Published:Updated:

``நக்கலையும், நையாண்டிகளையும் அதிகம் சந்திக்கிறோம்!” - புலம்ப வைத்த `ஒன்றிணைவோம் வா' திட்டம்

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

`போன் செய்தால் போதும், தேவையான உதவிகளை வீடு தேடிவந்து தி.மு.க வினர் வழங்குகிறார்கள்' என இந்தத் திட்டத்துக்கு ஆரம்பத்தில் ஆஹா... ஓஹோவென பலத்த வரவேற்பு இருந்தது. ஆனால் நாள்கள் செல்லச் செல்ல ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களால், இப்போது புலம்ப ஆரம்பித்துள்ளார்கள் தி.மு.கவினர்.

தலைமையிலிருந்து திட்டங்களை வேகமாக அறிவித்துவிடுகிறார்கள். ஆனால் அதில் உள்ள சிக்கலை உணர்ந்துகொள்ளவில்லை” என்று புலம்ப ஆரம்பித்துள்ளார்கள் தி.மு.கவினர். அவர்கள் புலம்பலுக்குக் காரணம் `ஒன்றிணைவோம் வா' என்கிற பிரமாண்ட திட்டமே.

ஒன்றிணைவோம் வா
ஒன்றிணைவோம் வா

கொரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகரித்தபோது அரசு இயந்திரம் ஒருபுறம் இயங்கிய நிலையில், எதிர்க்கட்சியான தி.மு.கவும் தன் பங்குக்குப் பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்து. தி.மு.கவுக்குத் தேர்தல் வியூகங்களை வகுக்கப் பணியமர்த்தப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோரின் `ஐபேக்' நிறுவனம், அதற்காக பிரமாண்டமான ஒரு திட்டத்தை வடிவமைத்து. அந்தத் திட்டத்திற்கு `ஒன்றிணைவோம் வா’ என்று பெயரிடப்பட்டது.

ஒரு அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ, அதையெல்லாம் எதிர்க்கட்சியான தி.மு.க வும் செய்யும் வகையில் ஐந்து திட்டங்கள் வகுக்கப்பட்டன. `போன் செய்தால் போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வீடு தேடிவந்து தி.மு.க வினர் வழங்குகிறார்கள்' என இந்தத் திட்டத்துக்கு ஆரம்பத்தில் ஆஹா... ஓஹோவென பலத்த வரவேற்பும் இருந்தது. ஆனால் நாள்கள் செல்லச் செல்ல ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களால், இப்போது புலம்ப ஆரம்பித்துள்ளார்கள் தி.மு.கவினர்.

`ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மிகப்பெரிய பணியே குறிப்பிட்ட இலவசத் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு, தங்கள் விவரங்களைக் குறிப்பிட்டு, தங்களுக்குத் தேவையான உணவுப்பொருளையோ, மருத்துவப் பொருளையோ குறிப்பிட்டுச் சொன்னால், அதைத் தி.மு.க சார்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்குச் சென்று வழங்குவார்கள். ஆனால், அதில்தான் இப்போது குழப்பங்கள் அதிகரித்துள்ளன. இரண்டுநாளில் இரண்டுலட்சம் போன் கால்களும், ஐந்து நாள்களில் ஆறு லட்சம் போன்கால்களும் அந்த எண்ணுக்கு வந்தது என்று ஒருபுறம் தி.மு.க தலைமை சிலாகித்தாலும், அதில் உண்மையான பயனாளர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். பிற கால்கள் எல்லாம், இந்தத் திட்டத்தை வைத்து தி.மு.கவுக்கு எதிராகப் பிரசாரத்தை மேற்கொள்ள நினைத்த பிற கட்சியினரின் கால்கள்தான்.

உதவி செய்த தி.மு.க நிர்வாகி
உதவி செய்த தி.மு.க நிர்வாகி

அதே நேரம் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் போன் கால்கள் வந்துள்ளன. அதை மாவட்ட வாரியாகப் பிரித்து, அந்தந்த மாவட்ட நிர்வாகிகளிடம் வழங்கி அவர்களுக்குத் தேவையானதைச் செய்துகொடுக்கச் சொல்லியிருந்தனர். ஆனால், பல இடங்களில் ஏ.சி ரூமில் உட்கார்ந்துகொண்டு உணவு ஆர்டர் செய்வதுபோல வசதியானவர்கள் கூட அரிசிவேண்டும், பருப்புவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். தென்மாவட்டத்தில் ஒரு நிர்வாகிக்கு அளிக்கப்பட்ட பட்டியலை வைத்து சம்பந்தபட்ட நபருக்கு போன் செய்துள்ளார். அந்த நபரும் தனக்கு மருந்துவேண்டும் என்று சொல்ல, குறிப்பிட்ட மருந்துக்கடையின் பெயரைச் சொல்லி அங்கு போய் உங்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்கிக்கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையாகச் சொல்லியிருக்கிறார் அந்த நிர்வாகி.

இரண்டு நாள்கள் கழித்து அந்த மருந்துக்கடையிலிருந்து தி.மு.க நிர்வாகிக்கு பில் வந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ந்துபோய்விட்டார் அந்த நிர்வாகி. ஒரே நபர் ஏழாயிரம் ரூபாய்க்கு மருந்து வாங்கிச் சென்றுள்ளார். விசாரித்ததில், சம்பந்தப்பட்ட நபர் மூன்று மாதத்துக்குத் தேவையான மருந்தை ஒரேடியாக வாங்கிச் சென்றுள்ள விவரம் தெரியவந்துள்ளது. அந்த நல் உள்ளம் கொண்ட உடன் பிறப்பு, கைக்காசைத் தாரைவார்த்துவிட்டு தற்போது புலம்பிவருகிறார். அதேபோல் மதுரை மாவட்டத்தில் மளிகைப் பொருள்களைக் கொடுக்கச் சென்ற ஒரு ஒன்றிய நிர்வாகியிடம், அதைப் பெற்றுக்கொண்ட பயனாளர் குடும்பத்தினர், ``அரிசி, பருப்பு எல்லாம் இருக்கிறது பேஸ்ட், பிரஸ் சொல்லியிருந்தோமே வாங்கவில்லையா?'' என்று கேட்க, ``அதையெல்லாமா கேட்டீங்க'' என்று பதிலுக்குக் கேட்டுள்ளார்கள். அதற்கு அந்தக் குடும்பத்தினர், ``நீங்களா செலவு பண்றீங்க ஸ்டாலின்தான் பணம் கொடுத்து உங்களிடம் வாங்கித் தரச் சொல்றாரு” என நக்கலாகச் சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்ட அந்த உடன்பிறப்பு நொந்துவிட்டாராம்.

இதேபோல் தினமும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளிடமும் ஸ்டாலின் வீடியோ வழியாகப் பேசுகிறார். அப்படி பேசும்போது தென்மாவட்ட நகரச்செயலாளர் ஒருவர் ``அண்ணே எனக்கு வந்த ஐந்துபேர் கொண்ட லிஸ்ட்டில் மூன்று பேர் அ.தி.மு.க வினர். இன்னொரு நபர் ஐந்துகோடி மதிப்பிலான, ஐந்துமாடி வீட்டில் வசிக்கிறார். அவர் அரிசி இல்லை, பருப்பு இல்லைன்னு நக்கல் செய்வதுபோலவே கேட்கிறார். இதற்கு என்ன செய்ய” என அப்பாவியாகக் கேட்டுள்ளார்.

அதே நேரம் ஆரம்பத்தில் பல நிர்வாகிகள் தலைமை உத்தரவிட்டது போல உணவுப்பொருள்கள் வழங்குவது, நல்லோர்கூடத்தின் மூலம் உணவளிப்பது என்று தீவிரமாகச் செயல்பட்டார்கள். அதை தி.மு.க-வின் ஐ.டிவிங்குக்கு அனுப்பி ``கழகத்தலைவர் ஆணைக்கிணங்க இந்த இடத்தில் இந்தப் பொருள்கள் கொடுக்கப்பட்டன” என்று ஃபேஸ்புக்கில் போட்டு புளங்காங்கிதம் அடைந்தனர். ஆனால் நாள்கள் செல்லச் செல்ல, பணம் செலவழிக்கமுடியாமல் பல நிர்வாகிகள் திண்டாட ஆரம்பித்துள்ளனர். அதிலும், இந்தத் திட்டத்தைக் கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐபேக் நிறுவனம் ஆள்களை வேலைக்கு வைத்துள்ளது. அவர்களோ உண்மையில் யார் களத்தில் பணி செய்கிறார்களோ அவர்களை விட்டுவிட்டு, மாவட்டச் செயலாளர் கைகாட்டும் நபரை ஸ்டாலினுடன் வீடியோ காலில் பேசவைத்துவிடுகிறார்கள்” என்று நிலவரத்தை விவரிக்கிறார் உடன்பிறப்பு ஒருவர்.

ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது...
ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது...

அவர்களும் ``அண்ணா இன்று நான் ஐம்பது பேருக்குப் பொருள்கள் கொடுத்தேன். பத்துப் பேருக்கு உணவு வழங்கினேன்'' என்று சொல்கிறார்கள். உண்மையில் அவர்கள் ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் உதவி செய்திருப்பார்கள். அதே போல் பல இடங்களில் கீழ்மட்டத்தில் உள்ள நிர்வாகிகளின் தலையில் செலவுகளைக் கட்டிவிட்டு மாவட்ட நிர்வாகிகள் ஒதுங்கிக்கொண்டுள்ளார்கள். ஒன்பது ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருக்கிறது தி.மு.க. ஒன்றியச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை பணத்துக்குத் திண்டாடும் நிலையே உள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில மாவட்டச் செயலாளர்கள் தவிர, இந்த `ஒன்றிணைவோம் வா' திட்டத்துக்குச் செலவு செய்ய பல மாவட்டச் செயலாளர்கள் திணறுகிறார்கள். இதுதான் கள நிலவரம். இதை ஸ்டாலினிடம் சொல்லத் தயங்கியவர்கள் ``சிறப்பாகச் செய்கிறோம்... நன்றாகக் கொடுக்கிறோம்” என்று பேசிவிடுகிறார்கள். மறுபுறம், ``இந்தத் திட்டத்தின்படி உதவி செய்யப் போனால் பலரும் எங்களை எகத்தாளம் செய்கிறார்கள்'' என்று புலம்பியுள்ளார்கள் கீழ்மட்ட நிர்வாகிகள்.

ராதா ரவியை அடுத்து அண்ணா நகர் எம்.எல்.ஏ... கொரோனா அச்சத்தில் ஊட்டிக்கு படையெடுக்கும் பிரபலங்கள்!

இதுஒருபுறம் என்றால் அ.தி.மு.க, பா.ம.க, உள்ளிட்ட பிற கட்சியினரும் `ஒன்றிணைவோம் வா' எண்ணுக்கு போன் செய்து, ``எங்களுக்குப் பொருள்கள் வேண்டும்'' என்று முகவரி கொடுத்துவிடுகிறார்கள். தி.மு.க நிர்வாகிகள் அந்த வீட்டுக்குச் சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது, அது அ.தி.மு.க நிர்வாகி வீடு என்று. இப்படிப் பல சிக்கல்களையும் எதிர்கொண்டு திண்டாட்டத்தில் தவித்து வருகிறார்கள் உடன்பிறப்புகள்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

ஏகப்பட்ட கோரிக்கைகள் இந்தத் திட்டத்தில் வந்தபிறகு, ``இனியும் கைக்காசைப் போட்டுச் சமாளிக்க முடியாது'' என்று வாய்திறந்துள்ளார்கள் சில நிர்வாகிகள். அவர்கள் சொல்லிய பிறகே, ``சரி, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இந்த மனுக்களை மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள்” என்று சொல்லியுள்ளது தலைமை. இந்தத் திட்டத்தை வடிவமைத்த ஐபேக் நிறுவனம் அதன் பின்விளைவுகள் மற்றும் சாதக, பாதகங்களை அலசியதாகத் தெரியவில்லை என்று புலம்புகிறார்கள் தி.மு.கவினர். அவர்கள் திட்டங்கள் கொடுத்தாலும் ஸ்டாலினைச் சுற்றி எப்போதும் இருக்கும் அரசியல் அனுபவம் மிக்கவர்களாவது இதற்குத் தகுந்த ஆலோசனையை வழங்கியிருக்கலாம். அல்லது ஸ்டாலினாவது அவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம். ``இன்னும் எட்டு மாதத்தில் தேர்தல் வர உள்ள நிலையில் இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்து முழுமையாக எல்லோருக்கும் பொருள்களைக் கொடுக்கமுடியாமல் திண்டாடி சிக்கலை ஏற்படுத்தலாமா?" என்கிற கேள்வி உடன்பிறப்புகள் மத்தியில் இப்போது எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு