முன்னதாக, நேதாஜியின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும்விதமாக ஜனவரி 23 முதலே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், `நேதாஜியின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில், நேதாஜிக்கு கிரானைட் சிலை அமைக்கப்படும்’ என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

மேலும், `இது நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்' என்றும் மோடி கூறியிருக்கிறார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக, இந்தியா கேட்டில் ஒளிர்ந்துவந்த அமர் ஜவான் ஜோதி இடமாற்றம் செய்யப்பட்டு, தேசிய போர் நினைவுச்சின்னத்துடன் இணைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த அறிவிப்பின்படி, இன்று பிற்பகல் 3:30 மணியளவில் இந்தியா கேட்டிலிருந்து அமர் ஜவான் ஜோதி இடமாற்றம் செய்யப்படுகிறது. 1971-ம் ஆண்டு போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக, 50 ஆண்டுகளாக அணையாமல் ஒளிர்ந்துவந்த அமர் ஜவான் ஜோதியை இடமாற்றுவது குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், அதற்கு விளக்கம் தரும்விதமாக இந்தியாவுக்காக உயிர் நீத்த ஒட்டுமொத்த வீரர்களையும் ஒன்றாக நினைவுகூரும்விதமாகவே அமர் ஜவான் ஜோதியை, தேசிய போர் நினைவுச்சின்னத்துடன் இணைப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.