Published:Updated:

மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்... அதிரடிக்குத் தயாராகும் அறிவாலயம்!

திமுக- அண்ணா அறிவாலயம்

தி.மு.க-வில் நடந்துவரும் உட்கட்சித் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மாவட்ட அமைப்புகளில் பல நிர்வாகிகள் தலை உருளும் என்ற தகவல் கிடைத்திருப்பதால், விசாரணையில் இறங்கினோம்.

மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்... அதிரடிக்குத் தயாராகும் அறிவாலயம்!

தி.மு.க-வில் நடந்துவரும் உட்கட்சித் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மாவட்ட அமைப்புகளில் பல நிர்வாகிகள் தலை உருளும் என்ற தகவல் கிடைத்திருப்பதால், விசாரணையில் இறங்கினோம்.

Published:Updated:
திமுக- அண்ணா அறிவாலயம்

தமிழகத்தில் ஊராட்சிகள் முதல் மாநகரங்கள் வரை கட்டமைப்புை வலுவாக இருக்கும் கட்சிகள் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மட்டும்தான். பல்வேறு பிரச்னைகள் இருந்தபோதும், எடப்பாடி-பன்னீர் ஒன்றாக இருந்த சமயத்தில் இரண்டே நாள்களில் உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்துவிட்டது அ.தி.மு.க. ஆனால், தி.மு.க உட்கட்சித் தேர்தலில் குறித்த நேரத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க முடியவில்லை. ‘அதிகமானப் புகார்களுக்கு உள்ளானவர்கள் தவிர்த்து, மற்ற எவரையும் மாற்ற வேண்டாம்’ என்று அறிவாலயம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு ஒன்றியம், நகரம், மாநகரம், வட்டம், பகுதி ஆகியவற்றில் மீறப்பட்டதாகப் புகார்கள் பறந்தன.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரிலிருந்து நிர்வாகிகள் வண்டிகட்டி அறிவாலயம் வந்து, புகார் மனுக்களைக் கொடுத்தனர். இந்தப் புகார்களை விசாரிப்பதற்காகவே ஆ.ராசா, தங்கம் தென்னரசு, என்.ஆர்.இளங்கோ, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அடங்கிய விசாரணைக் குழுவை அமைத்தது தி.மு.க தலைமை. 'புகாருக்குள்ளானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?' என்பதைத் தெரிவிக்காமலேயே, அத்தனைப் பொறுப்புகளுக்கும் நியமன அறிவிப்பு முரசொலியில் வெளிவந்தது தனிக்கதை. இந்தக் களேபரங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் கட்சியின் முப்பெரும் விழா முடிந்த கையோடு, வரும் செப்டம்பர் 16-ம் தேதி மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் தொடங்குகிறது. அதில்தான், பலரின் பதவிகளுக்கு கத்தி காத்திருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.மு.க சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``கட்சி அமைப்பு ரீதியாக இருக்கும் 77 மாவட்டங்களில், அதிகமாகப் புகாருக்குள்ளான மாவட்ட நிர்வாகிகளைக் களையெடுத்துவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க ஆலோசிக்கப்படுகிறது. இதற்கானப் பட்டியல் விசாரணைக் குழுவிடமிருந்தும், சில தனியார் அமைப்புகளிடமிருந்தும் வெவ்வேறு ரிப்போர்ட்டுகள் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தலைநகரான சென்னையில், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியன், மாதவரம் சுதர்சனம் ஆகியோர் மாவட்டச் செயலாளர்களாகவும், மயிலை வேலு, சிற்றரசு, இளைய அருணா ஆகியோர் மாவட்டப் பொறுப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். அமைச்சர் சேகர்பாபுவின் கட்டுப்பாட்டில் 6 சட்டமன்றத் தொகுதிகளும், மா.சு கட்டுப்பாட்டில் 5 தொகுதிகளும் உள்ளன. மற்ற மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு தலா 2 தொகுதிகள் மட்டுமே இருக்கின்றன. அமைச்சர்கள் இருவரின் மாவட்டங்களைப் பிரித்து துணை மேயர் மகேஷ், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் உள்ளிட்டோருக்குக் கொடுக்கத் தலைமை நினைத்தது. ஆனால், அமைச்சர்கள் இருவருமே ஒப்புக்கொள்ளாததால் அம்முடிவு கைவிடப்பட்டது.

சேகர்பாபு, மா.சுப்ரமணியன்
சேகர்பாபு, மா.சுப்ரமணியன்
மயிலை வேலு, சிற்றரசு
மயிலை வேலு, சிற்றரசு

மற்ற நால்வரில் அதிகப்படியானப் புகார்களுக்கு உள்ளானவர்கள் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதன்படி, சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் மீது ஏகப்பட்டப் புகார்கள் அறிவாலயத்துக்கு வரிசைகட்டியிருக்கின்றன. அவரை எடுத்துவிட்டு, புதியவரை நியமிக்க ஆலோசித்திருக்கிறது தலைமை. இந்த மாற்றத்திற்கு அச்சாரமாகத்தான் சுதர்சனத்துக்கு சி.எம்.டி.ஏ-வில் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இவர் தவிர, சென்னை தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மயிலை வேலு மீதும் புகார்கள் உள்ளன. சமீபத்தில் நடந்த வட்ட, பகுதிக் கழகத் தேர்தலில் தனக்குத் தோதானவர்களை நியமித்ததாக பிரச்னை வெடித்துக் கைகலப்பு வரை சென்றது. அதனால், வேலுவும் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, வடக்கு மாவட்டச் செயலாளராக சி.ஆர்.ராமச்சந்திரன், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக சேனாதிபதி, மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக கார்த்திக், மாநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக பையா கிருஷ்ணன், தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக டாக்டர் வரதராஜன் ஆகியோர் இருக்கிறார்கள். கோவையின் பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜிக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஏழாம் பொருத்தம்தான். அதனால், ஐந்தாக இருக்கும் மாவட்டத்தை மூன்றாகக் குறைக்க முடிவு செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி. கட்சித் தலைவர் ஸ்டாலினிடமும் இதுகுறித்து அவர் ஆலோசித்திருக்கிறார். மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கார்த்திக் தவிர, மீதமுள்ள நால்வரும் மாற்றப்பட்டு, வேறு இருவர் புதிதாக நியமிக்கப்பட இருக்கிறார்களாம்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ-வும், தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ-வும் இருந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவரைத் தூக்கிவிட்டு, இரண்டு மாவட்டங்களையும் இணைத்து ஒரே மாவட்டமாக மாற்ற தலைமை முடிவெடுத்திருக்கிறது. இருவரில் ஒருவரின் பதவிதான் தப்பும். புதுக்கோட்டையைப் பொறுத்தவரை, வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக கே.கே.செல்லப்பாண்டியனும், தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் ரகுபதியும் உள்ளனர். இவர்களில், செல்லப்பாண்டியன் மீது மாவட்ட நிர்வாகிகள் சிலர் புகாரளித்திருக்கிறார்கள். கட்சித் தலைமையும் மாற்றம் குறித்து விவாதித்து வருகிறது. செல்லபாண்டியன் இடத்தை பிடிக்க, எம்.எம்.அப்துல்லா எம்.பி., புதுக்கோட்டை எம்.எல்.ஏ டாக்டர் முத்துராஜா ஆகியோர் முட்டி மோதுகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக கல்யாணசுந்தரம் எம்.பி-யும், மத்திய மாவட்டப் பொறுப்பாளராக துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ-வும், தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக ஏனாதி பாலசுப்ரமணியமும் பணியாற்றுகிறார்கள். அவர்களில், கல்யாணசுந்தரமும், ஏனாதி பாலசுப்ரமணியமும் மாற்றப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள். இருவர் மீதும் அதிகமானப் புகார்கள் கட்சித் தலைமைக்கு வந்திருப்பது மட்டுமல்லாமல், கல்யாணசுந்தரம் மாநிலங்களவை எம்.பி-யாக இருப்பதும், 82 வயது ஆகிவிட்டதும் காரணங்களாக அடுக்கப்படுகிறது.

ஏனாதி பாலசுப்ரமணியன், கல்யாணசுந்தரம்
ஏனாதி பாலசுப்ரமணியன், கல்யாணசுந்தரம்

அவர்களுக்குப் பதில் தஞ்சை வடக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கமும், தஞ்சை தெற்கில் அண்ணாதுரை எம்.எல்.ஏ-வும் நியமிக்கப்படலாம். நாகை மாவட்டத்தில், வடக்கில் நிவேதா முருகனும், தெற்கில் கௌதமனும் மாவட்டப் பொறுப்பாளர்களாக உள்ளனர். அதில், நாகை வடக்கில் நிவேதா முருகனை இறக்கிவிட்டு, ஒன்றியப் பெருந்தலைவர் தேவேந்திரன் என்பவரை நியமிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க வந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு முக்கியத்துவமளிக்க தீர்மானித்திருக்கிறார் தலைவர் ஸ்டாலின். தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ-வும், மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக இன்பசேகரன் எம்.எல்.ஏ-வும் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் திரும்பப் பெறப்பட்டு, அந்தக் கட்சிப் பதவி பழனியப்பனுக்கு வழங்கப்படலாம்.

சிவபத்மநாபன்
சிவபத்மநாபன்

தென்காசி வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக செல்லதுரையும், தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக சிவபத்மநாபனும் இருக்கிறார்கள் . இதில் சிவபத்மநாபன் மீதுதான் ஏகப்பட்ட புகார்கள் அறிவாலயத்தில் குவிந்தது. கட்சி மேலிட குடும்பப் பிரமுகர் ஒருவரும் சிவபத்மநாபன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதனால், அவரின்பதவி பறிபோக வாய்ப்பிருக்கிறது.

தேனியில், வடக்குப் பகுதிக்கு தங்க.தமிழ்ச்செல்வனும், தெற்குக்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ-வும் மாவட்டப் பொறுப்பாளர்களாக இருக்கின்றனர். இவர்களில், கம்பம் ராமகிருஷ்ணன் மீது கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்களே புகார் மனுக்களை அறிவாலயத்தில் கொடுத்திருக்கிறார்கள். ‘சமீபத்தில் நடந்த உட்கட்சித் தேர்தலில் ‘லட்டு’க்களைப் பெற்றுக்கொண்டு பொறுப்புக் கொடுத்தது, ஒன்றியத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயகுமாரின் ஆதரவாளர் ஒருவர் மீது, ராமகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் ஆசிட் வீசிதாக வழக்குப் பதிவானது, ஆர்.எஸ்.எஸ்-ஸைச் சார்ந்த பெங்களூரு சாமியார்கள் இருவரின் பேச்சைக்கேட்டு ராமகிருஷ்ணன் செயல்பட்டுவருவதான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.

கம்பம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுகுமாரன் என்பவர் தனது லெட்டர் பேடிலேயே நான்கு பக்கப் புகாரைக் கொடுத்திருக்கிறார். ராமகிருஷ்ணனை நீக்கிவிட்டு, முன்னாள் மாவட்டச் செயலாளரான ஜெயகுமாரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள் தேனி உடன்பிறப்புகள்.

இதுமட்டுமல்லாமல், ராமநாதபுரம், திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட மேலும் சில மாவட்டங்களின் செயலாளர்களும் மாற்றப்படலாம்” என்றனர் விரிவாக.

விருதுநகரில் நடைபெறும் கட்சியின் முப்பெரும் விழாவிலேயே, பொதுக்குழுவுக்கான தேதியும் அறிவிக்கப்படலாம் என்கிறது அறிவாலய வட்டாரம். மாவட்டச் செயலாளர்கள் தேர்தலை நடத்தி முடித்துவிட்டு, பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகளுடன் மேடையேற தீர்மானித்துவிட்டார் ஸ்டாலின். எந்தத் தலை தப்புகிறது, எது விடுபடுகிறது என்பதெல்லாம் அவர் எடுக்கப்போகும் கடைசி நேர முடிவுகளில்தான் இருக்கிறது. அதுவரை அறிவாலயத்தில் பரபரப்புகளுக்குப் பஞ்சமிருக்காது.