Published:Updated:

`தலைவருக்கு சுப்ரியா... முதல்வர் பதவிக்கு அஜித் பவார்?' - என்ன நடக்கிறது தேசியவாத காங்கிரஸில்?

சரத் பவாருடன் அஜித் பவார்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சரத் பவார் விலகியிருப்பதால் அந்தப் பதவிக்கு யாரைக் கொண்டுவருவது என்பதில் கட்சித் தலைவர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.

Published:Updated:

`தலைவருக்கு சுப்ரியா... முதல்வர் பதவிக்கு அஜித் பவார்?' - என்ன நடக்கிறது தேசியவாத காங்கிரஸில்?

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சரத் பவார் விலகியிருப்பதால் அந்தப் பதவிக்கு யாரைக் கொண்டுவருவது என்பதில் கட்சித் தலைவர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.

சரத் பவாருடன் அஜித் பவார்

மகாராஷ்டிராவில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் சரத் பவார் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இரண்டு நாள்களுக்கு முன்பு அறிவித்திருக்கிறார். இதையடுத்து, முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். கட்சித் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் போராட்டமும் நடத்திவருகின்றனர். அதே சமயம் கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியும் தீவிரமடைந்திருக்கிறது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க சரத் பவார் கமிட்டி ஒன்றை நியமித்திருக்கிறார். அந்தக் கமிட்டி ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறது.

`தலைவருக்கு சுப்ரியா... முதல்வர் பதவிக்கு அஜித் பவார்?' - என்ன நடக்கிறது தேசியவாத காங்கிரஸில்?

சரத் பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்திருந்தாலும், அம்முடிவில் உறுதியாக இருக்கும்பட்சத்தில் மாற்றுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. எனவே, நேற்று முழுவதும் கட்சியின் மூத்த தலைவர்கள் கூடி இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையில் பெரும்பாலான தலைவர்கள் சுப்ரியா சுலே கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றனர். அதாவது கட்சியின் தேசியத் தலைவர் பதவியை சுப்ரியா சுலேவுக்குக் கொடுத்துவிட்டு, கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறும் பட்சத்தில் முதல்வர் பதவியை அஜித் பவாருக்கு கொடுப்பது குறித்து பரிசீலித்துவருகின்றனர்.

அதோடு கட்சியின் மகாராஷ்டிரா விவகாரங்களையும் அஜித் பவாரிடம் விட்டுவிடுவது குறித்து பரிசீலிக்கப்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் கட்சித் தலைவர் பதவிக்கு பிரபுல் பட்டேல் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், பிரபுல் பட்டேல் தனக்கு அந்தப் பதவி வேண்டாம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். நாளைக்குள் இந்த விவகாரத்தில் இறுதிமுடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையால் புனேயில் நடக்கவிருந்த வஜ்ரமுக் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மகாவிகாஸ் அகாடியின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் இந்தப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இந்தக் கூட்டம் வரும் 14-ம் தேதி புனேயில் நடப்பதாக இருந்தது. புனே தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் செல்வாக்குள்ள பகுதியாகும்.

ரோஹித் பவார், சரத் பவார், சுப்ரியே சுலே, அஜித் பவார்
ரோஹித் பவார், சரத் பவார், சுப்ரியே சுலே, அஜித் பவார்

தற்போது கடுமையான வெயில் இருப்பதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்திருக்கிறார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்தைத் தெரிந்துகொள்ளும் விதமாக சரத்பவார் நேற்று யஷ்வந்த் ராவ் சவான் ஆடிட்டோடியத்தில் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். ஆனால், தற்போது மாநிலத் தலைவராக இருக்கும் ஜெயந்த் பாட்டீல், பிரபுல் பட்டேல் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

கட்சித் தலைவர் பதவிக்கு ஜெயந்த் பாட்டீல் பெயரும் அடிபடுகிறது. ஆனால், சுப்ரியா சுலே பெயர் இந்தப் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு தற்போது மகாவிகாஸ் அகாடியில் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக உத்தவ் தாக்கரே இருக்கிறார். அஜித் பவாரை தேசியவாத காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் பட்சத்தில் உத்தவ் தாக்கரே எந்த மாதிரி எடுத்துக்கொள்வார் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியும் எங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று கோரியிருக்கிறது.

சரத் பவாருடன் அஜித் பவார்
சரத் பவாருடன் அஜித் பவார்

சரத் பவார் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியிருப்பதால், கட்சியின் மூத்த தலைவர் ஜிதேந்திர அவாத் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதோடு அவர் சார்ந்த தானே மாவட்ட கட்சி நிர்வாகிகளும் அடியோடு ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கின்றனர். அதோடு, தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சுப்ரியா சுலேயைத் தொடர்புகொண்டு சரத் பவார் முடிவைத் திரும்பப் பெறும்படி கேட்டுக்கொண்டனர் என்றும் சொல்லப்படுகிறது.