மத்திய அரசு ஊழியர்களாக இருப்பவர்கள், உடல் உறுப்பு தானம் செய்யும் பட்சத்தில், அவர்களுக்கான சிறப்பு விடுப்பை 30 நாள்களில் இருந்து 42 நாள்களாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கொடையாளரிடம் இருந்து உடல் உறுப்பை அகற்றுவது மிகப் பெரிய அறுவை சிகிச்சை. மருத்துவமனையில் இருக்கும்போதும், மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின் இருக்கும் காலத்தில் இருந்தும் மீள்வதற்கு நேரம் தேவைப்படும்.

மற்றொரு மனிதனுக்கு உதவவும், மத்திய அரசு ஊழியர்களிடையே உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்தவும், இந்த உன்னதமான செயல்பாட்டைக் கருத்தில் கொண்டும், மத்திய அரசு ஊழியருக்கு அவர்களின் உறுப்பு தானம் செய்வதற்கு அதிகபட்சமாக 42 நள்ட்கள் சிறப்பு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மனித உறுப்பு மாற்றுச் சட்டம், 1994-ன் படி, பதிவு செய்யப்பட்ட அரசு மருத்துவப் பயிற்சியாளரால், உறுப்புதானமானது அங்கீகரிக்கப்படும்பட்சத்தில் அனைத்து வகையான கொடையாளர்களுக்கும் 42 நாள்கள் விடுப்பு வழங்கப்படும்.
அரசிடம் பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர்/மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அறுவை சிகிச்சைக்கு அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு முன்பே இந்த விடுப்பைப் பெறலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.