Published:Updated:

பதவிக்காலம் நீட்டிப்பு சட்டதிருத்தம் யாருக்காக... அமலாக்கத்துறை இயக்குநர் `மிஸ்ரா’வுக்காகவா?!

``தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை தலைமை பொறுப்பில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் புதிய சட்ட திருத்தத்தை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது '' என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளின் இயக்குநர்களின் பதவிக்காலத்தை 5 வருடங்கள் வரை நீட்டிக்க அனுமதி அளித்து மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. `திடீரென இதை ஏன் மத்திய அரசு செயல்படுத்தியது?’ என இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், ``எதிர்க்கட்சி தலைவர்கள் வீடுகளில் இதுவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய ரெய்டுகளுக்கு வெகுமதி தரும் வகையில் இந்த நீடிப்பு இருக்கிறது” என்று கருத்து சொல்லியுள்ளது. அடுத்த ஆண்டில் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. 2024-ம் வருடம் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த தேர்தல் ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்த மாதிரி நேரத்தில், பல்வேறு மாநிலங்களில் இருந்த அரசியல் எதிரிகளை பா.ஜ.க கட்சிக்கு இழுப்பதற்கு ஒரு கருவியாக அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறதாம். சட்டவிரோத பண பரிமாற்றம், கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள், ஃபெமா சட்டத்தின் கீழ் நடவடிக்கை என்கிற மூன்று வகையில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்துகிறார்கள். இவை மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது பா.ஜ.க அரசு என்று எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள்

அமலாக்கத்துறை அலுவலகம்
அமலாக்கத்துறை அலுவலகம்

டெல்லி அரசியல் வட்டாரத்தில் அதிர்வை கிளப்பியுள்ள இந்த விவகாரம் பற்றி காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் பேசியபோது,

``இந்திய அரசியலில் பரபரப்பை உண்டாக்கிய 15 விவகாரங்களை அமலாக்கத்துறைதான் விசாரித்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ள சாரதா சிட் பண்ட் விவகாரத்தில் சிக்கிய எதிர்க்கட்சி பிரமுகர்களில் முகுல் ராய் என்பவர் முக்கியமானவர். அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் பிரமுகருமான ஹிமாண்டா பிஸ்வா சர்மா என்பவரையும் அமலாக்கத்துறை விரட்டி பாஜக-யில் சேர்க்கவைத்தனர். கர்நாடகாவில் சுரங்க ஊழல் விவகாரங்களில் சிக்கிய ரெட்டி சகோதரர்கள் விவகாரம், எதிர்க்கட்சி தலைவர்கள் ராஜ் தாக்கரே, ஒம் பிரகாஷ் சவுதாலா, நவீன் ஜிண்டால், லல்லு பிரசாத் மற்றும் அவரின் மகன் தேஜஸ்வி, மகள் பாரதி ஆகியோர் உள்ளிட்ட பலரும் பல்வேறு விவகாரங்களில் அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கியுள்ளனர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தொடர்புடைய ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் திட்டத்தில் ஊழல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஃபரூக் தொடர்புடைய கிரிக்கெட் சங்க முறைகேடுகள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் தற்போதைய ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி தொடர்புடைய சட்டவிரோத பண பரிமாற்றல் விவகாரம், ராஜஸ்தான் மாநிலத்தில் சீனியர் காங்கிரஸ் தலைவர் அகமது படேலின் மருமகன் பண விவகாரம், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருமகன் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கி கடன் மோசடி விவகாரம், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் பிரமுகருமான ரானே என பலரின் வழக்குகள் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் காங்கிரஸ் பிரமுகருமான ரானே மீது சட்டவிரோத பண பரிமாற்றல் சட்டப்படி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க, அவர் தனிக்கட்சி ஒன்றை துவக்கினார். இந்தக்கட்சியை பிறகு பா.ஜ.க -வுடன் இணத்தார். இதன்பிறகு, அவர் மீது பதியப்பட்ட அமலாக்கத்துறை வழக்குகள் என்ன என்றே தெரியவில்லை.

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா - நரேந்திர மோடி

தி.மு.க தலைவர்கள் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் தொடர்புடைய 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தை அமலாக்கத்துறைதான் விசாரித்தது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஏர்செல் மேக்ஸிஸ் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் மீதான புகார்களை அமலாக்கத்துறைதான் விசாரித்தது. ஐ.என்.எக்ஸ் முறைகேடு புகாரில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா. சிதம்பரம், பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா தொடர்புடைய நிலபேரங்களில் நடந்த முறைகேடுகளையும் அமலாக்கத்துறைதான் விசாரித்தது. கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், உத்தரப்பிரதேச சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மீதான சுரங்கத்துறை முறைகேடுகளை விசாரித்ததும் அமலாக்கத்துறைதான். உத்திரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி முதல்வராக இருந்தபோது தலித் நினைவகங்கள் அமைத்ததில் ரூ. 1,400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்த விவகாரம் என்று பெரிய பட்டியலே போடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவற்றில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள் பாஜக பக்கம் தாவினால், அவர்கள் மீதான வழக்கு கிடப்பில் போடப்படும். இதற்குத்தான் அமலாக்கத்துறையையும், சி.பி.ஐ-யும் பாஜக பயன்படுத்தி வருகிறது. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை தலைமை பொறுப்பில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் புதிய சட்ட திருத்தத்தை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது '' என்றார்.

யாருக்காக இந்த புதிய சட்டதிருத்தம்?

சஞ்சய் குமார் மிஸ்ரா
சஞ்சய் குமார் மிஸ்ரா

மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தம் தற்போதைய அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்காத்தான் என்கிறார்கள். வருமான வரித்துறையின் முன்னாள் கமிஷனரும், ஐஆர்எஸ் அதிகாரியுமான சஞ்சய் குமார் மிஸ்ரா, கடந்த 2018 நவம்பரில் அமலாக்கத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவரின் பதவிக்காலம் கடந்த வருடம் முடிந்து இருக்க வேண்டும். கடந்த நவம்பரில் இவரின் பதவிக்காலம் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டது. மிஸ்ராவின் பதவிக் காலம் கடந்த முறை நீட்டிக்கப்பட்ட போதே அதை டெல்லி அரசியல் வட்டாரம், அதிகாரிகள் வட்டாரம், ஆகியவற்றில் பல்வேறு அதிருப்தி விமர்சனங்கள் எழுந்தன. இதையெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளவேயில்லை.

பதவி நீடிப்பில் இருந்த மிஸ்ராவின் பதவி காலம் அடுத்த சில நாட்களில், அதாவது, நவம்பர் 17-ம் தேதியோடு முடியப்போகிறது. ஏதாவது ஒரு வகையில், மிஸ்ராவை அதே பதவியில் மத்திய அரசு தொடர்ந்து வைத்திருக்க விரும்புவதாக உயர் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், நவம்பர் 14-ம் தேதியன்று அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற விசாரணை ஏஜென்ஸி இயக்குநர்களின் பதவிக்காலத்தை 5 வருடங்கள் வரை நீட்டிக்க அனுமதி அளித்து மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, மிஸ்ராவிற்காகவே இந்த சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சொல்லுகிறார்கள்.

சி.பி.ஐ. இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால்?

Subodh Kumar Jaiswal
Subodh Kumar Jaiswal
Wikipedia

சி.பி.ஐ. இயக்குனராக, மகாராஷ்டிராவைச் சேர்ந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி சுபோத் குமார் ஜெய்ஸ்வால் இருக்கிறார். கடந்த ஆண்டு மே 25-ம் தேதி நியமிக்கப்பட்டார் ஜெய்ஸ்வால். அன்று முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார். சி.பி.ஐ-யும் கூட மத்திய அரசு யாரை அரசியல்ரீதியாக டார்கெட் செய்கிறதோ, அவர்கள் மீதுதான் சி.பி.ஐ. நடவடிக்கை பாயும். மத்திய அரசின் உத்தரவை சட்டப்படி நிறைவேற்றிக் காட்டுவதில் கில்லாடியாம் ஜெய்ஸ்வால்.

இதேநேரத்தில், கடந்த காலங்களில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. தரப்பில் போடப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் என்ன ஆனது? விசாரணை கட்டத்தில் முடங்கியவை எத்தனை? கைவிடப்பட்டவை எத்தனை? என்றெல்லாம் சமூக ஆர்வலர்கள் ஆர்.டி.ஐ. மூலம் மத்திய அரசை குடைய ஆரம்பித்துள்ளனர்.

அதன் முடிவுகள் தெரியவரும்போது, பல திடுக்கிடும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் அம்பலத்துக்கு வருமென தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு