Published:Updated:

`தமிழக அரசுதான் காரணம்!’ - கனிமொழிக்கு பதில்கொடுத்த மத்திய அமைச்சர்

'இதற்கு, தமிழக அரசுதான் காரணம்' என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டியுள்ளார்.

கனிமொழி
கனிமொழி

“தமிழ்நாட்டில், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் 2016-ம் ஆண்டு முதல் பல முரண்பாடுகள் நிலவிவருகின்றன. இதை அரசு அறிந்திருக்கிறதா? இந்த முரண்பாடுகளைக் களைந்து உரிய நேரத்தில் இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? இழப்பீடுத் தொகை விநியோகிக்கப்படுவதில் ஏற்படும் பிரச்னைகளைக் கண்காணித்து, அதை சரிசெய்வதற்கு கண்காணிப்புப் பொறிமுறை ஏதேனும் அரசு கொண்டிருக்கிறதா?” என்று தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினார்.

நரேந்திர சிங் தோமர்
நரேந்திர சிங் தோமர்

இதற்குப் பதிலளித்த மத்திய விவசாயம், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “பொதுவாகவே, பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகையானது, அறுவடைக் காலம் முடிந்த இரண்டு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டுவிடும். அதேநேரம், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் இருந்து மகசூல் தரவு மற்றும் காப்பீட்டு பிரீமிய மானியத்தில், மாநிலத்தின் பங்கு ஆகியவை மாநில அரசுகளால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் இவை வழங்கப்படாததால் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்குக் கிடைப்பதில் தாமதமாகிறது.

மகசூல் தரவுகளிலும் பிரீமிய மானியத்தில் மாநில அரசின் பங்கினைக் கொடுப்பதிலும் சில மாநில அரசுகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இடையே பிரச்னைகள் இருக்கின்றன. சில விவசாயிகளுக்கு இணைய வங்கிப் பண பரிமாற்றம் மூலம் காப்பீட்டுத் தொகை அனுப்புவதிலும் வங்கிக் கணக்குகள் தொடர்பாக சில பிரச்னைகள் இருக்கின்றன. இருந்தபோதிலும், மத்திய வேளாண் அமைச்சகம் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் முறையாகச் செயல்படுகிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறது. பயிர்க் காப்பீட்டுத் தொகையைத் தாமதமாக வழங்கும் நிறுவனங்கள்,

பயிற்காப்பீடு
பயிற்காப்பீடு

தங்கள் பங்கினை தாமதமாகச் செலுத்தும் மாநில அரசுகள், இதற்கான அபராதத் தொகையினையும் செலுத்த வேண்டும் என 2018-19 ராபி பருவத்துக்குப் பின் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளால் தாமதம் ஏற்படாமல் இருக்க மத்திய அரசு அளவிலும், மாநில அரசுகள் அளவிலும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், தமிழக அரசு மாநில அளவிலும் மாவட்டங்கள் அளவிலும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்வதில் இருந்து, இழப்பீடு விநியோகம் வரை கண்காணிக்க, கண்காணிப்பு மையங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக விவசாயிகள் தங்களது குறைகளைத் தெரிவிக்க தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கனிமொழி
கனிமொழி

வேளாண்துறை இயக்குநர், முதன்மைச் செயலாளர் ஆகியோர் அலுவலகங்களில் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான வாராந்தர ஆய்வுக் கூட்டங்கள், ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், இத்திட்டத்தைக் கண்காணிக்கும் பொறியமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநில அளவில் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்புக் குழுவும், மாவட்ட மற்றும் தேசிய அளவில் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பற்றிய கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன” என்று பதிலளித்துள்ளார் மத்திய வேளாண்துறை அமைச்சர்.