Published:Updated:

முதலில் ஜெகன்; தற்போது பா.ஜ.க! - அடுத்தடுத்த நெருக்கடியால் தவிக்கும் சந்திரபாபு நாயுடு

சத்யா கோபாலன்

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குக் குறி வைக்கும் பா.ஜ.க.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்றதிலிருந்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கொண்டுவந்த திட்டங்கள், ஊழல் போன்ற பல ஃபைல்களை தூசிதட்டத் தொடங்கியுள்ளார். ஜெகனின் செயலால் சற்று திணறி வருகிறார் சந்திரபாபு நாயுடு.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

இந்நிலையில் தற்போது ஜெகனுடன் பா.ஜ.க-வும் இணைந்துள்ளதால் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர், விஜயவாடா ஆகிய மாவட்டங்களில் நேற்று பா.ஜ.க புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட அம்மாநில பா.ஜ.க துணை பொறுப்பாளர் சுனில் தியோதர் (Sunil Deodhar), சந்திரபாபு நாயுடு விரைவில் சிறைக்குச் செல்வார் எனப் பேசியுள்ளார்.

விஜயவாடா நிகழ்ச்சியில் பேசிய சுனில், “ஆந்திராவில் முன்னதாக நடந்த தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சிக்காலத்தில் நிறைய ஊழல்கள் அரங்கேறியுள்ளன. ஊழல் தொடர்பான ஆவணங்களைத் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். மத்திய அரசு அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

மோடி- ஜெகன்மோகன் ரெட்டி
மோடி- ஜெகன்மோகன் ரெட்டி
Twitter/@narendramodi

ஆந்திர மாநிலத்துக்காக மத்திய அரசு அளித்த பணம் எதுவும் இதுவரை மக்களைச் சென்று சேரவில்லை. அவ்வளவு பணமும் எங்கே போனது? கண்டிப்பாகப் பணம் மீட்கப்பட வேண்டும். இந்தத் திருட்டை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். இது தொடர்பான கோப்புகள் சி.பி.ஐ-க்கும் அமலாக்கத்துறைக்கும் விரைவில் அனுப்பப்படவுள்ளது. ஆந்திராவை ஊழலற்ற மாநிலமாகத் திகழச் செய்வேன் என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். அதனால் அவர் தெலுங்கு தேசம் கட்சி செய்த ஊழலை வெளியில் கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து குண்டூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க செயலர் ராம் மாதவ், ``தெலங்கானாவைப்போல ஆந்திராவிலும் பா.ஜ.க பலப்படுத்தப்படும். பா.ஜ.க-வை பலப்படுத்தும் வேலைகளில் கட்சித் தொண்டர்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டும். 2024-ம் ஆண்டு ஆந்திராவில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை உறுதிமொழியாக ஏற்க வேண்டும்.

பா.ஜ.க
பா.ஜ.க
Twitter/@narendramodi

தெலுங்கு தேசம் கட்சி செய்த ஊழலால் சோர்ந்துபோய் மக்கள், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியதுபோலக் காங்கிரஸும் தெலுங்கு தேசம் கட்சியும் விரைவில் காலியாகும். அங்குள்ள தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் பா.ஜ.க-வில் இணைவார்கள்” எனப் பேசியுள்ளார்.