Published:Updated:

எடப்பாடி `சீட்' கணக்கு, வண்ணாரப்பேட்டை `அலர்ட்', அஜித் தோவல் & அமித் ஷா கேம்... கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்!

கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்!
கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்!

வண்ணாரப்பேட்டை போராட்டத்தை உடனே முடிக்கச் சொல்லி டெல்லியில் இருந்து தமிழக அரசுக்கு கடும் அழுத்தம் தரப்படுகிறதாம்..!

சாதிக்கொரு ராஜ்யசபா சீட்... எடப்பாடிக்கு கேட்!

`வாட்ஸ்அப்’ கூட சந்தேகமாகதான் இருக்கிறது.... அதனால், இந்தமுறை `டெலிகிராம்’-ல் தகவல்களை அனுப்புகிறேன் என்ற பீடிகையுடன் அடுத்தடுத்து தகவல்களை அனுப்பினார் டிஜிட்டல் கழுகார்.

ராஜ்யசபாவில் காலியாகும் ஆறு எம்.பி இடங்களுக்கு இரண்டு திராவிட கட்சிகளிலும் கடும் போட்டி நிலவுவது அனைவரும் அறிந்ததே. அ.தி.மு.க-வில் சொந்தக் கட்சியினர் மட்டும் இல்லாமல் கூட்டணி தரப்பிலும் ஏகத்துக்கும் குடைச்சலாம். எப்படியாவது தனக்கு ஒரு சீட் ஒதுக்குமாறு புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் கேட்டிருக்கிறார். வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் தனக்கு ஏற்பட்ட இழப்பை எம்.பி பதவியை அடைந்தால் மட்டுமே சரிக்கட்ட முடியும் என்று நினைக்கிறாராம் அவர்.

இதற்கிடையே, பா.ஜ.க-வினரும் டெல்லி மேலிடம்மூலம் `அ.தி.மு.க-வுக்கு அழுத்தம் கொடுத்து, எங்களுக்கு ஓரிரு இடங்களை வாங்கித்தர முடியுமா என்று பாருங்கள்’ என்று நூல் விடுகிறார்களாம். `கட்சிக்காரர்கள் கேட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது... பா.ஜ.க-வை தூக்கிச்சுமப்பதே பெரும்பாடு... இதில் ராஜ்யசபா சீட்டையும் கேட்டால் எப்படி?’ என்று ரத்தம் சூடேறிக்கிடக்கிறார்களாம் ரத்தத்தின் ரத்தங்கள்!

இன்னொரு பக்கம், ``அம்மாவுக்குப் பிறகு அதிகாரத்தையும் பதவிகளையும் குறிப்பிட்ட ஓரிரு சமூகத்தினரே அனுபவித்துவருகிறார்கள். மாநிலங்களவையிலும் எங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என நாடார், முத்தரையர், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க தலைவர்கள் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்களாம்!

110 விதி
இல்லை நிதி!

மார்ச் 9-ம் தேதி கூடவிருக்கும் சட்டசபையின் நிதிநிலை கூட்டத் தொடரில் தினமும் 110-வது விதியின் கீழ் அதிரடி அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி வெளியிடப் போகிறாராம். 110-வது விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களுக்கே இன்னும் முழுமையாக நிதி ஒதுக்காமல் கிடப்பில் உள்ள நிலையில், புதிய அறிவிப்புகள் தேவையா என ஓ.பி.எஸ் தலைமையில் செயல்படும் நிதி அமைச்சகம் கேள்வி எழுப்பியதாம். நிதி ஒதுக்காமல் வெறும் அறிவிப்புகளை மட்டும் அறிவிக்க முடியாது என்பதால் எந்தத் திட்டத்தில், எந்த துறையிலிருந்து நிதியைப் பிரித்து, 110 விதி அறிவிப்புகளை வெளியிடலாம் மண்டையை குடைந்து கொண்டிருக்கிறார்களாம் அரசு அதிகாரிகள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஊழல் அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு!

சென்னையில் முக்கியமான சில துறைகளில் ஊழலில் திளைக்கும் படா படா அதிகாரிகள் சிலர் விரைவில் ஓய்வுபெறவிருக்கிறார்கள். ஆனால், தினசரி லஞ்சப்பணமே லட்சங்களில் கொட்டுவதால் ஓய்வுபெற மனம் இல்லையாம். குறிப்பாக, சென்னை மாநகருக்கும் மக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டிய ஒருவர் ஏற்கெனவே பணிநீட்டிப்பு பெற்றார். விரைவில் அந்தப் பணிக்காலமும் நிறைவடைந்து, ஓய்வுபெறபோகிறார்.

ஆனால், ``இந்த ஆட்சி இருக்கும் வரை நானே இருந்துவிட்டு போய்விடுகிறேனே” என்று மீண்டும் பணி நீட்டிப்பு கேட்கிறாராம் அவர். ``அமைச்சரின் பெயரைச் சொல்லியே மண்டலம்வாரியாக தினமும் லட்சக்கணக்கில் மாமூல் வசூலிக்கிறார். தவிர, வெள்ளை மாளிகையில் இருக்க வேண்டியவருக்கு நாள் முழுவதும் கோட்டையில் என்ன வேலை? அமைச்சரையே பிடித்துவிடலாம் போலிருக்கிறது.... ஆனால், இவரைப் பிடிக்க முடியவில்லை. குறிப்பாக, அமைச்சருக்கு இவரால்தான் அவப்பெயர் ஏற்படுகிறது. இவருக்கு பணிநீட்டிப்பு கொடுத்தால் எங்களுக்கு வர வேண்டிய நியாயமான பணி உயர்வு மற்றும் பணி இடமாற்றம் பாதிக்கப்படும்” என்று புலம்புகிறார்கள் அவர் துறை சார்ந்த அதிகாரிகள்.

`பசி’ சம்பந்தப்பட்ட துறையின் பெண் அதிகாரி அவர். தற்போது தமிழகத்தையே கலக்கிவரும் முக்கிய ஊழல் ஒன்றிலும் இவரது பெயர் பரவலாக அடிபடுகிறது. உலகப்புகழ் பெற்ற பனிமலை மாநிலத்தின் கேடர் அதிகாரியான இவர் ஏற்கெனவே டெபுடேஷன் பணியாகதான் தமிழகத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறார். விரைவில் இவருக்கு டெபுடேஷன் பணிக்காலம் நிறைவடைய இருக்கிறது. நிற்க... வடகிழக்கு மாநிலம் ஒன்றின் கேடர் அதிகாரி அவர். போட்டித்தேர்வு மோசடியிலும் `கட்டுப்பாடு’ இல்லை என்று இவரது பெயர் பலமாக அடிபடுகிறது. மேற்கண்ட இரு அதிகாரிகளும் லாரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும் நிறுவன உரிமையாளரின் உறவினர்கள். ஊழல் குற்றச்சாட்டுகள் படிந்த இவர்களுக்கும் பணி நீட்டிப்பு வழங்க தீவிரமாக ஏற்பாடுகள் நடக்கின்றனவாம்.

வாரிசு சண்டை
திருச்சி அ.தி.மு.க-வில்..!

திருச்சி அ.தி.மு.க-வில் வாரிசு அரசியல் வீதி வரை வந்து நிற்கிறது. அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் இளைய மகன் ஜவஹர்லால் நேரு, அப்பாவின் தொகுதி அலுவலகம், மாவட்ட விழாக்கள் அத்தனையிலும் அவரது நிழலாக வலம்வருகிறார். திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.பி-யுமான ரத்தினவேலுவும் தன் மகன் சுரேஷ் குமாரைக் களத்தில் இறக்கியிருக்கிறார். திருவெறும்பூர் அடுத்த பர்மா காலனியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் சுரேஷ்குமார் பேசிக்கொண்டிருந்தபோது லோக்கல் அ.தி.மு.க-வினர் மேடையில் ஏறி, ``இவர் கட்சியில் எந்தப் பொறுப்பில் இருக்கிறார், இவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள், வாரிசு அரசியல் செய்கிறீர்களா?’’ என ரத்தினவேல் முன்னிலையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட அங்கு நிலைமை ரசாபாசமாகிவிட்டதாம்.

வெல்லமண்டி நடராஜன்
வெல்லமண்டி நடராஜன்

அமைச்சருக்காக வெட்டப்படும் மரங்கள்!

கல்வி நிறுவனங்கள் தொடங்குவதற்காக அமைச்சர் ஒருவர், தஞ்சாவூர் வல்லத்திலிருந்து ஆலக்குடி செல்லும் சாலையில் பெரிய அளவில் இடம் வாங்கியிருக்கிறார். இதற்காக கிராமப்புறச் சாலையான அந்தச் சாலையை அவசியமே இல்லாமல் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெறுகின்றன. சாலையோரத்தில் இருக்கும் சுமார் 60 ஆண்டுகள் பழைமையான 21 புளியமரங்களை வெட்டமுடிவு செய்திருக்கிறார்களாம். கவலையுடன் உச்சு கொட்டுகிறார்கள் மக்கள்.

அப்செட்டில் தளவாய் சுந்தரம்!
உலை வைத்த உதவியாளர்

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் உதவியாளராக இருப்பவர் கிருஷ்ணகுமார். இவர் வங்கி அதிகாரி ஒருவரின் இடமாற்ற விவகாரத்தில் பேசிய ஆடியோ லீக் ஆனதால் தளவாய் சுந்தரம் அப்செட் ஆகியிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இருளப்பபுரம் கிளையில் புதிதாகக் கணக்கு தொடங்கும் விஷயத்தில், ``பான் கார்டு கண்டிப்பாகச் சமர்ப்பிக்க வேண்டும்’’ எனச் சொல்லியிருக்கிறார் கிளை மேலாளர் ஜெயகுமார். இதில் கிருஷ்ணகுமார் தலையிட்டு, ``கணக்கு தொடங்கிக் கொடுங்கள்’’ எனச் சொன்னாராம். இதன் பிறகுதான் ஜெயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இதற்கிடையில் புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர் ஜேக்கப் ராஜியிடம், ``பழைய மேலாளரை மாற்றியது நான்தான்” என கிருஷ்ணகுமார் அலைபேசியில் பேசியதாகச் சொல்லப்படும் ஆடியோ ஒன்று வலைதளங்களில் பரவியது. இதில்தான் தளவாய் சுந்தரத்தின் தலை உருட்டப்படுகிறது.

தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்

அ.தி.மு.க-வுக்குத் தாவுகிறாரா சின்னசாமி?

`தி.மு.க மாநில விவசாய அணிச் செயலாளரான முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி அ.தி.மு.க-வில் இணையப் போகிறார்’ என்கிற செய்திகள் கரூரை வட்டமடிக்கின்றன. எம்.ஜி.ஆர் காலத்தில் அ.தி.மு.க-வில் முக்கியப் புள்ளியாக இருந்தவர் சின்னசாமி. பிற்காலத்தில் அ.தி.மு.க-வுக்கு வந்த செந்தில்பாலாஜியின் கை ஓங்கவே... தி.மு.க-வுக்குத் தாவினார் சின்னசாமி. எந்த செந்தில் பாலாஜியைப் பிடிக்காமல் தி.மு.க-வுக்கு வந்தாரோ... இப்போது அதே செந்தில் பாலாஜி கரூர் தி.மு.க-வில் ஆதிக்கம் செலுத்துவதால் சின்னசாமியின் நிலைமை சங்கடத்துக்கு உள்ளானது. இதனால், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மூலம் மறுபடியும் தாய்க்கழகமான அ.தி.மு.க-வில் இணைவதற்குக் காய் நகர்த்துகிறதாம் சின்னசாமி தரப்பு. ஆனால், இந்தத் தகவல்கள் வதந்தி என்று மறுக்கிறார்கள் சின்னசாமியின் ஆதரவாளர்கள்!

அமித் ஷா Vs அஜித் தோவல்

டெல்லி கலவரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலை உருட்டப்படுகிறது. `உளவுத்துறை கோட்டைவிட்டது’ என ரஜினி முதல் சோனியா வரை குற்றம்சாட்டிவரும் நிலையில், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலவரப் பகுதிக்குச் சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது தனது பதவிக்கு விடுக்கப்பட்ட நெருக்கடியாகப் பார்க்கிறாராம் அமித் ஷா. உள்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள உள்நாட்டு பாதுகாப்பைத் தனியாகப் பிரித்து அதற்கு அஜித் தோவலை அமைச்சராக்கலாம் என்கிற பேச்சு எழுவதும் அமித் ஷாவை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.

அமித் ஷா
அமித் ஷா
வண்ணாரப்பேட்டை!
செங்கோட்டை... ஜார்ஜ் கோட்டை...

டெல்லி போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், நாடெங்கிலும் நடைபெறும் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்த தயாராகிவிட்டது மத்திய அரசு. வண்ணாரப்பேட்டை போராட்டத்தை உடனே முடிக்கச் சொல்லி டெல்லியிலிருந்து தமிழக அரசுக்கு கடும் அழுத்தம் தரப்படுகிறதாம். முதல்வர் அலுவலகத்தைத் தொடர்புகொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், ``போராட்ட பகுதிகளை நீங்களாக க்ளியர் பண்றீங்களா... இல்லை சி.ஆர்.பி.எஃப் வீரர்களை அனுப்பணுமா?” என்று கடுமை காட்டியதாகக் கோட்டை ஏரியாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்த அழுத்தம் காரணமாகத்தான், வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்களை அழைத்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினாராம். பேச்சுவார்த்தையில் எந்த சமரசமும் ஏற்படாமல் போராட்டம் தொடர்கிறது.

அடுத்த கட்டுரைக்கு