Published:Updated:

`குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்கத்துக்கு இடமில்லையா?' - கொதிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்

"மத்திய அரசு புறக்கணிப்பதால் எங்களுடைய மாநிலத்தின் பெருமை அழிந்துவிடாது."

குடியரசு தினவிழா
குடியரசு தினவிழா ( file pic )

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் பி.ஜே.பி-க்கும் இடையேயான மோதல் போக்கு இருந்துவருகிறது. இந்தநிலையில், நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் மேற்குவங்க மாநிலம் சார்பில் முன்மொழியப்பட்ட அணிவகுப்பு கோரிக்கைய மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதனால், இந்த இரு கட்சிகளிடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

ஒவ்வோர் ஆண்டும் நாட்டின் தலைநகர் புது டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், மாநிலங்களின் பாரம்பர்யத்தையும் சிறப்பையும் பறைசாற்றும் விதமாக அணிவகுப்பு காட்சிகள் இடம் பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில் மாநிலங்கள் மற்றும் துறைகளின் வகுப்பு காட்சிகள் இடம் பெறுகின்றன.

அதையொட்டி, அந்தந்த மாநிலங்கள் தங்களின் படைப்புகள் அடங்கிய முன்மொழிவு (proposals) அட்டவணைகளை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது. அப்படி அனுப்பட்ட முன்மொழிவுகளில் மேற்கு வங்க மாநிலத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

மத்திய அரசு
மத்திய அரசு

16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 22 திட்டங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குடியரசு தின விழா அணிவகுப்பு காட்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த அணிவகுப்புக்குக் காட்சிகளுக்கு 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அமைச்சகங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து 56 அணிவகுப்பு முன்மொழிவுகள் வந்திருந்தன. அவற்றில் மேற்கு வங்க தபேலா அணிவகுப்பும் இடம் பெற்றிருந்தது. இதில் மேற்கு வங்கத்தின் பாரம்பர்ய தபேலா அணிவகுப்பை மத்திய அரசு நிராகரித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

``மேற்கு வங்க மாநில அரசு அனுப்பிய முன்மொழிவு அட்டவணையை நிபுணர் குழு இரண்டு சுற்றுக் கூட்டங்களில் ஆராய்ந்தது. அக்கூட்டங்கள் முடிந்து, நடைபெற்ற கலந்துரையாடலில், அணிவகுப்பு முன்மொழிவை அடுத்தகட்டத்துக்கு மேற்கு வங்க அரசு எடுத்துச் செல்லவில்லை. இதையடுத்தே மேற்குவங்கத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி கோரிக்கையை நிராகரிப்பதாகவும்" மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குடியரசு தின விழா
குடியரசு தின விழா

இது குறித்துப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி சகதா ராய் (SaugataRoy), ``குடியுரிமைச் சட்டத் திருத்த மாசோதாவை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து பேசுவதால்தான், எங்களுடைய அணிவகுப்பு முன்மொழிவு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் கலாசாரம், பண்பாடு, கலை, இசை போன்றவை குறித்து இந்த நாடே அறியும். அதனால், மத்திய அரசு புறக்கணிப்பதால் எங்களுடைய மாநிலத்தின் பெருமை அழிந்துவிடாது. ஆனாலும், மத்திய அரசின் இந்தப் புறகணிப்பை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் குரல் கொடுக்கும்" என்றார். இதேபோல், மகாராஷ்டிரா மாநில அரசின் முன்மொழிவையும் மத்திய அரசு நிராகரித்திருக்கிறது.