Published:Updated:

ஜெகன் மோகன் ரெட்டியை நெருக்கும் சந்திரபாபு நாயுடு... என்ன நடக்கிறது ஆந்திராவில்?!

சந்திரபாபு நாயுடு - ஜெகன் மோகன் ரெட்டி
சந்திரபாபு நாயுடு - ஜெகன் மோகன் ரெட்டி

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக, 11 பக்க அறிக்கை ஒன்றை அம்மாநில ஆளுநர், பிஸ்வபூசன் ஹரிசந்தனிடம் (Biswabhusan Harichandan) வழங்கியுள்ளார்.

ஒட்டுமொத்த தேசமும் கொரோனா எனும் கொடிய வைரஸுக்கு எதிராக யுத்தம் நிகழ்த்திக்கொண்டிருக்க, ஆந்திரப் பிரதேசத்தில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையிலான அரசியல் யுத்தம் உச்சத்தை எட்டியிருக்கிறது.

கடந்த 18-ம் தேதி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக, 11 பக்க அறிக்கை ஒன்றை அம்மாநில ஆளுநர், பிஸ்வபூசன் ஹரிசந்தனிடம் (Biswabhusan Harichandan) வழங்கினார். அதில், ஜெகன் மோகன் ரெட்டி அரசு, பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு எதிராகச் செயல்படுகிறது; மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது; ஊழல் பெருகியிருக்கிறது; எதிர்க்கட்சித் தலைவர்களின்மீது வேண்டுமென்றே ஊழல் புகார்களை சுமத்தி கைதுசெய்கிறது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றிருந்தன.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

கொரோனா நெருக்கடி காலத்திலும் சந்திரபாபு நாயுடு கொதித்தெழுந்ததற்கு, அவரது கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படுவதே முக்கியக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரைவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் செயல்பட்டுவந்த, அட்சன் நாயுடுவைக் (Atchannaidu) கைதுசெய்தது, சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் நிதித்துறை, உள்துறை அமைச்சர்களாகப் பணியாற்றிவந்தவர்களின் மீது வழக்குப்பதிவு செய்தது, நாயுடுவை கோபத்தின் உச்சத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே, ஜெகன் கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டார், மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வருவதை, சந்திரபாபு நாயுடுவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் இது போன்ற புகார்களை அளித்து வருகிறார் என்கிறார்கள், ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள்.

கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில், இப்படியொரு புகாரை கவர்னரிடம் அளிக்கவேண்டிய காரணம்தான் என்ன?

தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர், கோட்டிபட்டி ராமகிருஷ்ண பிரசாத்திடம் பேசினோம்,

''எங்கள் கட்சி உறுப்பினர்களை வேண்டுமென்றே பொய் வழக்குப் போட்டு கைது செய்துவருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. எங்கள் கட்சியின் முன்னணித் தலைவர், அட்சன் நாயுடுவின் வீட்டை, 300 போலீஸார் சுற்றி வளைத்து யாரும் உள்ளே நுழைய முடியாதபடிக்கு தடுத்துள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முந்தைய தினம்தான் அவருக்கு ஒரு அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல், கால அவகாசம்கூட கொடுக்காமல் கைதுசெய்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்த காயம்கூட ஆறாத நிலையில், அவர் ஊரான ஸ்ரீகாக்குளத்திலிருந்து விஜயவாடாவுக்கு கிட்டத்தட்ட 600 கி.மீட்டர், 20 மணி நேரம் சாலை வழியாகப் பயணம் செய்ய வைத்துள்ளனர். செல்லும் வழியில், அவரின் காயத்தில் ரத்தம் வழிந்தோடியிருகிறது. அதனால் தற்போது மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு அவரை சித்ரவதை செய்துள்ளனர்.

கோட்டிபட்டி ராமகிருஷ்ண பிரசாத்
கோட்டிபட்டி ராமகிருஷ்ண பிரசாத்

அட்சன் நாயுடு, தற்போது ஆந்திர சட்டசபையின் எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருக்கிறார், முன்னாள் அமைச்சரும் கூட. அவரின் சகோதரர் எரான் நாயுடு (Yerran Naidu), முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர். அவரின் மகன் ராம்மோகன் நாயுடு தற்போது, தெலுங்கு தேசம் கட்சியின் பாராளுமன்றத் தலைவராக இருக்கிறார். பாரம்பர்யமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை இப்படி இரக்கமின்றி கைதுசெய்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. முன்னாள் எம்.எல்.ஏ-வும், எங்கள் கட்சி நிர்வாகிகளான ஜெ.சி.பிரபாகர் ரெட்டி (J.C. Prabhakar Reddy) மற்றும் அவரது மகன் ஜே.சி.அஸ்மித் ரெட்டி (J.C. Asmith Reddy) ஆகிய இருவர் மீதும் பொய் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்துள்ளனர்.

அது மட்டுமல்ல, எங்கள் கட்சியைச் சேர்ந்த, கடந்த ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த ராமகிருஷ்ணடு, நிதி அமைச்சராக இருந்த சின்ன ராஜப்பா ஆகிய இருவரும் ஒரு திருமணத்தில் கலந்துகொண்டார்கள் என்கிற காரணத்துக்காகக் அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இரண்டாவது திருமணம் என்பதற்காக பெண் ஒருவர் புகார் செய்திருக்கிறார். அந்தத் திருமணத்தில் கலந்துகொண்டார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக இவர்களையும் கைது செய்திருக்கின்றனர். இது என்ன நியாயம், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இதுவரை எங்கள் கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் மீது வழக்கும், அதில் முன்று பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தும் இருக்கிறார்கள்.

ரவிச்சந்திர ரெட்டி
ரவிச்சந்திர ரெட்டி

சட்டசபையில், ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் எங்களின் முன்னாள் அமைச்சர்கள் அனைவரையும் கைதுசெய்துவருகின்றனர். எதிர்க்கட்சியினருக்கு உடல் நீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நெருக்கடி கொடுப்பதில் மட்டுமே ஜெகன் மோகன் ரெட்டியின் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. ஆந்திர மேல்சபையில், தெலுங்கு தேச உறுப்பினர்களை அச்சுறுத்தும் வேலையை ஜெகனின் அமைச்சர்கள் தொடர்ச்சியாகச் செய்துவருகிறார்கள். எங்களிடம் மட்டுமல்ல, வெளிநாடுகளில் வரும் முதலீட்டாளர்களிடமும் ஜெகன் இப்படித்தான் நடந்துகொள்கிறார். அதனால், ஆந்திராவில் யாரும் முதலீடு செய்ய விரும்புவதில்லை. ஆக மொத்தத்தில், ஜெகனின் இந்த அரசாங்கம் ஒரு பழிவாங்கும் அரசாங்கமாக மட்டுமே இருக்கிறது'' என்கிறார், ராமகிருஷ்ண பிரசாத்.

அரசின் கட்டுப்பாட்டில் தனியார் மருத்துவமனைகள்... ஜெகனின் அதிரடி தமிழகத்துக்கும் தேவையா?

தெலுங்கு தேசம் கட்சியின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் ரவிச்சந்திர ரெட்டியிடம் பேசினோம்...

''ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிலாளர் அமைச்சராக இருந்த அட்சன் நாயுடு மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார். தொழிலாளர் நல நிதியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். பொருளாதார ரீதியாக, பின் தங்கிய தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் இலவச சுகாதாரத் திட்டத்தில், இல்லாத ஒரு மெடிக்கல் கம்பெனியில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதாகக் கையெழுத்திட்டிருக்கிறார். அதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. அதை எப்படி நாங்கள் கடந்துசெல்ல முடியும். ஆடுத்ததாக, ஜெ.சி.பிரபாகர் ரெட்டி டிராவல்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். அதில் மொத்தமுள்ள 154 பேருந்துகளில், நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் ஸ்க்ராப்புக்கு போகவேண்டியவை. ஆனால், டாக்குமென்ட்களை போலியாகத் தயாரித்து, ஒரே எண்ணில் பல பேருந்துகளையும், இன்சூரன்ஸ் செய்யாமலேயே பல பேருந்துகளையும் இயக்கிவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரோஜா
ரோஜா

அவரின் ஒரு பேருந்து விபத்துக்குள்ளாகி 34 பேர் இறந்தும் போயுள்ளனர். அதை நாங்கள் எப்படிக் கடந்துபோக முடியும். இது போலத்தான் அனைவரின் மீதும் ஏதோவொரு காரணத்துக்காகத்தான் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். இதில் அரசியல் பழிவாங்கல் எங்கிருந்து வந்தது. அவர்களுக்குத் தேவையான தொலைக்காட்சிகளை வைத்து இப்படியொரு பொய் பிரசாரத்தைப் பரப்பிவருகின்றனர். நாங்கள் ஒருபோதும் இந்த நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கப்போவதில்லை'' என்கிறார் ரவிச்சந்திர ரெட்டி.

ஜெகன் மோகன் ரெட்டி, பட்டியல் இன மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டு குறித்து, நடிகையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ -வுமான ரோஜா பேசும்போது,

''தலித் மக்களுக்காக உரிய அங்கீகாரம் கொடுத்த கட்சி ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மட்டுமே. ஐந்து அமைச்சர்களை, துணை முதல்வர் பதவியை தலித் சமூக பிரதிநிதிகளுக்குக் கொடுத்திருக்கிறார், ஜெகன். சந்திரபாபு நாயுடு சொல்லும் குற்றச்சாட்டுகள் எல்லாம் தவறானவை" என்றார்.

கொரோனா நெருக்கடிகளையும் தாண்டி, சந்திரபாயு நாயுடு - ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் யுத்தமே ஆந்திர மக்களிடையே மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு