அரசியல்
அலசல்
Published:Updated:

கழுத்தை நெரிக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு... திகிலில் மாஜி அமைச்சர்கள்!

சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன்
பிரீமியம் ஸ்டோரி
News
சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படும். உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும்

தி.மு.க அரசுக்கு எதிராக ஆளுநரிடம் புகார் மனுவைக் கொடுக்க அ.தி.மு.க-வினர் ஊர்வலமாகச் சென்ற அதேநாளில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் இருவரின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான தனது பதவிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவில் பதிவான புகாரின்பேரில், புதுக்கோட்டை இலுப்பூரிலுள்ள விஜயபாஸ்கரின் வீடு மற்றும் சென்னை, திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், கோவை, செங்கல்பட்டு என மொத்தம் 56 இடங்களில் அதிரடி ரெய்டில் இறங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை.

அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடரப்பட்டாலும் அது தொடர்பான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை லஞ்ச ஒழிப்புத்துறை.

இந்த நிலையில், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில், கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குத் தொடர்புடைய 58 இடங்களில் தருமபுரி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அதன்படி, கே.பி.அன்பழகன், அவரின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் உள்ளிட்டோர்மீது வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 11.32 கோடி சொத்துச் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கிலும் ஒன்றரை ஆண்டுகளாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

“அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படும். உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும்” என்றெல்லாம் மேடைகளில் பேசிவந்த முதல்வர் ஸ்டாலின், அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது தி.மு.க கூட்டணிக் கட்சியினரிடமே அதிருப்தியைக் கிளப்பியது. நமது ஜூ.வி-யில் கூட, 14.5.2023- தேதியிட்ட இதழில் ‘முடிவுறா வழக்குகள் அலட்சிய காவல்துறை அக்கறை காட்டுமா அரசு?’ என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி இரு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்மீதும் ஒரே நேரத்தில் தனித்தனி நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன்
சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன்

இதன் பின்னணி குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உயர் வட்டாரங்களில் விசாரித்தோம். “கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் பிரமாணப் பத்திரத்தில், தனது சொத்து மதிப்பு ரூபாய் 6 கோடியே 41 லட்சம் என்று கணக்கு காட்டியிருந்தார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். ஆனால், 2021-ம் ஆண்டு அது 58.64 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய ரெய்டில், விஜயபாஸ்கர் மற்றும் அவரின் குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான ராசி புளூமெட்டல்ஸ், வி இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ராசி என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் பேரில் நிலங்கள், தொழில் முதலீடு, வாகனங்கள், இயந்திரங்கள், வங்கி இருப்பு என 35.79 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இது குறித்த 210 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகை, புதுக்கோட்டை குற்றவியல் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல, முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தனது பெயரிலும், தன் மனைவி, மகன்கள், மருமகள் மற்றும் உறவினர்கள் ரவிசங்கர், சரவணன், சரவணக்குமார், நெருங்கிய நண்பர்கள் மாணிக்கம், மல்லிகா, தனபால் ஆகியோரின் பெயர்களிலும் முறைகேடாகச் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார். மேலும், முறைகேடாகப் பெற்ற பணத்தை, தனக்குச் சொந்தமான சரஸ்வதி-பச்சியப்பன் கல்வி அறக்கட்டளைக்கு அனுப்பி, மொத்தம் ரூபாய் 45.2 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்திருக்கிறார். இந்த வழக்கில், 10,000 பக்கக் குற்றப்பத்திரிகை தருமபுரி குற்றவியல் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது” என்றவர்களிடம், ரெய்டு நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, அதுவும் தி.மு.க அரசின்மீது அ.தி.மு.க-வினர் ஆளுநரிடம் புகார் மனு அளித்த வேளையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது பற்றிக் கேட்டோம்.

“சொத்துக்குவிப்பு புகாருக்கு ஆளான இருவரும் முன்னாள் அமைச்சர்கள் என்பதாலும், தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ-க்களாக இருப்பதாலும் அவர்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஆளுநரிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. மேலும், ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தங்களின் அடிப்படையில், சட்டப்பேரவை தலைவரிடமும் இசைவு பெறவேண்டியிருந்தது. கைப்பற்றிய ஆதாரங்களை முறைப்படி ஆடிட் செய்ய கால அவகாசம் தேவைப்பட்டது” என்றனர் விரிவாக.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்பு கொண்டோம். தற்போது வேலையில் இருப்பதால், பின்னர் அழைப்பதாகத் தெரிவித்தார். ஆனால், இதழ் அச்சில் ஏறும் வரை நம்மை அழைக்கவில்லை. அதேபோல, கே.பி.அன்பழகனிடம் பேசினோம். “அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கையில் தி.மு.க அரசு இறங்கியிருக்கிறது. என்மீதான குற்றச்சாட்டைச் சட்டரீதியாக எதிர்கொண்டு, தவறு எதுவும் செய்யவில்லை என்று நிரூபிப்பேன்” என்றார் சுருக்கமாக.

இதே வேகத்தை லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து காட்டுமா?