Published:Updated:

``கருணாநிதி போன்ற தலைவர்களுடன் வேலை செய்தவன் நான்"... கண்ணீர்விட்ட சந்திரபாபு நாயுடு - காரணம் என்ன?

ஆவேசமடைந்த சந்திரபாபு நாயுடு இனிமேல், ``முதல்வரானால் மட்டுமே சட்டசபைக்குள் காலடி எடுத்து வைப்பேன்" என சபதம் செய்து அவையை விட்டு வெளியேறியிருக்கிறார்

ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், கண்ணீர் விட்டு அழுத காட்சி ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ``இனி முதல்வரான பிறகு மட்டுமே சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைப்பேன்" எனவும் அவர் சபதமேற்று அவையிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

ஆந்திர சட்டப்பேரவையில் நேற்று வேளாண்துறை தொடர்பான விவாதம் நடைபெற்றிருக்கிறது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சித்திருக்கிறார். கூடுதலாக, ஜெகன் மோகன் சித்தப்பா ஒய்.எஸ்.விவேகானந்தனின் மரணம் குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதனால், ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியிருக்கின்றனர். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இருக்கும் போதே, அமைச்சர்கள் கோடலி நானி, அம்படி ராம்பாபு, சத்யநாராயணா ஆகியோர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி உள்ளிட்டோரை தரக் குறைவாகப் பேசியதாகத் தெரிகிறது. தொடர்ந்து, இரண்டு தரப்பினருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜெகன்மோகன் ரெட்டி - சந்திரபாபு நாயுடு
ஜெகன்மோகன் ரெட்டி - சந்திரபாபு நாயுடு

தொடர்ந்து சந்திரபாபு நாயுடு பேச முயன்றபோது, அவரின் மைக்கும் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் ஆவேசமடைந்த சந்திரபாபு நாயுடு இனிமேல், ``முதல்வரானால் மட்டுமே சட்டசபைக்குள் காலடி எடுத்து வைப்பேன்" என சபதம் செய்து அவையை விட்டு வெளியேறியிருக்கிறார். தொடர்ந்து, தன் கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சந்திரபாபு நாயுடு.

``முதல்வராகி விட்டுத் தான் மீண்டும் சட்டசபைக்குள் நுழைவேன்!" - கண்ணீருடன் சபதமிட்ட சந்திரபாபு நாயுடு

அப்போது பேசிய அவர், ``மகாபாரதத்தில் பாண்டவர்கள் முன்னிலையில் திரௌபதியைத் துன்புறுத்தியது போன்ற சம்பவம்தான் இன்று ஆந்திர சட்டமன்றத்தில் நடந்தேறியிருக்கிறது. ஆளும் கட்சியினர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக என்னைக் கடுமையாக விமர்சித்தபோது நான் தாங்கிக்கொண்டேன். ஆனால், அரசியலில் சம்பந்தமே இல்லாத என் மனைவியைக் குறிவைத்து விமர்சிக்கின்றனர். அவருடைய தந்தை என்.டி.ராமாராவ் முதல்வராக இருந்தபோதும் சரி, நான் முதல்வராக இருந்தபோதும் சரி, அவர் அரசியலில் விஷயங்களில் தலையிட்டதே இல்லை. என் குடும்பத்தினர் குறித்து விமர்சிப்பதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை'' என பேசிக்கொண்டிருக்கும்போதே, தேம்பித் தேம்பித் அழ ஆரம்பித்தார். தெலுங்கு தேச எம்.எல்.ஏக்களின் சமாதானத்துக்குப்பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தவர்,

கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு
கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு

'``அரசியலில் எவ்வளவு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தாலும் அதை ஆரோக்கியமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பேன். ஆனால், குடும்பத்தினரின் குணாதிசயங்களைப்பற்றிப் பேசும் அளவுக்கு அரசியல் சீரழிந்துவிடும் என நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. அடல் பிகாரி வாஜ்பாய், வி.பி.சிங், ஜோதிபாசு, கருணாநிதி, பிஜு பட்நாயக் போன்ற தேசிய தலைவர்களுடன் எல்லாம் நான் இணைந்து வேலை செய்திருக்கிறேன். என்.டி.ராமாராவ் தேசிய முன்னணியில் முக்கியத் தலைவராக இருந்தபோது, நான்தான் தேசியத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் வேலைகளைச் செய்தேன். மக்களுக்காகத்தான் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரின் அனைத்து அவமானங்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறேன். மொத்தமாக 175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், வெறும் 23 பேர்தான் தெலுங்குதேசம் எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். ஆனால், மக்களுக்கான பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம். ஆனால், ஆளும் கட்சியினரின் தனிபர் குணநலன்களின்மீதான தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன'' என வருத்தத்துடன் பேசி முடித்தார்.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், சந்திரபாபுவின் இந்தக் கருத்துக்களுக்கு உடனடியாக நடிகையும், நகரி எம்.எல்.ஏ-வுமான ரோஜாவிடம் இருந்து பதில் வந்தது. அவர் பேசும்போது, ``விதி யாரையும் விட்டு வைக்காது. அனைவரது கணக்கையும் சரியாக கணக்குப் பார்த்துத் தீர்த்துவிடும். அன்று 72 வயதில் என்.டி.ஆரை நீங்கள் கலங்கச் செய்தீர்கள். இன்று 71 வயதிலேயே அதை நீங்களும் அனுபவிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறீர்கள். அதனால் தான் சொல்வார்கள் ‘நாம் என்ன செய்கிறோமோ அது தான் நமக்கு திரும்பும் என்று’ தங்கள் மனைவி குறித்து பேசிவிட்டார்கள் என கலங்கும் நீங்கள்தான் அதிகாரத்தில் இருந்தபோது ‘ரோஜா, ப்ளூ ஃபிலிமில் நடிக்கிறார்’ என சொன்னீர்கள். எங்களுக்கு குடும்பம் இல்லையா, பிள்ளைகள் இல்லையா?

ரோஜா
ரோஜா

அதிகாரத்தில் இருந்த போது அனைவரையும் நீங்கள் விமர்சித்திருக்கிறீர்கள். விஜயா அம்மா, ஷர்மிளா அம்மா (ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் மற்றும் சகோதரி) குறித்து நீங்கள் பேசியதை யாரும் மறந்து விடவில்லை. இந்த நிலையில் உங்கள் போலியான நீலிக் கண்ணீருக்கு யாரும் ஆதங்கப்பட்ட மாட்டார்கள். எனக்குத் தெரிந்து இனி நீங்கள் உங்கள் வாழ்நாளில் சட்டசபைக்குத் திரும்ப வாய்ப்பில்லை. அதற்கு காரணம் உங்கள் சபதம் தான். பை, பை பாபு” எனப் பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஆந்திரமுதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்தச் சம்பவம் குறித்துப் பேசும்போது, ``சந்திரபாபு நாயுடு விரக்தியில் இருப்பது ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் தெரியும். காரணம், அவரது தொகுதிக்கு உட்பட்ட குப்பம் மாநகராட்சியிலே அவர் கட்சி தோல்வியைத் தழுவியிருக்கிறது. மக்கள் தொடர்ந்து அவரை நிராகரித்து வருகிறார்கள். அதனால் தான், என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் அவர் நடவடிக்கைகள் இருக்கின்றன. சட்டசபையில் அவர்தான் தேவையில்லாத விஷயங்கள் குறித்துப் பேசினார். அதற்கு எதிர்வினை வரும்போது இப்படி நடந்துகொள்கிறார். அவர் குடும்பத்தினர் குறித்து யாரும் எதுவும் பேசவில்லை. அவைக்குறிப்பில் அது தெளிவாக இருக்கிறது'' என விளக்கமளித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு