அரசியல்
Published:Updated:

கே.சி.ஆருடன் களம் காணும் நடிகர் பிரகாஷ்ராஜ்... கர்நாடகாவில் தடம் பதிக்குமா இணைந்த கரங்கள்?

பிரகாஷ்ராஜ், ந்திரசேகர் ராவ்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரகாஷ்ராஜ், ந்திரசேகர் ராவ்

பா.ஜ.க-வைத் தொடர்ந்து எதிர்த்துவந்தாலும், பெருநகரங்களில் வசிக்கும் குறிப்பிட்ட சாராரின் வாக்குகளை மட்டுமே அவரால் கவர முடியும்.

எதிர்வரும் மே மாதம், சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது கர்நாடக மாநிலம். அங்கு மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசியக்கட்சிகள் தீவிரமாகத் தேர்தல் பணிகளைச் செய்துவருகின்றன. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், `தெலங்கானா ராஷ்டிர சமிதி’ என்ற தனது கட்சிப் பெயரைச் சமீபத்தில் `பாரத் ராஷ்டிர சமிதி’ (பி.ஆர்.எஸ்) என மாற்றினார். தேசியக் கட்சியாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சிப் பெயரை மாற்றிய அவர், அண்டை மாநிலமான கர்நாடகாவில் கால்பதிக்க முடிவுசெய்திருக்கிறார். அங்கு தனக்கு உறுதுணையாக நடிகர் பிரகாஷ்ராஜையும் களமிறக்கவிருப்பதாகத் தெரிகிறது.

கே.சி.ஆரின் திட்டம்!

கர்நாடகாவிலுள்ள `ஹைதராபாத் கர்நாடகா’ பகுதியில், தெலுங்கு பேசும் மக்கள் கணிசமாக இருக்கின்றனர். அதிலும் ராவ் சமூக வாக்குகள் அதிக அளவில் இருப்பதாகத் தெரிகிறது. அந்த மக்களின் வாக்குகளைக் குறிவைத்து அந்தப் பகுதியில் களம் காணவிருக்கிறது சந்திரசேகர் ராவின் (பி.ஆர்.எஸ்) கட்சி. அங்கு பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளை ஓரங்கட்டும் முனைப்பிலிருக்கிறார் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி. எனவே, கிட்டத்தட்ட அதே முடிவிலிருக்கும் சந்திரசேகர் ராவைத் தனது கூட்டணியில் இணைத்துக்கொள்ள விருக்கிறார்.

கே.சி.ஆருடன் களம் காணும் நடிகர் பிரகாஷ்ராஜ்... கர்நாடகாவில் தடம் பதிக்குமா இணைந்த கரங்கள்?

தெலங்கானாவைத் தாண்டி எந்த மாநிலத்திலும் தனக்குப் பெரும் ஆதரவில்லாததால், கர்நாடகாவைப் பூர்வீகமாகக்கொண்ட பிரகாஷ்ராஜுடன் கைகோக்க நினைத்திருக்கிறார் சந்திரசேகர் ராவ். பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்த்துவரும் பிரகாஷ்ராஜ், ஏற்கெனவே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்தியத் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், `விரைவில் பிரகாஷ்ராஜ் பி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்து செயல்பட வாய்ப்பிருக்கிறது. அவர் கர்நாடகாவில் பி.ஆர்.எஸ்-ஸுக்கு ஆதரவாகத் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவும், அங்கு ஒரு தொகுதியில் போட்டியிடவும் திட்டமிட்டுவருகிறார்’ என்ற பேச்சுகள் எழுந்திருக்கின்றன.

கே.சி.ஆர் - பிரகாஷ்ராஜ் நெருக்கம்!

இந்தப் பேச்சுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்தார் பிரகாஷ்ராஜ். அதில், `தொலைநோக்குப் பார்வைகொண்ட ஒரு தலைவர்... சிறந்த எதிர்காலத்துக்காக... நன்றி கே.சி.ஆர் காரு’ என்று பதிவிட்டு கே.சி.ஆரின் ஆட்சிக்காலத்தில் தெலங்கானா மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருப்பதாக அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கே.சி.ஆருடன் நெருக்கம் காட்டுவது ஒன்றும் புதிதல்ல. 2018-ம் ஆண்டு, பா.ஜ.க., காங்கிரஸுக்கு எதிராக மூன்றாவது அணி அமைக்கும் பணியில் சந்திரசேகர் ராவ் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயத்தில்தான் முதன்முதலாக கே.சி.ஆரைச் சந்தித்தார் பிரகாஷ்ராஜ். பின்னர், அடிக்கடி இருவரும் சந்தித்துப் பேசுவது வழக்கமானது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை கர்நாடகாவில் சந்திரசேகர் ராவ் சந்தித்தபோதும் பிரகாஷ்ராஜ் உடனிருந்தார். கடந்த ஆண்டு சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை கே.சி.ஆர் சந்தித்தபோதும் அவர் உடன் சென்றிருந்தார்.

பி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், ``கே.சி.ஆர் - பிரகாஷ்ராஜ் சந்திப்புகளின்போது அதிகம் விவாதிக்கப்படுவது தேசிய அரசியல் நிலவரங்கள்தான். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகாவிலுள்ள அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்புறவு வைத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். அது எங்கள் கட்சியை மற்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்ய உதவும்.

கர்நாடகா தேர்தலையொட்டி எங்கள் கட்சியில் இணையலாமா அல்லது வெளியிலிருந்து எங்களுக்கு ஆதரவு கொடுக்கலாமா என்பதை பிரகாஷ்ராஜ்தான் முடிவு செய்வார். ஆனால், நிச்சயம் எங்கள் பக்கம் நிற்பார்’’ என்கிறார்கள்.

தாக்கம் எப்படியிருக்கும்?

``பிரகாஷ்ராஜின் நிஜப் பெயர் பிரகாஷ் ராய். கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பன்ட் (Bunt) சமூகத்தைச் சேர்ந்தவர். கர்நாடகாவில் பிரகாஷ்ராஜுக்கு அரசியல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. ஆனால், நடிகராக மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றிருக்கிறார்.

கே.சி.ஆருடன் களம் காணும் நடிகர் பிரகாஷ்ராஜ்... கர்நாடகாவில் தடம் பதிக்குமா இணைந்த கரங்கள்?

பா.ஜ.க-வைத் தொடர்ந்து எதிர்த்துவந்தாலும், பெருநகரங்களில் வசிக்கும் குறிப்பிட்ட சாராரின் வாக்குகளை மட்டுமே அவரால் கவர முடியும். தற்போதைய நிலவரப்படி கர்நாடகாவில், பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே மட்டுமே போட்டி நிலவுகிறது. அனைத்துத் தேர்தல்களிலும் மூன்றாமிடம் பெறும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கே மிகக் குறைந்த இடங்களிலேயே வெற்றி கிடைக்கும். தொங்கு சட்டமன்றம் ஏற்படும்போது மட்டுமே ஹீரோவாக மாறியிருக்கிறது அந்தக் கட்சி. மற்றபடி, கர்நாடகாவில் எப்போதுமே மாநிலக் கட்சிகள் முக்கியத்துவம் பெற்றதில்லை.

அந்த வகையில், பிரகாஷ்ராஜுடன் கைகோத்து கே.சி.ஆர் களமிறங்கினாலும், பெரும் தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. அதேநேரம், கர்நாடகா முழுவதும் கே.சி.ஆரின் கர்நாடக முகமாக பிரகாஷ்ராஜ் மாறும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் பி.ஆர்.எஸ் பிரபலமடையும். எனவே, தேசியக்கட்சியாக பி.ஆர்.எஸ்-ஸை மாற்றத் துடிக்கும் கே.சி.ஆர்., பிரகாஷ்ராஜை முன்னிறுத்துவது அவருக்கு நல்ல மைலேஜை ஏற்படுத்தும். ’’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

நடிகர்களாக இருந்து பின்னர் அரசியல்வாதியாக மாறிய எவருக்குமே கர்நாடக அரசியல் களம் கைகொடுத்ததில்லை. இந்த விதியை பிரகாஷ்ராஜ் மாற்றி எழுதுவாரா என்பது அவரது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில்தான் தெரியவரும்!