முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு.. அதிருப்தி தெரிவித்த டெல்லி! - நிலைபாட்டை மாற்றிய கேரள பா.ஜ.க

முதல்வர் வேட்பாளரை தேசியத் தலைமைதான் அறிவிக்கும். ஆனால் கேரளத்தில் பா.ஜ.க மாநில தலைவர் மெட்ரோமேன் ஸ்ரீதரனின் பெயரை முதல்வர் வேட்பாளர் என அறிவித்தது டெல்லி தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள பா.ஜ.க சார்பில் திருவல்லாவில் நடந்த 'விஜய யாத்ரா' என்ற பிரசார கூட்டத்தில் பேசிய கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன், ``ஏற்கெனவே கட்டிய பாலாரிவட்டம் பாலம் இடிந்து விழுந்தது. ஆனால் 18 மாதங்களில் செய்து முடிக்க வேண்டிய பாலாரிவட்டம் பாலத்தை, ஊழல் இல்லாமல் ஐந்து மாதங்களில் கட்டிமுடித்திருக்கிறார் மெட்ரோமேன் ஸ்ரீதரன். அதனால்தான் எங்கள் முதலமைச்சர் வேட்பாளராக மெட்ரோமேன் ஸ்ரீதரன் கேரளத்துக்கு வேண்டும் என்று அவரிடமும், கட்சியிடமும் வேண்டுகோள் வைத்தோம்.
மெட்ரோமேன் கேரள முதலமைச்சர் வேட்பாளர் ஆக வேண்டும் என்று நாங்கள் விரும்புவதற்குக் காரணம், ஊழல் இல்லாத முன்மாதிரியான வளர்ச்சி வேண்டும் என்பதற்காகத்தான். மெட்ரோமேன் ஸ்ரீதரன் தலைமையிலான என்.டி.ஏ-க்கு ஒரு வாய்ப்பு வழங்கினால் மத்திய மோடி அரசின் வளர்ச்சித் திட்டங்கள் பத்து மடங்காக கேரளத்துக்குக் கிடைக்கும்’’ எனப் பேசினார். இதை வழிமொழிந்த கேரளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முரளிதரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ``மெட்ரோமேன் ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பா.ஜ.க தேர்தலைச் சந்திக்கும்’’ எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து கேரள பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன் என்ற செய்தி வெளியானது. கேரள பா.ஜ.க-வின் இந்த அறிவிப்பு டெல்லி தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஐந்து மாநிலங்களில் நடக்கும் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க-வில் முதல்வர் வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை. அதிலும் முதல்வர் வேட்பாளரை தேசியத் தலைமைதான் அறிவிக்கும். ஆனால் கேரளத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர், மெட்ரோமேன் ஸ்ரீதரனின் பெயரை முதல்வர் வேட்பாளர் என அறிவித்தது டெல்லி தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து கேரள பா.ஜ.க நிர்வாகிகளை தேசியத் தலைமை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, மத்திய அமைச்சர் முரளிதரன், மெட்ரோமேன் குறித்த தனது ட்விட்டர் பதிவை நீக்கியிருக்கிறார். மேலும், ``மெட்ரோமேன் ஸ்ரீதரன் பா.ஜ.க முதல்வர் வேட்பாளராக வர வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியானது. இது குறித்து மீடியாக்களில் செய்திகளையும் பார்த்தேன். ஆனால், கட்சிச் செயலாளரிடம் கேட்டபோது முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு எதுவும் வரவில்லை’’ என்றார். ``கேரள சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சித் தலைமை இன்னும் முடிவு செய்யவில்லை" என தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். மேலும், ``முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரனை அறிவிக்கவில்லை’’ என கே.சுரேந்திரனும் கூறியிருக்கிறார்.

இன்று பத்தணம்திட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன், ``மெட்ரோமேன் ஸ்ரீதரனை முதலமைச்சர் வேட்பாளர் என்று நான் அறிவிக்கவில்லை. அவர் முதல்வர் ஆக வேண்டும் என்று மக்களும், கட்சியினரும் விரும்புகின்றனர் என்றுதான் கூறினேன். ஸ்ரீதரன் போன்ற தலைவர்களின் இருப்பைக் கட்சியும், கேரள மக்களும் விரும்புகின்றனர். ஊழலற்றவர் எனப் பெயரெடுத்தவர் மெட்ரோமேன் ஸ்ரீதரன். முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டியது தேசியத் தலைமைதான். அது அதற்கேற்ற சமயத்தில் அறிவிக்கப்படும்" என்றார். கேரள பா.ஜ.க முதல்வர் வேட்பாளராக மெட்ரோமேன் ஸ்ரீதரன் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அதை மாநிலத் தலைவர் மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.