1984-ம் ஆண்டின் ஒருநாள்... ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குள் முதன்முறையாக மிரட்சியுடன் நுழைகிறார் இளம்பெண் ஒருவர். ‘‘மேனேஜர் துரை ரூம் எங்கிருக்கு’’ என அவர் கேட்க... அங்கிருந்த ஊழியர் வழி சொல்கிறார்.

துரையிடம் அந்தப் பெண், ‘‘கடலூர் கலெக்டர் சந்திரலேகா மேடம் சொல்லியிருக்காங்க... மேடத்தைப் பார்க்க வந்திருக்கேன்’’ என்று சொல்லி, தனது விசிட்டிங் கார்டை நீட்டினார். அதில் ‘வினோத் வீடியோ விஷன், புரோப்பரேட்டர் என்.சசிகலா, நம்பர் 33, பீமண்ண கார்டன் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18’ என எழுதப்பட்டிருந்தது. அவர் வேறு யாருமல்ல. இப்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவேதான்.

ஜெயலலிதா அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக்கப்பட்ட நேரம் அது. பொதுக்கூட்டங்களில் பேசுவதற்காக மாவட்டம் தோறும் டூர் போய்க்கொண்டிருந்தார் ஜெயலலிதா. கடலூர்தான் முதல் ஸ்பாட். அங்கே கலெக்டராக இருந்தவர் சந்திரலேகா ஐ.ஏ.எஸ். சசிகலாவின் கணவர் நடராசன் அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக சந்திரலேகாவின் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

சந்திரலேகாவின் உதவியால், சசிகலாவுக்கு வீடியோ கவரேஜ் ஆர்டர் கிடைக்கிறது. பிறகு அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் சசிகலா. அதன்பிறகு அவர் தோழியாகி, உடன்பிறவா சகோதரியான கதையெல்லாம் பல அத்தியாயங்களைக் கொண்டது.

1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் வேரூன்ற ஆரம்பித்தது. சுப்பிரமணியன் சுவாமிக்கு ஆபாச அர்ச்சனை, தராசு பத்திரிகை ஊழியர்கள் படுகொலை, வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகசுந்தரத்தின் மீதான கொலைவெறித் தாக்குதல், தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் தங்கிய ஹோட்டல் மீது கல்வீச்சு, ப.சிதம்பரம் வாகனம் அட்டாக் என 1991-1996 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரங்கேறிய அடாவடிகள் ஏராளம். இதில் ஒன்றுதான் சந்திரலேகா மீதான ஆசிட் வீச்சு.

1992 மே 19-ம் தேதி எழும்பூரில் காரில் அலுவலகம் சென்றுகொண்டிருந்த சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட, தமிழகம் தகித்தது. ஆசிட் வீச்சு சம்பவத்துக்கு சசிகலா குடும்பமும் காரணம் எனச் செய்திகள் எழுந்தன. அந்த வழக்கில் சுர்லா, மதுசூதனன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், குற்றம் நிரூபிக்கப்படவில்லை. உண்மைக் குற்றவாளிகள் யார் என்பது வெளியுலகத்துக்குத் தெரியாமலே போனது.

சந்திப்பு ஏன்?

சந்திரலேகாவால் ஆசிர்வதிக்கப்பட்ட சசிகலா... ஆசிட் அடிக்கப்பட்ட சந்திரலேகா... என இந்த பகை அரசியலின் பின்னணியை இப்போது ரீவைண்ட் செய்ய வைத்திருக்கிறது சமீபத்தில் பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த சசிகலா - சந்திரலேகா சந்திப்பு. பல ஆண்டுக்கால பகைக்குப் பிறகு, சசிகலாவைத் தேடிப்போய் சிறையில் பார்த்திருக்கிறார் ‘ஆசிட்’ சந்திரலேகா!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் அடிவாங்கி, அ.தி.மு.க பலவீனமாகி வருகிறது. தினகரன் ஒரு பக்கம் தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருக்கிறார். எடப்பாடியும் பன்னீரும் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதில் கவனமாக இருக்கிறார்கள். இப்படியான சூழலில்தான் சசிகலா - சந்திரலேகா சந்திப்பு நடந்திருக்கிறது.

‘‘எடப்பாடியையும் பன்னீரையும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கட்சியைப் பலப்படுத்துவதில் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள். ஆட்சிக்காலம் முடிந்தால் இருப்பவர்களும் சிதறிவிடுவார்கள். சசிகலா தலைமையில் அ.தி.முக-வை வலுப்பெறச் செய்வதுதான் தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு சாதகமாக இருக்கும். ரஜினி, அரசியலில் இறங்கினால், நேரடியாக பா.ஜ.க-வோடு கூட்டணி வைக்கமாட்டார். ஆனால், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க அவருக்குத் தயக்கம் இருக்காது. அதற்கு அ.தி.மு.க வலுவாக இருக்க வேண்டும். இதற்கான திட்டத்தை முன்னெடுத்து வந்தது பா.ஜ.க. அந்த அசைன்மென்ட் சுப்பிரமணியன் சுவாமிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் ‘பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க ஒன்றிணைய, சசிகலாவே தலைமையேற்க வேண்டும்’ என்று பகிரங்கமாகவே சொல்லிவந்தார் சுவாமி. அதன் தொடக்கம்தான் சசிகலா - சந்திரலேகா சந்திப்பு’’ எனச் சொன்னார் சந்திப்பை அறிந்த முக்கியமான சோர்ஸ் ஒருவர்.

‘‘சுவாமியே நேரடியாக சசிகலாவைச் சந்தித்தால் அரசியல் அதிர்வலை ஏற்படும் என்பதால், அது தவிர்க்கப்பட்டது. சசிகலாவைச் சந்தித்தபோது, ‘பா.ஜ.க தூதுவராக சுவாமியின் மூலம் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்’ எனச் சொல்லியிருக்கிறார் சந்திரலேகா. ‘உங்கள் பிரச்னைகள் அனைத்தும் சுவாமிக்குத் தெரியும். உங்களுக்காக பா.ஜ.க தலைமையிடம் அவர் பேசிவருகிறார்.

கருத்து வேறுபாடுகளை மறந்து ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் - சசிகலா மூவரும் இணைந்து செயல்பட வேண்டும். உங்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்யும்’ என ஒன்றேகால் மணி நேரச் சந்திப்பின்போது, நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் சந்திரலேகா. பா.ஜ.க-வின் தூதுவராக சந்திரலேகா கொடுத்த சிக்னலுக்கு, சசிகலா சரண்டராகிவிட்டார் என்று சொல்கிறார்கள்’’ என விவரித்தார் அந்த சோர்ஸ்.

இந்தச் சந்திப்பு பற்றி சந்திரலேகா மறுத்துவந்த நிலையில், பெங்களூருவில் நடந்தது என்ன என்பதை செப்டம்பர் 10-ம் தேதியன்று திருச்சியில் போட்டுடைத்தார் தினகரன். அதன் பிறகுதான் சசிகலாவுடனான சந்திப்பை ஒப்புக்கொண்டார் சந்திரலேகா.

பாதியில் திரும்பிய தினகரன்!

பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள தண்டனைக் கைதியை 15 நாள்களுக்கு ஒருமுறை அதிகபட்சம் ஆறு பேர் ஒரே விசிட்டில் சந்திக்கலாம். தண்டனைக் கைதியின் விருப்பத்தின் பேரில்தான் பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர். ஆகஸ்ட் 18-ம் தேதி சசிகலாவுக்கு 65-வது பிறந்தநாள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், விசிட்டர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. காலையில் சாமி கும்பிட்டுவிட்டு மெளனமாக இருந்துள்ளார் சசிகலா.

ஆகஸ்டு 21-ம் தேதி தினகரனும் அவரின் குடும்பத்தினரும் சசிகலாவைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், எதிர்பாராத திருப்பம் நடந்தது. ஆகஸ்டு 20-ம் தேதியன்று காலை திடீரென சசிகலாவைச் சந்தித்திருக்கிறார் சந்திரலேகா. இந்த விஷயம் தினகரனுக்குத் தெரியாமல் போக, அவரும் அவரின் குடும்பத்தினரும் காரில் பெங்களூரு நோக்கி வந்துகொண்டிருந்தனர். வழியில், தினகரனின் வக்கீல் இந்தத் தகவலை போனில் சொல்லியிருக்கிறார். ‘திடீரென வந்த சந்திரலேகா சின்னம்மாவைச் சந்தித்துவிட்டார். சிறைச்சாலை விதிமுறைகளின்படி இனி நீங்கள் 15 நாள்கள் கழித்து, செப்டம்பர் 5-ம் தேதிதான் பார்க்க முடியும்’ என்று சொன்னார். இதனால், பாதி வழியிலேயே தினகரன் சென்னைக்குத் திரும்பினார்.

இந்த விஷயத்தை சந்திரலேகாவும் தினகரனும் முதலில் வெளியே சொல்லவில்லை. இதற்கிடையே ‘தினகரனை சசிகலா சந்திக்க மறுத்துவிட்டார்’ என்று மீடியாவில் செய்திகள் கசிய, உடனே தன் வழக்கறிஞர்களை அழைத்து, (வழக்கறிஞர்கள் மூன்று நாட்களுக்கு ஒருமுறை சிறையில் சந்திக்க முடியும்) ‘நடந்ததை விரிவாக மீடியாவில் சொல்லச் சொல்லுங்கள். பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லுங்கள்’ என்றாராம் சசிகலா. அதன் பிறகுதான் தினகரன் மீடியாக்களிடம் சந்திப்பைத் தெளிவுபடுத்தினார்.

அ.ம.மு.க-வின் செய்தி தொடர்பாளர் புகழேந்தியிடம் பேசினோம். ‘‘ஜெயலலிதா அம்மாவின் ஆதரவாளர் சந்திரலேகா. சின்னம்மாவிடமும் நெருங்கிய நட்பு கொண்டவர். பழைய நட்பின் நிமித்தமே சந்திக்க வந்திருக்கிறார். சின்னம்மாவை விஜயசாந்தி சந்தித்ததைப்போல நட்பின் நிமித்தமாகவே சந்திரலேகாவும் சந்தித்துள்ளார். இதில் அரசியல் இருப்பதாக நான் கருதவில்லை’’ என்றார்.

சந்திரலேகா தரப்பினரிடம் கேட்டபோது, ‘‘சந்தித்தால் என்ன... சந்திக்காவிட்டால் என்ன... இந்த மாதிரியான தனிப்பட்ட விஷயங்களை ஏன் தமிழ் மீடியாக்கள் ஊதிப் பெரிதாக்குகின்றன?’’ என்று கோபப்பட்டனர்.

பொதுச்செயலாளர் பிளான்!

இது ஒருபுறம் இருக்க... நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியைத் தழுவிய நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாகச் சென்னையில் உளவுத்துறையிடம் ரிப்போர்ட் கேட்டது பா.ஜ.க. விரிவான அறிக்கை ஒன்றை அவர்கள் அளித்தார்கள். அதில், ‘இனி எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. ஊழல் விஷயத்தை மக்கள் பெரிதாகப் பேசுகிறார்கள். அ.தி.மு.க தொண்டர்களிடம் சசிகலாவுக்கு ஓரளவுக்குச் செல்வாக்கு இருக்கிறது. அவர் சில காலம் கட்சியை நடத்தியபோது கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாத்து எடப்பாடி ஆட்சியை உருவாக்கியதிலும், எம்.எல்.ஏ-க்களை ஒற்றுமையாக வைத்ததிலுமே சசிகலா சிறப்பாகச் செயல்பட்டார். அதனால், இப்போதையச் சூழலில் அ.தி.மு.க-வுக்கு அவர் தலைமையேற்றால் ஓரளவுக்குக் கட்சியைக் கரை சேர்க்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த ரிப்போர்ட்டுக்குப் பிறகுதான் பா.ஜ.க பாய்ச்சல் காட்ட ஆரம்பித்தது. சசிகலாவுக்கு இப்போது இருக்கிற ஒரே பிரச்னை, சிறையில் இருந்து மீள்வதுதான். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றினாலே, அவரை வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என நினைக்கிறது பா.ஜ.க. இதற்கான வேலைகளை மன்னார்குடியில் ஆரம்பித்திருக்கிறார்கள். ‘‘சசிகலாவைச் சிறையைவிட்டு வெளியே கொண்டுவரும் நோக்கில் பா.ஜ.க மேலிடத் தலைவர்களிடம் மன்னார்குடி பிரமுகர்கள் பேசியிருக்கிறார்கள். நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை வெளியே கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் அடைத்தது, வருமானவரித் துறை, அமலாக்கப் பிரிவு வழக்குகளைத் துரிதப்படுத்தியது, தினகரன்மீது லஞ்சம் கொடுத்த வழக்கு, ரெய்டு என பல்வேறு வகையில் பா.ஜ.க டார்ச்சர் செய்தது என்கிற கோபம் சசிகலாவுக்கு இருந்தாலும், மேலும் அதைப் பெரிதாக்க விரும்பவில்லை. அதனால்தான் பா.ஜ.க-வுடன் சமாதானமாகப் போகும் மூடில் இருக்கிறார் சசிகலா. இந்த உடன்படிக்கையின்படி சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருப்பார். ஆட்சிக்கு இப்போதுள்ள நிலை தொடரும் என முடிவு செய்திருக்கிறார்கள்.

‘சசிகலாவுக்கு பா.ஜ.க விடும் இந்த தூது, தமிழக அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம்’ என்று அரசியல் அரங்கில் பேச்சு உலா வருகிறது.

திருத்தம்

கடந்த 15.9.2019 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு, ‘தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பதே ஒரே வழி!’ என்கிற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார். அதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக குறிப்பிடும்போது, ‘நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா நியமனத்தால், நீதிபதி முருகேசன் ஓரங்கட்டப்பட்டார்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவரது தகவலில் தற்போது திருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது, ‘அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, முருகேசன் இருவரும் ஒரே நாளில் அடுத்தடுத்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதில் முந்தியவர் கலிபுல்லா. எனவே நீதிபதி முருகேசன் இளையவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தினகரன் என்ன ஆவார்?

பா.ஜ.க-வின் திட்டத்தில் ‘தினகரனை ஓரங்கட்டலாம்’ என்றுதான் முதலில் முடிவு எடுத்தார்களாம். ஆனால், ‘அதனை சசிகலா விரும்பமாட்டார். அதனால் திட்டத்துக்கு சசிகலாவின் ஒத்துழைப்பு கிடைக்காது’ என முடிவை மாற்றிவிட்டார்கள். ‘தினகரனுக்குக் கணிசமான ஆதரவு இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாக்குகளை வாங்கியிருக்கிறார். சசிகலா பொதுச்செயலாளர் பதவியேற்றதும் அவரின் நிழலாகத் தினகரன் மாறிவிடுவார்’ என்று பா.ஜ.க கணக்கு போடுகிறது.

ஆசிட் வீச்சின் பின்னணி

பெண்களைப் பழிவாங்க ஆசிட்டை கையில் எடுக்கும் கலாசாரத்துக்கு விதைபோட்ட சம்பவம் அது. தமிழக அரசின் டிட்கோவின் சேர்மனாக அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தார் சந்திரலேகா. டிட்கோ வசமிருந்த ஸ்பிக் நிறுவனத்தின் பங்குகளை மீண்டும் ஸ்பிக் நிறுவனத்துக்கே விற்க தமிழக அரசு முடிவு செய்தது. மூன்று மடங்கு அளவுக்குப் பங்குகளின் விலை உயர்ந்த நிலையில், குறைந்த விலைக்குப் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை சந்திரலேகா எதிர்த்தார். அதன் பிறகு, அவரை ஆவணக் காப்பகத் துறைக்கு மாற்றினார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் நடந்தது அந்த ஆசிட் வீச்சு.