Published:Updated:

டெல்லி பயணத்துக்குப் பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தென்படும் மாற்றங்கள் - பின்னணி என்ன?!

ஆர்.என்.ரவி, ஸ்டாலின்

2023 புத்தாண்டு மாதம் தொடங்கியதிலிருந்தே பல்வேறு விதமான கருத்துகள் பேசி, சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு, பின்னர் யு-டர்ன் போட்டிருக்கிறார் ஆளுநர் ரவி.

டெல்லி பயணத்துக்குப் பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தென்படும் மாற்றங்கள் - பின்னணி என்ன?!

2023 புத்தாண்டு மாதம் தொடங்கியதிலிருந்தே பல்வேறு விதமான கருத்துகள் பேசி, சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு, பின்னர் யு-டர்ன் போட்டிருக்கிறார் ஆளுநர் ரவி.

Published:Updated:
ஆர்.என்.ரவி, ஸ்டாலின்

தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல் ஆளும் தி.மு.க அரசுக்கு எதிரான கருத்துகளையும், ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சனாதனக் கருத்துகளையும் செல்லுமிடங்களிலெல்லாம் பேசி சர்ச்சையைக் கிளப்பிவந்தார். அந்தவகையில், 2023 புத்தாண்டு மாதம் தொடங்கியதிலிருந்தே பல்வேறு விதமான கருத்துகள் பேசி, சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு, பின்னர் யு-டர்ன் போட்டிருக்கிறார் ஆளுநர் ரவி.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

`தமிழ்நாடா?’ `தமிழகமா?’ - சர்ச்சையைக் கிளப்பிய ஆளுநர் பேச்சு!

இந்த நிலையில், ஜனவரி 4-ம் தேதி கிண்டி ஆளுநர் மாளிகையில், காசி தமிழ்ச் சங்கம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டி சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ``தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம்!" எனக் குறிப்பிட்டு பேசினார். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் விவாதப்பொருளாக பற்றி எரிந்தது.

`தமிழ்நாடு அரசு, திராவிடம்... சட்டமன்றத்தில் பேசமறுத்த ஆளுநர்!'

அதைத் தொடர்ந்த ஜனவரி 9-ம் தேதி நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் பங்கேற்று தொடக்க உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அச்சிடப்பட்ட உரையில் இடம்பெற்றிருந்த `தமிழ்நாடு அரசு, திராவிட மாடல், அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், சமத்துவம், பெண்ணுரிமை, சமூகநீதி, மத நல்லிணக்கம்...’ எனப் பலப் பெயர்களையும், வார்த்தைகளையும், பத்திகளையும் படிக்காமல் முற்றிலுமாகப் புறக்கணித்ததோடு, தன்பங்குக்கு சில வார்த்தைகளையும் சேர்த்துப் படித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அப்போதே முதல்வர் மு.க.ஸ்டாலின், ``ஆளுநர் சேர்த்த வார்த்தைகள் அவைக்குறிப்பில் இடம் பெறாது! அரசு தயாரித்த ஆளுநர் உரையே இடம்பெறும்!" எனக் கூறி அதிரடியாகத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். இதனால் அப்செட்டான ஆளுநர் ஆர்.என்.ரவி அவை மரபுகளை மீறி சட்டமன்றத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி
சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

அதேபோல, ஜனவரி 10-ம் தேதி கிண்டி ஆளுநர் மாளிகையில் `எண்ணித்துணிக' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய குடிமைப் பணி நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் 80 பேருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாடினார். அப்போது அவர்களிடம், ``மாநில அரசா, மத்திய அரசா என்று வரும்போது சந்தேகமே இல்லாமல் மத்திய அரசின் பக்கமே நிற்க வேண்டும். இந்திய குடிமைப் பணிகள் அதிகாரிகள் மத்திய அரசின் மூலம், மத்திய அரசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே, அவர்கள் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்க வேண்டும்!" எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

ஆளுநர் மாளிகை பொங்கல் அழைப்பிதழ்
ஆளுநர் மாளிகை பொங்கல் அழைப்பிதழ்

`பொங்கல் அழைப்பிதழ் - தமிழ்நாடு இலட்சினை புறக்கணிப்பு!'

அதைத்தொடர்ந்து, ஜனவரி 12-ம் தேதி கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழா அழைப்பிதழில், `தமிழ்நாடு அரசு' எனப் பெயர் பொறித்திருக்கும் தமிழ்நாடு அரசின் இலட்சினைக்குப் பதிலாக இந்திய அரசின் இலட்சினையும், `தமிழ்நாடு ஆளுநர்' என்பதற்கு பதில், `தமிழக ஆளுநர்' என்றும் திருவள்ளுவர் ஆண்டு குறிப்பிடுவதும் புறக்கணிக்கப்பட்டு ஆளுநர் சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்பட்டது.

இதையடுத்து, ஜனவரி 12-ம் தேதி, ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளைக் கண்டித்து, முதல்வர் ஸ்டாலின் எழுதிய புகார் கடிதத்தை தி.மு.க எம்.பி-க்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா, வில்சன் உள்ளிட்டோர் அடங்கிய குழு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கியது. அந்தப் புகாரை குடியரசுத் தலைவர் முர்மு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார்.

டெல்லிக்குப் பறந்த ஆளுநர்!

அதன்பின்னர் ஜனவரி 13-ம் தேதி டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ரவி மறுநாள் ஜனவரி 14-ம் தேதி இரவு தமிழ்நாடு திரும்பினார். அதன் பின்னர் மீண்டும் ஜனவரி 18-ம் தேதி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தி.மு.க எம்.பி-க்கள் குழு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
தி.மு.க எம்.பி-க்கள் குழு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

டெல்லி பயணத்துக்குப்பிறகு நடந்த மாற்றங்கள்:

`நான் அந்தப் பொருளில் சொல்லவேயில்லை!'

ஜனவரி 18, ஆளுநர் ரவி டெல்லிக்குப் புறப்பட்டுச்சென்ற அதேநாளில் ஆளுநர் மாளிகையிலிருந்து `தமிழ்நாடு - தமிழகம்' விவகாரம் தொடர்பாக அவசர விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ``காசி, தமிழ்நாட்டுக்குமிடையே உள்ள தொடர்பைக் குறிக்க, `தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் `தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், `தமிழகம்' என்பதை `மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

ஆளுநர் விளக்கம்
ஆளுநர் விளக்கம்

எனது கண்ணோட்டத்தை `தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ அனுமானம் செய்துகொள்வதோ தவறானது, யதார்த்தத்துக்குப் புறம்பானது என்று தெரிவித்துக்கொள்கின்றேன். எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் `தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை' எனும் வாதங்கள், விவாதப்பொருளாகியிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்!" என ஆளுநர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

`நான் தமிழ் கற்கிறேன்; தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்!'

ஜனவரி 21-ம் தேதி கிண்டி ஆளுநர் மாளிகையில் பயிற்சி ஐ.ஏ.எஸ் பயிற்சி அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, கலந்துரையாடினார். எப்போதும் சனாதனம், சம்ஸ்கிருதம் எனப் பேசிவந்தவர், ``தமிழ்நாட்டுக்கு நான் ஆளுநராக வந்தபோது, இங்குள்ள மொழி, மக்கள் அடிப்படையில் வேறு என்பதை அறிந்தேன். இங்கு பணியாற்றுவது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. நான் அறியாத பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். நான் இப்போது தமிழ் மொழியைக் கற்றுவருகிறேன். தமிழ் செய்தித்தாளை என்னால் சுயமாகப் படிக்கமுடிகிறது. இது ஓர் அற்புதமான இடம்.

ஐ.ஏ.எஸ் பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி
ஐ.ஏ.எஸ் பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள். தமிழ் கலாசாரம் மிகவும் ஆழமானது, வளமானது. தமிழ் மொழி ஏழாயிரம் ஆண்டுகளைக் கடந்து பழைமையானது. தமிழ் இலக்கியம் மிகவும் பழைமையானது. ஆனால், நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பைப் போதுமான அளவு அறியாதது வருத்தமளிக்கிறது. தமிழ் கலாசாரம் மிகவும் ஆழமானது, வளமானது. தமிழ் மொழி ஏழாயிரம் ஆண்டுகளைக் கடந்து பழைமையானது. தமிழ் இலக்கியம் மிகவும் பழைமையானது. ஆனால், நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பைப் போதுமான அளவு அறியாதது வருத்தமளிக்கிறது!" என வார்த்தைக்கு வார்த்தை தமிழ், தமிழ்நாட்டு மக்கள் எனப் புகழ்ந்து பேசினார்.

மீண்டும் இடம்பெற்ற தமிழ்நாடு இலட்சினை
மீண்டும் இடம்பெற்ற தமிழ்நாடு இலட்சினை

`மீண்டும் இடம்பெற்ற தமிழ்நாடு இலட்சினை!'

இந்த நிலையில், வரும் 26-ம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பாக வரவேற்பு அழைப்பிதழ் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் சென்றமுறை இருந்த பொங்கல் அழைப்பிதழ்போல அல்லாமல், `தமிழ்நாடு இலட்சினை, திருவள்ளுவர் ஆண்டு மட்டுமில்லாமல் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, தமிழ்நாடு ஆளுநர்' என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`ஆளுநரின் திடீர் மாற்றத்துக்கான காரணம் என்ன?'

``ஆளுநரின் செயல்பாடுகள் தி.மு.க + கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்லாது தமிழ்நாடு பா.ஜ.க-வுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பெரும் தலைவலியாக மாறியதாகக் கூறப்படுகிறது. தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் புகார், பா.ஜ.க மாநிலத் தலைமையின் அதிருப்தி, பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தரப்பு கருத்துகள், பா.ஜ.க மூத்த தலைவர்களின் அழுத்தம் உள்ளிட்டக் காரணங்கள் டெல்லி பா.ஜ.க தலைமையின் தலையை உருட்ட, `தேர்தல் சூழ்நிலையில் ஆளுநரின் நடவடிக்கைகள் பா.ஜ.க-வுக்குக் கடுமையான பின்னடைவுகளை ஏற்படுத்தும்' என பா.ஜ.க மேலிடம் கருதியிருக்கிறது. அதைத்தொடர்ந்து டெல்லியில் வைத்து ஆளுநரிடம் பேசிய பா.ஜ.க மேலிடம், ``மொழி, இனம், மாநில உரிமை, சுயாட்சி தொடர்பான விஷயங்களைப் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தமிழ்நாடு போன்ற சென்சிட்டிவான மாநிலத்தில் இதையெல்லாம் கவனத்துடன் கையாள வேண்டும். இல்லையென்றால் தேர்தல் நேரத்தில் போராட்டங்கள் வெடித்து நமக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இந்தப் பிரச்னைக்கு இப்போதே முற்றுப்புள்ளி வையுங்கள். கொஞ்சகாலம் குறைத்துக் கொள்ளுங்கள் !" என அறிவுறுத்தியிருக்கிறது. அதன்பின்னரே ஆளுநரின் பேச்சுகள், நடவடிக்கைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

மேலும் அதற்கு வலுசேர்க்கும்படி, வி.சி.க தலைவரும் எம்.பி-யுமான திருமாவளவன், ``தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகளால், அவர் தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறார். குறிப்பாக, டெல்லி சென்றுவிட்டு திரும்பியது முதல் மாநில அரசுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்காமல் அமைதி காத்துவருகிறார். அவருக்குப் பதிலாக பொறுப்பு ஆளுநரை நியமிக்க இருப்பதாகக் கூடுதல் தகவலும் வருகிறது!" எனத் தெரிவித்திருக்கிறார்.