Published:Updated:

'தடுப்பூசி விவரங்களை மாநில அரசுகள் பொதுவெளியில் வெளியிடக் கூடாது’ - மத்திய அரசின் உத்தரவு ஏன்?!

தடுப்பூசி
தடுப்பூசி

தடுப்பூசிகள் குறித்த அனைத்துவிதமான தகவல்களையும் ஐ.நா-வின் சா்வதேச தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் ஈவின் (eVIN) Electronic Vaccine Intelligence Network என்ற மின்னணு அமைப்பின் வாயிலாக மத்திய அரசு பராமரித்துவருகிறது.

கொரோனா தடுப்பூசிகளின் இருப்பு, அவை பாதுகாக்கப்படும் முறை உள்ளிட்ட தடுப்பூசி குறித்த எந்தத் தகவலையும் மாநில மற்றும் யூனியன் அரசுகள் மத்திய அரசின் ஒப்புதலின்றி பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று மத்திய அரசு கடுமையான உத்தரவை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக நாளுக்கு நாள் கடுமையாகப் போராடிவருகிறது, இந்தியா. இதைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளும், முகக்கவசங்களும்தான் ஒரே தீர்வு என்பதை அறிந்து அதைக் கூடிய விரைவில் ஒட்டுமொத்த மக்களுக்கும் கொண்டு சேர்க்க அரசு துரிதமாகச் செயல்பட்டுவருகிறது. இந்தச் சூழலில் மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, மாநில அரசுகளின் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இது குறித்த அறிவிப்பை அனைத்து மாநில மற்றும் யூனியன் அரசுகளுக்குக் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் குழந்தைகள் நல ஆலோசகரான பிரதீப் ஹல்தாா், “இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக செலுத்தப்பட்டுவரும் தடுப்பூசிகளின் இருப்பு, அவற்றின் பராமரிப்பு முறை குறித்த எந்தவொரு தகவலையும் மாநில மற்றும் யூனியன் அரசுகள் பொதுவெளியில் வெளியிடக் கூடாது.

தடுப்பூசிகள் குறித்த அனைத்துவிதமான தகவல்களையும் ஐ.நா-வின் சா்வதேச தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் ஈவின் (eVIN) Electronic Vaccine Intelligence Network என்ற மின்னணு அமைப்பின் வாயிலாக மத்திய அரசு பராமரித்துவருகிறது. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசியின் இருப்பு மற்றும் தேவை குறித்த தகவல்களை சுகாதாரத்துறையினர் இதில் தினமும் பதிவிட்டுவருகின்றனர். இதன் அடிப்படையில், மத்திய அரசு அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

மத்திய அரசின் கண்காணிப்பிலிருந்து வரும் தகவல்கள் அனைத்தும் நுட்பமானவை என்பதால், நாட்டின் சுகாதார மேம்பாட்டுக்கு மட்டுமே இவை பயன்படுத்தப்பட வேண்டுமேயன்றி, இவை எந்தஅரசும் ஊடகங்களிடமோ, சமூக வலைதளங்களின் வாயிலாகவோ மத்திய அரசின் அனுமதியின்றி பொதுவெளியில் வெளியிடக் கூடாது” என்று தெரிவித்திருந்தார். தடுப்பூசி குறித்த குழப்பங்கள் விடைபெற்று தற்போது பெருவாரியான மக்கள் தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ள சமயத்தில், தடுப்பூசி குறித்த தெளிவான விளக்கமும், அதில் கடைப்பிடிக்கப்படும் வெளிப்படத்தன்மையுமே நம்பிக்கைக்கான ஆதாரமாக இருக்கும் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். வரும் நாள்களில் இந்த அறிவிப்பு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு