Published:Updated:

`ஒட்டுக்கேட்கிறார்கள்... போனில் சுதந்திரமாகப் பேச முடியவில்லை!' - அலறும் மேற்குவங்க முதல்வர்

“நான் பேசுவதை ஒட்டுக்கேட்கிறார்கள். தொலைபேசியிலோ, செல்போனிலோ, வாட்ஸ்அப்பிலோ சுதந்திரமாக என்னால் பேச முடியவில்லை” என்று அலறுகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மம்தா
மம்தா

தற்போது வாட்ஸ்அப் ஒட்டுக்கேட்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி உட்பட பலருடைய செல்போன்களும் ஒட்டுக்கேட்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இந்திய அரசியல் வட்டாரத்தை அதிரவைத்துள்ளது.

அமித் ஷாவைச் சந்திக்கக் காத்திருக்கும் மம்தா!- உறுமிய வங்கப்புலியின் மாற்றத்துக்குக் காரணம் என்ன?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``ஒருவரிடம் பேசுவதற்காக போனில் நான் அழைத்தால், அந்த உரையாடலை இன்னொருவர் கேட்கிறார். வாட்ஸ்அப் உட்பட எதுவும் பாதுகாப்பு இல்லை. மத்திய அரசு மற்றும் இரண்டு மாநில அரசுகளின் உத்தரவுபடி இது நடக்கிறது. அவற்றில் ஒன்று பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலம். மேற்கு வங்கத்தில் உள்ள அரசு உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் கண்காணிக்கப்படுகிறார்கள். இது மிகவும் தவறான செயல்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

உங்களால் மற்றவர்களின் தனிமையை அபரிக்க முடியாது. நம் அரசியல் சட்டத்திலேயே பத்திரிகை சுதந்திரம் உள்ளது. ஆனால், நாம் பேசுவது திருட்டுத்தனமாகப் பதிவுசெய்யப்படுவதன் காரணமாக, நம்மால் சுதந்திரமாகப் பேச முடியவில்லை. அப்படியென்றால், இது என்ன வகையான சுதந்திரம்?” என்று கேள்வி எழுப்பும் மம்தா பானர்ஜி, ``இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

மம்தா பானர்ஜியின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் கைலாஷ் விஜயவார்கியா, ``மத்திய அரசு மீது குற்றம் சொல்வதற்கு முன்பாக, தன் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை மேற்கு வங்க முதல்வர் பார்க்க வேண்டும். மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தொண்டர்கள் மீது பொய்வழக்குகள் போடப்படுகின்றன;

மம்தா
மம்தா

எதிர்க்கட்சித் தொண்டர்கள் நாள்தோறும் கொலை செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் உரையாடல்களைக் கண்காணிப்பதற்கு ஒரு சிஸ்டமே மேற்கு வங்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.