சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியதையடுத்து, உண்மையைப் பேசுபவர்களுக்கு எதிராக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்திருக்கிறார்.
கடந்த சில தினங்களாகவே மஹாராஷ்டிராவில் நடந்துவரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், பணமோசடி வழக்கு தொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் கிளம்பின.

அந்த வரிசையில் சஞ்சய் ராவத்மீதான அமலாக்கத்துறையின் சம்மன் தொடர்பாக இன்று பா.ஜ.க-வைச் சாடிய மம்தா பானர்ஜி, ``மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் ஒருவருக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியிருப்பதைப் பார்த்தேன். பா.ஜ.க எதைச் செய்ய விரும்புகிறதோ அதைச் செய்கிறது. உண்மையைப் பேசுபவர்களுக்கு எதிராக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளைப் பா.ஜ.க பயன்படுத்துகிறது. ஏன் இப்படி சாதாரண மக்களை பா.ஜ.க துன்புறுத்துகிறது? இதுதான் ஜனநாயகத்தை நடத்துவதற்கான வழியா? இதனால் கடந்த சில ஆண்டுகளில்மட்டும் பல லட்சம் மக்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர். இதனை பாஸ்போர்ட், விசா அலுவலகங்களில் நீங்கள் சரிபார்க்கலாம்" எனக் கடுமையாக விமர்சித்தார்.
