Published:Updated:

`இனி காவல்நிலையங்களில் படேல் படம்!' - மத்திய உள்துறை அமைச்சக உத்தரவை நிறைவேற்றிய புதுவை

அனைத்து காவல் நிலையங்களிலும் சர்தார் வல்லபபாய் படேலின் படம் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

புதுச்சேரி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் படேல் படம்
புதுச்சேரி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் படேல் படம்

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சர்தார் வல்லபபாய் படேல், சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர், துண்டு துண்டாகச் சிதறிக் கிடந்த 565 சமஸ்தானங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த பகுதிகளையும் ஒன்றிணைத்து இந்தியாவை உருவாக்கியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.

சர்தார் வல்லபபாய் படேல் சிலை
சர்தார் வல்லபபாய் படேல் சிலை

அதனால்தான் இரும்பு மனிதர் என்றும் இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். படேலை மறக்கடிக்கச் செய்துதான் காங்கிரஸ் கட்சி நேருவைப் பிரதமராக்கியது என்று பா.ஜ.க பேசிவந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு படேலின் 143-வது பிறந்த தினத்தையொட்டி நர்மதை ஆற்றின் கரையில் 182 மீட்டர் உயரத்தில் சிலையை நிறுவியது மத்திய பா.ஜ.க அரசு.

3,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்தச் சிலையை பிரதமர் மோடியே திறந்து வைத்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவரை, பா.ஜ.க ஏன் சொந்தம் கொண்டாட வேண்டும் என்றும் சர்ச்சைகள் கிளம்பின. `பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 1.5 கோடி படேல் சமூகத்தினரிடம் நிலவும் அதிருப்தியை சரிகட்டத்தான் பா.ஜ.க-வினர் திடீரென்று படேலை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்' என்றும் விமர்சனங்கள் கிளம்பின.

இந்நிலையில், கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி காவல்துறை தலைமைக்கு உத்தரவுக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது.

புதுச்சேரி காவல் நிலையம்
புதுச்சேரி காவல் நிலையம்

அதில், புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் மறைந்த சர்தார் வல்லபபாய் படேலின் உருவப் படத்தை கட்டாயம் வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

இதையடுத்து, படேலின் படத்தை அனுமதித்திருக்கும் அளவில் ஃப்ரேம் போட்டு அனைத்து காவல்நிலையங்களிலும் வைத்து வருகிறது புதுச்சேரி காவல்துறை தலைமை. `காவல் நிலையங்களைத் தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதைச் செயல்படுத்த வேண்டும்' என்று புதுச்சேரி அரசுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.