Published:Updated:

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக பினராயி... நிவாரணம் தர மறுக்கும் மோடி அரசு!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்த்துவரும் நிலையில், கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதி அளிக்காமல் மோடி அரசு கைவிரித்துள்ளது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) எதிராக கேரள முதல்வர் பினராயி விஜயன் வலுவாகக் குரல் எழுப்பிவருகிறார். சி.ஏ.ஏ-வை எதிர்த்து இடது ஜனநாயக முன்னணியும் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் சேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தின. அதில், முதல்வர் பினராயி விஜயனுடன் கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் பங்கேற்றார்.

வெள்ள பாதிப்பின்போது...
வெள்ள பாதிப்பின்போது...

மேலும், சி.ஏ.ஏ-வை ரத்து செய்யுமாறு மத்திய பா.ஜ.க அரசை வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஒன்றிணையுமாறு 11 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார் முதல்வர் பினராயி விஜயன்.

இந்தத் தீர்மானத்துக்கு எதிராகப் பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ``நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தை அமல்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் அரசியல் சாசனக் கடமை” என்றார். கேரள ஆளுநரான ஆரிப் முகமது கான், ``கேரள அரசின் தீர்மானம் அரசியல் சாசனப்படியோ, சட்டப்படியோ செல்லாது. ஏனெனில், குடியுரிமை விவகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கேரளாவுக்குப் பிரச்னை இல்லாத விவகாரத்தில், இவர்கள் தலையிடுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இந்த நிலையில்தான், 2018 மற்றும் 2019 என இரண்டு முறை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த கேரளாவுக்கு உரிய நிவாரண நிதியை அளிக்காமல் மத்திய அரசு புறக்கணித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மிகப்பெரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் கேரளா கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்தப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்குப் போதுமான நிதி இல்லாமல் கேரள அரசு சிரமப்பட்டுவருகிறது. இத்தகைய சூழலில், தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியாக ரூ.5,908 கோடியை ஏழு மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த ஏழு மாநிலங்களின் பட்டியலில் கேரளா இடம்பெறாதது கேரளாவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக்குழுதான் எந்தெந்த மாநிலங்களுக்கு நிவாரண நிதியை வழங்கலாம் என்று முடிவுசெய்து ஏழு மாநிலங்களைத் தேர்வுசெய்தது. அவற்றில், உ.பி., கர்நாடகா, திரிபுரா, அஸ்ஸாம் ஆகிய நான்கு மாநிலங்கள் பா.ஜ.க-வால் ஆளப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, நான்கு மாநிலங்களுக்கு ரூ.3,200 கோடியை இடைக்கால நிவாரண நிதியாக மத்திய அரசு வழங்கியது. அப்போதும் கேரளா அதில் சேர்க்கப்படவில்லை.

அமித் ஷா
அமித் ஷா

வெள்ள பாதிப்புகளிலிருந்து மீள்வதற்குத் தேவையான நிதியை வழங்குமாறு மத்திய அரசுக்கு கேரள அரசு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவருகிறது. ஆனாலும், மத்திய அரசிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை என்று கவலையுடன் சொல்கிறார்கள் கேரளாவின் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் உள்ளிட்ட அமைச்சர்கள்.

இது குறித்து நிதியமைச்சர் தாமஸ் ஐசக்கிடம் பேசினோம். ``2019-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் இயற்கைப் பேரிடர் நிவாரண நிதி கேரளாவுக்கு வழங்கப்படாதது மிகவும் வருத்தத்துக்குரியது. ஏழு மாநிலங்களுக்கு நிவாரண நிதியை வழங்கும்போது, ஏன் கேரளாவை ஒதுக்கினார்கள் என்ற கேள்வியை முன்வைக்கிறோம். 2018-ம் ஆண்டும், 2019-ம் ஆண்டும் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மிகப்பெரிய சேதங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், உரிய நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.

தாமஸ் ஐசக்
தாமஸ் ஐசக்

வெளியிலிருந்து நாங்கள் உதவிபெறவும் மத்திய அரசு அனுமதிக்கவில்லை. ரூ.20,000 கோடி நிவாரண நிதியை மத்திய அரசிடம் கேட்டிருந்தோம். ஆனால், ஒரு நயா பைசா கூட வழங்கவில்லை. கேரளாவிடம் மத்திய அரசு பாகுபாட்டுடன் நடந்துகொள்கிறது. மத்திய அரசின் இந்த அணுகுமுறை முழுக்க முழுக்க அரசியல் ரீதியானது. இது மிகுந்த வருத்தத்துக்குரியது” என்றார்.