தமிழ்நாட்டின் 16-வது சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல் முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன்படி, தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையவிருக்கிறது. இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை இரண்டு முறை சிறிய அளவில் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் என கோட்டை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

அதேபோல், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜ் வேறு துறைக்கு மாற்றப்படலாம் என்று ஒரு தரப்பினர் கூறினாலும், மற்றொரு தரப்பினர் அவரின் பதவி பறிக்கப்படலாம் என்றும் சொல்கிறார்களாம்.

மேலும், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் பதவி பறிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிதாக, மன்னார்குடி எம்.எல்.ஏ-வாக இருக்கும் டி.ஆர்.பி.ராஜா-வுக்கும், மானாமதுரை எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான தமிழரசிக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம். அதேபோல், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் சிவசங்கர் வேறு துறைக்கு மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது என்றும், அமைச்சர் காந்தி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. மேலும், செய்தித்துறை அமைச்சராக இருக்கும் மு.பெ.சாமிநாதன் வேறு துறைக்கு மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

கடந்த முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது, துறைகளிலுள்ள பிரிவுகள் சில அமைச்சர்களுக்குக் கூடுதல் பொறுப்புகளாக வழங்கப்பட்டன. அதேபோல, துறையின் ஒருங்கிணைப்புக்காக, பிரிவுகள் கூடுதல் பொறுப்பாக வழங்கப்படவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

அதே நேரத்தில், மற்றொரு தரப்பினரோ, அமைச்சரவையில் உடனடி மாற்றத்துக்கு தற்போது வாய்ப்பில்லை. முதல்வர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு வந்த பின்னர்தான் அமைச்சரவை மாற்றத்துக்கு வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.