Published:Updated:

நேரு அருங்காட்சியக் குழுவிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் நீக்கம்!- மத்திய அரசு திடீர் நடவடிக்கை

டெல்லியில் நேரு நினைவியல் அருங்காட்சியகத்தின் குழுவிலிருந்து காங்கிரஸ் தலைவர்களை நீக்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள நேரு நினைவியல் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு தன்னாட்சி நிறுவனம். இது 1964 -ம் ஆண்டில், முதல் இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் மறைவிற்குப் பிறகு தொடங்கப்பட்டது. இது நவீன மற்றும் சமகால வரலாற்று ஆய்வுகளுக்கும் கல்வி ஆராய்ச்சிகளுக்கும் உதவுகிறது. மேலும் நேருவைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய களஞ்சியமாகவும் விளங்குகிறது .

நேரு அருங்காட்சியகம்
நேரு அருங்காட்சியகம்

தற்போது மத்திய அரசு `நேரு நினைவியல் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் உறுப்பினர்களை மாற்றி அமைத்துள்ளது. இதில் முன்னர் உறுப்பினர்களாக இருந்த காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கரண் சிங்க் ஆகியோரை நீக்கியுள்ளது. தொலைக்காட்சி பத்திரிகையாளர்களான ராஜாத் சர்மா மற்றும் அட்மான் ப்ராஷான் ஜோஷி ஆகியோரை உறுப்பினர் குழுவில் சேர்த்துள்ளது. இவர்களுடன் மத்திய அமைச்சர்களான அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ரமேஷ் போக்ரியால், பிரகாஷ் ஜவடேகர், வி.முரளிதரன், ப்ரஹலாத் சிங்க் பாடே, ஐசிசிஆர் (iccr) தலைவர் வினய் சஹஷ்ரபூதே மற்றும் ப்ரஷார் பாரதி தலைவர் ஏ சூரிய ப்ரகாஷ் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Vikatan

மத்திய அரசு நேரு நினைவியல் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தைச் சங்கத்தின் பதிவுக்குறிப்பு (memorandum of association) சட்டம் 3ன் கீழும் என்எம்எம்எல் (nmml) அமைப்பின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் படியும் மாற்றி அமைத்துள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைவராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என அரசு வெளியிட்டுள்ள ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்களின் ஆண்டுக்காலம் ஐந்தாண்டுக்காலம் அல்லது மற்றோர் ஆணை வரும்வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

மல்லிகா அர்ஜுன்
மல்லிகா அர்ஜுன்

``இதற்கு முன்னர் மத்திய அரசானது தொலைக்காட்சி பத்திரிகையாளர் அர்ணாப் கோஷ்வாமி , வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பா.ஜ.க-வின் சட்ட வல்லுநர் வினய் சஹஸ்ரபூதே ஜிஜிஎன்சி (ggnc) தலைவர் ராம் பஹதூர் ராய் ஆகியோர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். அனைத்து பிரதமர்களுக்கும் அருங்காட்சியகம் கட்டும் முடிவை எதிர்த்த நான்கு பேருக்கு பதிலாக இவர்கள் சேர்க்கப்பட்டனர்" என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மத்திய அரசு அருங்காட்சியகத்தை மறுசீரமைப்பு செய்யும் முனைப்பில் இருக்கும் போது இத்தகைய உறுப்பினர் மாற்றங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகா அர்ஜுன் கூறுகையில், "மத்திய அரசு எல்லாவற்றையும் அரசியலாக்கப் பார்க்கிறது . அவர்களுடைய உறுப்பினர்களை மட்டும் குழுவில் அமர்த்த இவ்வாறான முடிவை எடுத்துள்ளது" என்றார்.

ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ``மத்திய அரசு நேரு நினைவியல் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை, நாக்பூர் நினைவியல் அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்ற முயல்கிறது" என்றார்.

கரண் சிங்
கரண் சிங்

காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் கரண் சிங் கூறுகையில், ``இந்த நிறுவனத்தை நிறுவியவர்களில் நானும் ஒருவன். முதலில் அவர்கள் எங்களுக்கு அனுதாபமானவர்களை நீக்கினர், தற்போது எங்களையும் நீக்கியுள்ளனர். இதனால் நிர்வாகக் குழுவில் நேருக்கெதிரான கருத்துகளைக் கொண்டவர்களைச் சேர்க்கின்றனர். மேலும் நேருவின் கருத்துகளை நம்புவோரை வெளியேற்றுகின்றனர். நாங்கள் எல்லா பிரதமர்களுக்கான புதிய அருங்காட்சியகம் அமைப்பதை எதிர்த்தோம். அதனால், இந்தக் கட்டடத்தை எதுவும் செய்யாமல் வேறோர் இடத்தில் அருங்காட்சியகத்தைக் கட்டிக்கொள்வதாகக் கூறினார். ஆனால் தற்போது நூலகத்தைச் சிறுமைப்படுத்திக் கட்டடத்தை இடித்து விடுவார்கள் என்று அச்சமாக இருக்கிறது' என்றார் .

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு