Published:Updated:

`குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்; ஒரு வீடு!'- சொந்த ஊர் மக்களை ஆச்சர்யப்படுத்திய சந்திரசேகர ராவ்!

மலையரசு

தனது சொந்த ஊர் மக்களுக்கு அதிரடியாகப் பல சலுகைகளை அறிவித்துள்ளார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்!

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

இரண்டாவது முறையாக தெலங்கானா மாநில முதல்வராகப் பதவியேற்றுள்ள சந்திரசேகர ராவ் என்னும் கே.சி.ஆர், சமீபத்தில் தனது மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நீண்ட நாள்களுக்குப் பிறகு நேற்று தனது சொந்த ஊரான சிந்தமடகாவுக்குச் சென்றவர், அங்கு தனது பழைய நண்பர்கள், கிராம மக்களுடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர், அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் பேசியவர், தனது கிராம மேம்பாட்டுக்காக சில சலுகைகளை அறிவித்தார்.

சந்திரசேகர ராவை வாழ்த்தும் கிராமப் பெண்கள்
சந்திரசேகர ராவை வாழ்த்தும் கிராமப் பெண்கள்

அதில், ``பொருளாதார செழிப்பு மிகுந்த கிராமமாக நாட்டுக்கே நமது கிராமம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்'' எனக் கூறி, கிராமத்தில் 2000 குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதற்கான அரசாணையை விரைவில் வெளியிட உள்ளதாகக் கூறிய கே.சி.ஆர், `இந்த 10 லட்சத்தை வைத்து கிராம மக்கள், இளைஞர்கள் விவசாயத்தையும் தங்களுக்குப் பிடித்த தொழிலையும் தொடங்கலாம்' என்று அறிவித்தார்.

இதோடு மட்டும் நிற்கவில்லை. சிந்தமடகா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேலும் இரண்டு கிராமங்களுக்கும் சேர்த்து மொத்தம் 2000 வீடுகள், ஹாஸ்டல்கள், சாலைகள் ஆகியவை அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்படும் என்ற தித்திப்பான செய்தியையும் சேர்ந்துச் சொல்ல, ஊர் மக்கள் நெகிழ்ந்துபோயினர். இதனைக் கவனிக்க, தனது மருமகனும் எம்.எல்.ஏ-வுமான ஹரிஷ் ராவிடம் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார். இதற்காக மொத்த 400 கோடி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊர் மக்களுடன் பேசும் சந்திரசேகர ராவ்
ஊர் மக்களுடன் பேசும் சந்திரசேகர ராவ்

ஆனால், கே.சி.ஆரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ``தனது கிராமத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால், அவரது சொந்தப் பணத்தில் செய்யலாம். சிந்தமடகாவைவிட பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால், சுயநலமாகத் தனது சொந்த ஊர் மக்களை மட்டும் முன்னேற்ற இப்படிச் செய்கிறார்" என எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.