மத்தியத் தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் விருதுநகர் மாவட்டத்தில் இன்று அரசுமுறை பயணம் மேற்கொண்டார். மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள், மருத்துவ முகாம், கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தல் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ``முன்னேற விழையும் மாவட்டத்தின் கல்வி, விவசாயம், வளர்ச்சித் திட்டம், அடல் பென்ஷன், கிராம வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி காண்பதை அடிப்படையாகக்கொண்டு மத்திய அரசு, திட்டங்களைத் தீட்டிவருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் பல்வேறு துறைகள் முன்னேற்றம் கண்டுள்ளன. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும், முன்னேற விளையும் 112 மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது. இது விருதுநகர் மாவட்டத்தின் மிகப்பெரிய முன்னேற்றமாகும். இந்தத் தமிழ் புத்தாண்டு பரிசாக பாரதப்பிரதமர் மோடி பருத்தி இறக்குமதி மீதான 11 சதவிகித வரியை ரத்து செய்துள்ளார். இதன் மூலம் திருப்பூர், ஈரோடு மாவட்ட பின்னலாடை தொழில் நிறுவனத்தினர், தொழிலாளர்கள் பயனடைவார்கள். நாட்டின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்திவருகிறது. மத்திய அரசின் திட்டங்களின் கீழ் அதிகம் பயன்பெற்ற மாநிலம் தமிழ்நாடுதான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதமிழ்நாடு மிகப்பெரிய அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை அரசியல் கட்சியினர் புறக்கணிக்காமல் இருந்திருக்கலாம். தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், அவர்களது உடைமைகள் பறிமுதல் செய்யப்படுவது குறித்தும் மத்திய அரசு கவனத்தில் எடுத்துள்ளது. இதைத் தடுப்பதற்கு, இருநாட்டு அதிகாரிகளும் இணைந்த கமிட்டி கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயல்படவில்லை. இந்த கமிட்டி மீண்டும் செயல்பாட்டுக்கு வருகையில் நிச்சயம் மீனவர் பிரச்னைக்கான தீர்வு எடுக்கப்படும்.
பெரும்பாலும், மீன்வளத்தைப் பொறுத்தே மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, நமது பிராந்தியத்துக்குட்பட்ட பகுதியில் மீன்வளத்தைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு முயற்சி எடுத்துவருகிறது. இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி கச்சத்தீவை மீட்பது குறித்து என்னால் பேச முடியாது. மத்திய அரசின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றான ராணுவ தளவாடத் திட்டம் உத்தரப்பிரேதசத்துக்கும் தமிழகத்துக்கும்தான் முக்கியத்துவம் அளித்து வழங்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்து வசதிகளை உருவாக்குவதுதான் மத்திய அரசின் எண்ணம். இதற்கான வழிகளை ஆராய்ந்துவருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு எந்தத் திட்டத்துக்கு வேண்டுமானாலும் கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு நிதி தர தயாராக உள்ளது. தமிழகத்தில் பால்வளத்தைப் பெருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னேற விழையும் மாவட்டத்துக்குக் காலஅளவு வரையறுத்து பணி செய்யாமல், வளர்ச்சியை மட்டும் இலக்காக வைத்து பயணிக்கிறோம். முன்னேற விழையும் மாவட்டங்களில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு துறையும்ம் வளர்ச்சி நிலையை அடையும்போது விருதுநகர் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாறும்" என்றார்.