Election bannerElection banner
Published:Updated:

கம்யூனிஸ்ட் கட்சியில் அதிரடி... டி.ராஜா, கன்ஹையா குமார்!

கன்ஹையா குமார்
கன்ஹையா குமார்

நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தச் சூழலில், அந்தக் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக 77 வயதான சுதாகர் ரெட்டி இருந்துவந்தார். உடல்நிலை காரணமாக, அந்தப் பொறுப்பிலிருந்து இப்போது அவர் விலகியிருக்கிறார். டெல்லியில் ஜூலை 19, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழுக் கூட்டத்தில், கட்சியின் புதிய பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வுசெய்யப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா, 1994 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளராகச் செயல்பட்டுவந்தார்.

டி.ராஜா
டி.ராஜா

மேலும், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரான கன்ஹையா குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அமைப்பான தேசிய நிர்வாகக் குழுவுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கன்ஹையா குமாருக்கு 32 வயதுதான் ஆகிறது. இவ்வளவு இளம் வயதுடையவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உயர் அமைப்புகளில் இடம்பெறுவது அரிதாக நிகழக்கூடிய ஒன்று.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கன்ஹையா குமார் , ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வந்தார். அவர்மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்து, நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆராய்ச்சிப் படிப்பை முடித்த இவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் தொகுதியில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார்.

சுதாகர் ரெட்டி
சுதாகர் ரெட்டி

இந்நிலையில், தற்போது கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய தேசிய நிர்வாகக் குழுவுக்கு அவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மேலும், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி இன இளைஞரான மணிஷ் குஞ்சம் மற்றும் ஒடிஷா மாநிலத்தில் மாணவர் பெருமன்றத்தின் தலைவராக இருந்த ராமகிருஷ்ண பாண்டா ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழுவுக்கு நிரந்தர அழைப்பாளர்களாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு உறுப்பினரான லெனினிடம் கேட்டோம். அவர், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைமுறை தலைவர்கள் எல்லோருமே மிகவும் இளவயதினர்தான். பொதுச்செயலாளராக எஸ்.ஏ.டாங்கே இருந்தபோது, அவருக்கு 35 வயதுக்குள்தான். பொதுச்செயலாளராக இருந்த ஜோஷிக்கும் கிட்டத்தட்ட இதே வயதுதான். கட்சியின் முதல் மாநாட்டில் பங்கேற்றவர்களில் வயது அதிகமானவர், சிங்காரவேலர்தான்.

லெனின்
லெனின்

ஒரு வலதுசாரி பாசிச அபாயம் இந்தியாவில் சூழ்ந்துள்ள வேளையில், அதை எதிர்கொள்வதற்கு இளம் தலைமுறையினரின் வருகை மிகமிக அவசியமாக இருக்கிறது. எனவே, மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிற, கருத்தியல் ரீதியாகவும் வலுவாக இருக்கிற இளைஞர்களைக் கட்சியின் முக்கியப் பொறுப்புகளுக்குக் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில்தான், தற்போதைய மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. கட்சியில் இருக்கக்கூடிய, கட்சிக் குடும்பங்களில் இருக்கக்கூடிய இளைஞர்களை அரசியல்படுத்துவதற்கான ஒரு சிறு முயற்சியின் ஒரு பகுதியாகவும் இதைப் பார்க்கலாம்.

இதையொட்டி மாநிலங்களிலும் இதுபோன்ற மாற்றங்கள் வர வேண்டும், மாவட்டங்களில் இதுபோன்ற மாற்றங்கள் வர வேண்டும் என்கிற சிந்தனையும், தேவையும் எழும். நாடு முழுவதும் இப்படியான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிற விஷயம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மட்டுமல்லாமல், இடதுசாரி மற்றும் முற்போக்குத் திசைவழியில் செல்லக்கூடிய இயக்கங்கள் அனைத்தும் இதுகுறித்து சிந்திக்க வேண்டிய காலமாக இது இருக்கிறது.

Vikatan

பாலின இடைவெளி இருக்கிறது. பெண்கள் அதிக அளவில் தலைமைக்கு வரவில்லை என்பதையும், வயது இடைவெளியையும் கட்சி உணர்கிறது. இந்த இரு இடைவெளிகளையும் நிரப்புவதற்கு என்னென்ன வழிகள் உண்டோ அவற்றை மேற்கொள்வதற்கான நடவடிக்கையைத்தான் எங்கள் கட்சி எடுத்துவருகிறது" என்றார்.

மற்ற இடதுசாரிக் கட்சிகளிலும் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாமா?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு