Published:Updated:

மத்திய அரசின் புதிய `மூவ்’ - இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குத் தயாராகிறதா தென்னிந்தியா?

மோடி - அமித் ஷா

“கலைஞரே இந்தி தெரியாத ஒரு காரணத்தால்தான் தமிழ்நாடு அரசியலைத் தாண்டிப் போக முடியாமல் இருந்தார்.” -சூர்யா சிவா.

மத்திய அரசின் புதிய `மூவ்’ - இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குத் தயாராகிறதா தென்னிந்தியா?

“கலைஞரே இந்தி தெரியாத ஒரு காரணத்தால்தான் தமிழ்நாடு அரசியலைத் தாண்டிப் போக முடியாமல் இருந்தார்.” -சூர்யா சிவா.

Published:Updated:
மோடி - அமித் ஷா

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு தனது 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளித்தது. அதில், எல்லா மாநிலங்களிலும் ஆங்கிலத்தைவிட பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. இது குறித்து இந்தக் குழுவின் துணைத் தலைவரான பிஜேடி கட்சியின் தலைவர் பர்த்ருஹரி மஹ்தாப், "அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி அல்லது பிராந்திய மொழி இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. பிரிவு `ஏ’ மாநிலங்களில் இந்தி மொழிக்குத் தகுந்த இடம் அளிக்கப்பட வேண்டும். அது 100 சதவிகிதம் பின்பற்றப்பட வேண்டும். இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இருக்கும் ஐஐடி, மத்தியப் பல்கலை, கேந்திர வித்யாலையாக்களில் இந்தியே பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்திருக்கிறது. பனாரஸ் இந்து பல்கலை., டெல்லி பல்கலை., ஜமியா மில்லியா இஸ்லாமியா, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகங்களில் 20-30 சதவிகிதம்தான் இந்தி மொழி பயன்படுத்தப்படுகிறது. இங்கு 100 சதவிகிதம் இந்தி மொழி பயன்படுத்தப்பட வேண்டும். ஆங்கிலம் என்பது வெளிநாட்டு மொழி. அதனால் நாம் இந்தக் காலனியாதிக்க சிந்தனைகளிலிருந்து வெளியேற வேண்டும். இஸ்ரோ அல்லது டிஆர்டிஓ மற்றும் உள்துறை அமைச்சகங்களில் 100 சதவிகிதம் இந்தி மொழி பயன்பாட்டில் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

பர்த்ருஹரி மஹ்தாப், பிரதமர் மோடி
பர்த்ருஹரி மஹ்தாப், பிரதமர் மோடி

இந்தி மொழியின் பயன்பாட்டைப் பொறுத்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரசேதங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவை பிரிவு `ஏ.’ குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், சண்டிகர், டையூ மற்றும் டாமன், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள் பிரிவு பி.’ மற்ற மாநிலங்கள் பிரிவு `சி’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழு கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு அறிக்கைகளை வழங்கியிருக்கிறது.

அலுவல் மொழிச் சட்டம் 1963-ன் கீழ் கடந்த 1976-ம் ஆண்டு இந்தக் குழு அமைக்கப்பட்டது. இதில், 20 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் என 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்தக் குழு இந்தியை அலுவல் மொழியாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, தனது அறிக்கையை குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கும். இந்தப் பரிந்துரைகளை ஏற்பதும், நிராகரிப்பதும் குடியரசுத் தலைவரின் விருப்பம்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்திய துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். 'ஒரே நாடு' என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்படுவது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கக்கூடியதாகும். 'பாரத் மாதா கி ஜே' என்று நாடாளுமன்ற அவையில் அதை ஓர் அரசியல் கோஷமாக்கி குரல் எழுப்பிக்கொண்டே இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடியது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மைகொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். அதற்கு நேர் எதிரான, மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள்மீது திணித்திட வேண்டாம்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

கேரள முதவர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன. அப்படியிருக்கும்போது ஒரு மொழியை மட்டும் நாட்டின் மொழியாக அறிவிக்க முடியாது. உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியை முக்கியப் பயிற்றுமொழி ஆக்க முடியாது. இது வேலை தேடுவோர்களையும், மாணவர்களையும் பயத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எனவே மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் வினாத்தாள்கள் அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளிலும் இருக்க வேண்டும்.

ஸ்டாலின்-பினராயி விஜயன்
ஸ்டாலின்-பினராயி விஜயன்

இளைய தலைமுறையினர் தங்கள் தாய்மொழி தவிர்த்து பிற மொழிகளைக் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தலாம். அதேவேளையில் ஒரு மொழியைத் திணிக்கும் முயற்சி என்பது பொதுவாக மக்களிடமும், குறிப்பாக வேலை தேடுவோர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்திவிடும். மற்ற மொழிகளைக் காட்டிலும், எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் பயிற்றுமொழியாக்க முன்னுரிமை தரக் கூடாது. அப்படிச் செய்வது திணிப்பாகவே பார்க்கப்படும். அது, நமது கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு நல்லதல்ல. இந்த விவகாரத்தில் நீங்கள் கூடிய விரைவில் தலையிட்டு, தேவையான சரிப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

கே.டி.ராமாராவ்
கே.டி.ராமாராவ்
ட்விட்டர்

“இந்தியாவுக்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது. பிற அலுவல் மொழிகளுடன் இந்தியும் ஒன்று. ஐஐடி-களிலும், பிற மத்திய வேலைவாய்ப்பு தேர்வுகளிலும், இந்தியைக் கட்டாயமாகத் திணிப்பதின் மூலம், பா.ஜ.க கூட்டணி அரசு கூட்டாட்சி உணர்வை மீறுகிறது. மொழியைத் தேர்வு செய்வதற்கு இந்தியர்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும். இந்தித் திணிப்பு கூடாது என்றே நாங்கள் சொல்கிறோம்” என்று தன் கருத்தை பதிவுசெய்திருக்கிறார் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவரும், முதல்வர் சந்திரசேகரராவின் மகனுமான கே.டி.ராமாராவ்.

இவ்வாறாக தென் மாநிலங்களில் பா.ஜ.க ஆளும் கர்நாடக மாநிலத்தைத் தவிர மற்ற மூன்று மாநிலங்களிலுமிருந்து இந்தி மொழிக்கு எதிரான கோஷம் வலுவாக அனைத்துக் கட்சிகள், இயக்கங்களிடமிருந்து எழத் தொடங்கியிருக்கிறது. இதனால் இந்தித் திணிப்புக்கு எதிராக 1935, 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு நடத்திய போராட்டங்கள்போல் மீண்டும் ஒரு வலுவான எதிர்ப்பு இருக்குமா அல்லது தங்கள் அரசியல் லாபத்துக்காகப் பேசுபொருளாக வைத்துக்கொண்டு அமைதியாகப்போகிறார்களா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

“1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைத் தொடங்கிவைத்த கல்லூரி மாணவர்களின் எழுச்சி, பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், தமிழ்நாட்டு மக்கள் எனப் பற்றிப் பரவியது. வேறு வழியின்றி அன்றைய காலகட்டத்தில் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி கட்டாய இந்தித் திணிப்பை திரும்பப் பெற்றார். கட்டாய இந்தித் திணிப்பை ஏற்காத மாநிலங்கள் இருக்கும் வரை அதை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று உறுதி அளித்தார். ஆனால், அந்த உறுதிமொழிக்கு மாறாக கடந்த 57 ஆண்டுகளில் பல்வேறு வகைகளில் இந்தித் திணிப்பு படிப்படியாகக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது” என்கிற விமர்சனம் இந்தி எதிர்ப்பை வலுவாகக்கொண்டவர்கள் முன்வைக்கிறார்கள்.

சூர்யா சிவா
சூர்யா சிவா

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க ஓ.பி.சி பிரிவு பொதுச் செயலாளர் சூர்யா சிவா, “மொழிபோர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் கிடையாது. ஏனென்றால், அந்த மாதிரியான எந்தச் செயல்பாட்டையும் பா.ஜ.க செயல்படுத்தவில்லை. மாநில மொழிகளை அழித்து, இந்தி மொழியைக் கொண்டுவர வேண்டும் என்று இந்தித் திணிப்பைத் தீவிரமாகச் செயல்படுத்தியது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான். எனவே மாநில மொழிகளுக்கு எதிரான கட்சி பா.ஜ.க இல்லை என்பதையும் தெளிவாகச் சொல்லிவிட்டோம். மாநிலக் கல்வி கொள்கையிலும் மும்மொழிக் கொள்கையைதான் பா.ஜ.க முன்னிலைப்படுத்துகிறது. மற்ற மாநிலங்களுக்குப் போகும்போது இணைப்பு மொழியாக இந்தி தேவைப்படுகிறது என்பது இங்கிருக்கும் ஒவ்வொருவரும் அறிந்ததே.

வட இந்திய அமைச்சர்கள் நம் அமைச்சர்கள், எம்.பி-களை பார்த்து சொல்லக்கூடிய வார்த்தை ஒன்று உண்டு. ‘தென்னிந்தியர்கள் திறமையானவர்கள். இதுவே இந்தி மட்டும் தெரிந்திருந்தால் இன்னும் உயரம் தொட்டிருப்பீர்கள்’ என்று சொல்வதை நானே பலமுறை பார்த்திருக்கிறேன். கலைஞரே இந்தி தெரியாத ஒரு காரணத்தால்தான் தமிழ்நாடு அரசியலைத் தாண்டிப் போக முடியாமல் இருந்தார். ஆனால், அவர் பிரதமராக இருப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருந்தன. இன்று தமிழ்நாட்டுக்குள் அரசியல் செய்வதற்காகவும், இங்கு இவர்கள் வாழ்வதற்காகவும், நாளை மற்றவர்கள் மற்ற இடத்தில் வாழவிடாமல் செய்கிறார்கள்” என்கிறார்.