Published:Updated:

அதிகமாக கடன் வாங்காதே! - மத்திய அரசு; எங்களுக்கான நிதியைக் கொடு! - மாநில அரசுகள்

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

கடந்த சில ஆண்டுகளாகத் தங்களின் நிதி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது’ என்று மாநிலங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது

அதிகமாக கடன் வாங்காதே! - மத்திய அரசு; எங்களுக்கான நிதியைக் கொடு! - மாநில அரசுகள்

கடந்த சில ஆண்டுகளாகத் தங்களின் நிதி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது’ என்று மாநிலங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

இலங்கையும் பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் பற்றிய அச்சம் மத்திய ஆட்சியாளர்களைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. ‘அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்காதீர்கள்...’ என்று மாநிலங்களை, மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது!

இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்கள் கூட்டம், ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பிரதமர் மோடி உரையாற்றிய அந்தக் கூட்டத்தில், மத்திய நிதித்துறைச் செயலாளர் விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், எந்தெந்த மாநிலங்கள் அதிகமாகக் கடன் வாங்கியிருக்கின்றன... ஒவ்வொரு மாநிலத்தின் செலவுகள் என்னென்ன... என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

‘மாநில அரசுகளின் கடன்சுமையும் நிதிப் பற்றாக்குறையும் அதிகரித்துவருவதால், நாட்டின் பொருளாதாரத்தில் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என்று மத்திய அரசின் அதிகாரிகள் அந்தக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், இந்தக் கடனைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும் என்று தலைமைச் செயலாளர்களுக்கும் விளக்கப்பட்டிருக்கிறது.

அதிகமாக கடன் வாங்காதே! - மத்திய அரசு; எங்களுக்கான நிதியைக் கொடு! - மாநில அரசுகள்

இதற்கு முன்பு, பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அப்போது, ‘இலவசங்கள் வழங்கப்படும் போக்கு மாநில அரசுகளிடம் அதிகரித்திருப்பதாக’ கவலை தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘இத்தகைய போக்கு தொடர்ந்தால், இலங்கையைப் போன்ற பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா இட்டுச் செல்லப்படலாம்’ என்று பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்துதான், தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியிருக்கிறது.

இதற்கிடையே, ‘கடந்த சில ஆண்டுகளாகத் தங்களின் நிதி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது’ என்று மாநிலங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. உதாரணமாக, கொரோனா பிரச்னையால், மாநில அரசுகளுக்கான வரி வருவாய் பாதிக்கப்பட்டது. திரையரங்குகள் இயங்காததால் கேளிக்கை வரி வசூலாகவில்லை. பத்திரப்பதிவுகள் நடைபெறவில்லை. மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி பாக்கி, இழப்பீடு உள்ளிட்ட நிதிகள் உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்று பல காரணங்களை மாநிலங்கள் முன்வைக்கின்றன. இப்படியான சூழலில்தான், ‘கடன் வாங்கித் திட்டங்களை நிறைவேற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்போது ‘கடன் வாங்காதீர்கள்’ என்று சொன்னால், திட்டங்களை எப்படி எங்களால் செயல்படுத்த முடியும்?’ என்று மாநிலங்கள் கேட்கின்றன.

கனகராஜ்
கனகராஜ்

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரான க.கனகராஜிடம் கேட்டோம். “மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கு, மத்திய அரசின் அணுகுமுறையும் ஒரு முக்கியக் காரணம். நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால், மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்கவேண்டிய நிதிகளை முறையாகக் கொடுத்துவிட்டால் பிரச்னையே இல்லை. உதாரணமாக, பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்துக்கான பிரீமியம் தொகையில், 49 சதவிகிதம் மத்திய அரசும், 49 சதவிகிதம் மாநில அரசும், 2 சதவிகிதம் விவசாயிகளும் கட்டிவந்தார்கள். இப்படித்தான் 2015-16 வரை இருந்தது. அதை, 25 சதவிகிதமாக மத்திய அரசு திடீரென்று குறைத்தது. அதனால், மத்திய அரசு குறைத்த நிதியையும் மாநில அரசே சேர்த்துக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதில், அதுவரை 576 கோடி ரூபாய் செலுத்திவந்த தமிழக அரசு, 2020-21-ல் 1,918 கோடி ரூபாயாக உயர்த்திச் செலுத்தவேண்டியதாகிவிட்டது.

அதேபோல, எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கான ‘போஸ்ட் மெட்ரிக்’ உதவித்தொகையில் மத்திய அரசு 75 சதவிகிதமும், மாநில அரசு 25 சதவிகிதமும் வழங்கிவந்தன. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, மத்திய அரசின் பங்கை இரண்டு ஆண்டுகளாகத் தரவே இல்லை. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் குரல் கொடுத்த பிறகு, இப்போது 60 சதவிகிதம்தான் வழங்குகிறார்கள். அந்த நிதிச்சுமையும் மாநிலங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி பாக்கியை மாநிலங்கள் கேட்டபோது, ‘மத்திய அரசிடம் நிதி இல்லை. ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று மத்திய அரசு சொன்னது. இப்படியெல்லாம் நெருக்கடியில் தள்ளிவிட்டு, `கடனும் வாங்காதே’ என்று சொல்வது, மாநிலங்களை முடக்கும் செயல்” என்று விமர்சித்தார் கனகராஜ்.

இது குறித்து பா.ஜ.க-வின் பொதுச்செயலாளரான பேராசிரியர் சீனிவாசனிடம் பேசினோம். “கொரோனா சூழலால் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசுக்கு மட்டுமல்லாமல், மத்திய அரசுக்கும் வருவாய் குறைந்திருக்கிறது. `கடன்சுமையைக் குறையுங்கள்’ என்று மாநில அரசுகளை அறிவுறுத்துவது, பொறுப்பான மத்திய அரசின் கடமை. ‘அ.தி.மு.க ஆட்சியில் தமிழக அரசின் கடன் ஐந்து லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டதாக’ தி.மு.க விமர்சித்தது. `மாநில அரசின் கடன்சுமை அதிகரிப்பது நல்லதல்ல’ என்றுதானே தி.மு.க விமர்சித்தது.

சீனிவாசன்
சீனிவாசன்

‘இலவசங்கள்’ என்ற பெயரில், சில மாநிலங்கள் ஊதாரித்தனமாகச் செலவுசெய்கின்றன. தி.மு.க போன்ற கட்சிகள், சாத்தியமில்லாத திட்டங்களைத் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துவிட்டு, பிறகு அவற்றை நிறைவேற்ற முடியாமல் திணறுகின்றன. நலத்திட்டங்கள் என்ற பெயரில் நாட்டை திவாலாக்கிவிடக் கூடாது. எனவேதான், மாநிலங்களுக்குக் கடிவாளம் போட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்துகிறது. மோடி அரசு வந்த பிறகுதான், நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு 42 சதவிகித நிதி பங்கிட்டுக் கொடுக்கப்படுகிறது. அதற்கு முன்பு, 32 சதவிகிதம்தான் வழங்கப்பட்டுவந்தது. எனவே, மத்திய அரசு நிதியைக் குறைத்துவிட்டது என்பது போன்ற குற்றச்சாட்டுகள் தவறானவை” என்கிறார்.

கட்சி வேறுபாடுகள் கடந்து, நிதி விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் கூடிப் பேசி எதிர்காலத்தைக் கணக்கில்கொண்டு முடிவெடுக்க வேண்டும்!