Published:Updated:

`அவரை அரசியல் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்புங்கள்' - ராகுலுக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி
மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

``சரியான மனநிலை உடையவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரைப் பற்றி பொதுவெளியில் இவ்வாறு பேசமாட்டார்கள்" என்றும் ராகுலை விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, `இன்று பேசிக்கொண்டிருக்கும் மோடி, இன்னும் ஆறு- ஏழு மாதங்களில் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்படும்' என்றும் 'இந்தியாவிலுள்ள இளைஞர்கள் மோடியைத் தாக்குவார்கள்' என்றும் விமர்சித்து பேசியிருந்தார். இதற்குப் பதிலளித்த மோடி, `அதிகமான சூரிய நமஸ்காரங்களைச் செய்து அடிவாங்கத் தயாராகிக்கொள்கிறேன்' என்றார். இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் ஒருவரும் ராகுலை விமர்சித்து பேசியுள்ளார்.

ராகுல், மோடி
ராகுல், மோடி

மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கள், பிரதமரைப் பற்றி ராகுல் காந்தி பேசியதைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர், ``காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கைகளில் கோடாரியுடன் சுற்றுகிறார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்கள் கால்களை அவர்களே அடித்துக்கொள்கிறார்கள். காங்கிரஸின் தலைவர்களுக்கு குறிப்பாக, சோனியா காந்திக்கு சிறிய ஆலோசனை வழங்க விரும்புகிறேன். உங்களது பாபுஜியை அரசியல் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்புங்கள். அப்போதுதான் அரசியலில் ஏ, பி, சி, டி, ஒழுக்கம், கண்ணியம் மற்றும் எப்படிப் பேச வேண்டும் எனக் கற்றுக்கொள்ள முடியும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``சரியான மனநிலை உடையவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரைப் பற்றி பொது வெளியில் இவ்வாறு பேசமாட்டார்கள்" என்றும் விமர்சித்துள்ளார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு தொடர்பான கேள்விக்கு, ``கருத்துக்கணிப்புகள் குறித்து நாம் என்ன கூற முடியும்? தேர்தல் முடிவுகள் வெளிவரட்டும்" என்று பதிலளித்தார்.

`நிறைய ட்யூப் லைட்டுகள் இருக்கின்றன!' - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை விமர்சித்த மோடி
பின் செல்ல