதலமைச்சர் செல்வது சரியில்லையா? நான் எங்கு செல்ல முயன்றாலும் தடை போடுகிறார்கள், ஆனால் அவர்கள் மட்டும் உலகம் சுற்றுகிறார்கள். உங்களால் என்னைத் தடுக்க முடியாது. நான் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல விரும்பவில்லை. ஆனால், இந்த அழைப்பு தேசத்தின் கௌரவத்தைப் பற்றியது. மோடி, இந்துக்களைப் பற்றி பேசிக்கொண்டேயிருக்கிறார். நானும் ஓர் இந்துப் பெண்தானே, என்னை ஏன் இந்தக் கூட்டத்துக்கு அனுமதிக்கவில்லை? மோடி என்மீது நீங்கள் பொறாமைப்படுகிறீர்கள்! மத்திய அரசின் பழிவாங்கும் குணம், போட்டி பொறாமையால்தான் எனக்கு இந்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது" என ஆதங்கத்தோடு கூறினார்.

தேபாங்ஷு பட்டாச்சார்யா தேவ்
தேபாங்ஷு பட்டாச்சார்யா தேவ்

மோடியைக் கேள்வி கேட்கும் தேபாங்ஷு

மம்தாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தேபாங்ஷு பட்டாச்சார்யா தேவ் (Debangshu Bhattacharya Dev) தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருகிறார். அதில், `` மம்தா பானர்ஜி ரோம் செல்லவதற்காகக் கேட்ட அனுமதியை மத்திய அரசு மறுத்திருக்கிறது. ஏற்கெனவே இதேபோல், மம்தா சீனா செல்வதற்கு கேட்ட அனுமதியையும் மறுத்தது. அந்த முடிவை, சர்வதேச உறவுகளையும், இந்தியாவின் நலன்களையும் கருத்தில்கொண்டு நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனால், இத்தாலி செல்வதற்கு உங்களுக்கு என்ன பிரச்னை மோடி ஜி... மேற்கு வங்கத்திடம் உங்களுக்கு என்னதான் பிரச்னை?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து. மத்திய அரசு இதுவரையில் பதிலளிக்கவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் `அரசியல் உள்நோக்கம்’ கொண்டே மம்தாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகக் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு